Thursday, November 1, 2012

வெறும் காத்தோட தப்பிச்சோம்.. நிம்மதியில் சென்னை: மழை பெய்யாததற்கு என்ன காரணம்?





 சென்னை மக்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கிய நீலம் புயல் எந்தப் பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கரையைக் கடந்து போய் விட்டதால் மக்கள் பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால் ஏன் பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நீலம் புயல் ஒரு வழியாகக் கரையைக் கடந்து ஆந்திரா பக்கம் போய் விட்டது. தற்போது அங்கு மழை வெளுத்துக் கட்டி வருகிறது. நீலம் புயல் மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில் பல கேள்விகளையும் தூக்கிப் போட்டு விட்டுப் போயுள்ளது.

வழக்கமாகச் சென்னைக்கு அருகே புயல் சின்னம் உருவானால் சென்னை நகரிலும் வடக்குக் கடலோர மாவட்டங்களிலும் கன மழை பெய்யும். இந்த முறையும் அப்படித்தான் நல்ல மழையைப் பெற்றனர் மக்கள். ஆனால் புயல் சின்னம் புயலாக மாறி, சென்னையை நெருங்கி வர வர மழை அளவு படிப்படியாகக் குறைந்து போனது மக்களைக் குழப்பி விட்டது.

நேற்று முன்தினம் இரவு வரை சென்னையில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தது. ஆனால் நேற்று பகல் முழுவதும் பெரிய அளவில் மழை இல்லை. விட்டு விட்டு சாரல் மழைதான் காணப்பட்டது. புறநகர்ப் பகுதிகளில் சுத்தமாக மழை இல்லை என்று கூறும் அளவுக்குத்தான் நிலைமை இருந்தது. அதற்கு மாறாக மிகப் பலத்த காற்றை மக்கள் சந்தித்தனர்.

இதுவும் மக்களைக் குழப்பியது. இவ்வளவு காற்று அடிக்கிறது, புயல் வேறு சென்னைக்கு அருகே வந்து விட்டது. அப்படி இருந்தும் ஏன் மழை பெய்யவில்ல என்றுதான் மக்கள் பலரும் பேசிக் கொண்டனர். ஒருபக்கம் வெறும் காற்றோடு போனதே என்று சந்தோஷப்பட்டாலும் கூட, மறுபக்கம் ஏன் மழை பெய்யவில்லை என்ற கேள்வியும் மக்களை அலைக்கழித்தது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் எதையும் தரவில்லை. இப்படித்தான் கடலூர் மாவட்டத்தை தானே புயல் வெறும் பேய்க்காற்றோடு பாடாய்ப்படுத்தி சீரழித்தது. அதேபோல நேற்றும் நடந்து விடுமோ என்று சென்னை மக்கள் பயந்து போயிருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எந்தப் பேரழிவையும் தலைநகரம் நேற்று சந்திக்கவில்லை.

இருப்பினும் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று, கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். வடசென்னையில் நேற்று பலத்த சூறைகாற்றுடன் கன மழை பெய்தது. கடல் பகுதியில் வேகமாக வீசிய காற்றால் கடல் கொந்தளிப்பாகி ராட்சத அலைகள் தோன்றின. அவை கடல் அரிப்புக்காகப் போடப்பட்ட தடுப்புப் பாறைகளைத் தாண்டிக் கடலோக்ர குடிசைகள் மீது விழுந்தன.. இதனால், திருவொற்றியூர், எண்ணூர்ப்  பகுதியில் வசிக்கும் மீனவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

எர்ணாவூர் குப்பம், இந்திராகாந்தி குப்பம், சின்னக்குப்பம் ஆகிய பகுதிகளில் கடலோரத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலை, படகுகள், கட்டுமரம் ஆகியவற்றை கடல்அலை இழுத்து சென்றது. உடனே மீனவர்கள் கிரேன் மூலம் அவற்றை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர்.

நேற்று காலை எண்ணூர் சின்னகுப்பம் பகுதியில் கடல்நீர் மக்கள் வசிக்கும் தெருக்களில் ஓடியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் பலத்த காற்று வீசியது.

பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தும், வேரோடும் சாய்ந்தன. தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மாடம்பாக்கம், செம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி, தனியார் வர்த்தக விளம்பர பலகைகள் காற்றில் உடைந்து விழுந்தன.

கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம், கடப்பாக்கத்தில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 6 அடி உயரத்துக்குக் கடல் சீற்றம் காணப்பட்டதால் இசிஆர் சென்னை, புதுச்சேரி போக்குவரத்து, தடைபட்டது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

புதுப்பட்டினம் பகுதியில் கடலில் அலைகள் சீற்றமாக இருந்தது. 6 அடி உயரத்துக்கு மேல் அலைகள் எழும்பி கடற்கரையில் உள்ள 3 தெருக்களில் உள்ள மீனவர் வீடுகளுக்குள் புகுந்தது. அந்த தெருக்கள் வெள்ளக் காடாக காட்சி அளித்தது. மீனவ மக்கள் பயத்தில் புயல் பாதுகாப்பு மையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

உய்யாலிகுப்பம், ஆழிக்குப்பம், கடலூர் பெரிய குப்பம், சின்ன குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதியிலும் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. கடற்கரையில் இருந்த கட்டுமரங்கள், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன. வலைகளும் சேதம் அடைந்தன. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

சென்னையில் நீலம் புயலின் தாக்குதலால் பல்வேறு இடங்களில் சாலைகள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

நன்றி :- ஒன் இந்தியா, 01-11-2012


0 comments:

Post a Comment

Kindly post a comment.