Saturday, November 10, 2012

வெளிநாட்டு வங்கிகளில் ரூ. 6000 கோடி கறுப்புப் பணம் !

"ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாட்டு வங்கிகளில் ரூ. 6000 கோடி கறுப்புப் பணத்தை 700 இந்தியர்கள் போட்டு வைத்துள்ளதாக சமூக ஆர்வலர் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்பானி சகோதரர்கள், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல், காங்கிரஸ் எம்.பி. அனு டாண்டன் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்க எச்.எஸ்.பி.சி. வங்கி உதவியுள்ளதாகத் தெரியவந்துள்ளதால் அந்த வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஆனால் அம்பானி சகோதரர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ஜெனீவாவில் உள்ள எச்,எஸ்.பி.சி. வங்கியில் தங்களுக்கு வங்கிக் கணக்கு ஏதும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல தனக்கு அங்கு வங்கிக் கணக்கு ஏதும் இல்லை என்று ஜெட்ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயலும் மறுத்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர் என்ற முறையில் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்க எனக்கு உரிமையுள்ளது. ஆனால், குறிப்பிட்ட அந்த வங்கியில் எனக்குக் கணக்கு ஏதும் இல்லை என்றார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், பாஜக அகில இந்தியத் தலைவர் நிதின் கட்கரி ஆகியோர் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது அவர், வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கியுள்ளதாக தொழிலதிபர்கள் சிலரது பெயரையும் அவர்கள் வைத்துள்ள கறுப்புப் பண விவரம் அடங்கிய பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாத் தில்லியில் செய்தியாளர்களிடம் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கூறியது: ""சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங் சில வாரங்களுக்கு முன்பு போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசினார். அப்போது "வெளிநாடுகளில் சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பல இந்தியர்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். அதில் பெரும்பாலானவை ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளன' என அவர் கூறியிருந்தார்.

இதேபோல் 2011-ம் ஆண்டு ஜூனில் மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தது. அப்போது வெளிநாடுகளில் சுமார் 700 இந்தியர்கள் தங்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கியுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.

அந்தப் பட்டியல் கிடைத்தவுடன் 2011-ம் ஆண்டு ஜூலையில் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதில் தில்லியைச் சேர்ந்த பர்மீந்தர் சிங் கல்ரா, பிரவீண் சாஹ்னி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விக்ரம் திரானி ஆகிய மூன்று பேர் மட்டும் தங்களுக்கு வெளிநாடுகளில் கறுப்புப் பணம் இருப்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தனர். அவற்றின் விவரத்தை "ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்.

கறுப்புப் பணத்தைப் பதுக்கியுள்ள இந்தியர்கள் சிலரது பெயர் எங்களுக்கு மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற உளவுத் துறையினர் சிலர் மூலம் கிடைத்துள்ளது. அதன்படி, 2006-ம் ஆண்டு நிலவரப்படி ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை வைத்துள்ளவர்கள் விவரங்கள் கிடைத்துள்ளன.

ஸ்விஸ் வங்கியில் குறைந்த அளவில் கறுப்புப் பணத்தை வைத்தவர்களை மட்டும் குறிவைத்து வருமான வரித்துறை ஏன் சோதனை நடத்தியது? சுமார் ரூ.6000 கோடி கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

வருமான வரிச் சோதனை நடைபெறும்போது அனில் அம்பானி அப்போதைய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க உரிய வரியை செலுத்துவதாக அவர் கூறியிருக்கிறார்.

அதன்பிறகே வெளிநாட்டு வங்கியில் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வைப்புக் கணக்கு விவரங்களை வெளியிடும் திட்டத்தைக் கொண்டுவர அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முயன்றார். ஆனால், அத்திட்டத்தை அவர் அமல்படுத்தவில்லை.

ஹவாலா மோசடியில் எச்எஸ்பிசி: இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்க எச்எஸ்பிசி வங்கியை சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பு கொண்டால் போதும். அவர்கள் வீட்டுக்கே வந்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து துபை அல்லது ஜெனீவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியின் கிளையில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்ய உதவுவர்.

ஜெனீவாவில் உள்ள யாரோ ஒருவரது பெயரும் செல்போன் எண்ணும் கணக்குத் தொடங்கும் வாடிக்கையாளருக்கு எச்எஸ்பிசி கொடுக்கும். கறுப்புப் பணத்தை முதலீடு செய்ய வங்கி கொடுத்த செல்போன் எண்ணில் உள்ள நபரை வாடிக்கையாளர் தொடர்பு கொள்ள வேண்டும். உடனே எச்எஸ்பிசி பிரதிநிதி இந்தியாவில் அந்த வாடிக்கையாளரின் வீட்டுக்கு வருவார். எவ்வளவு இந்திய ரூபாய் மதிப்பு கொடுக்கப்படுகிறதோ அதற்கு இணையான டாலர் மதிப்பு வெளிநாட்டு வங்கியில் வரவு வைக்கப்படும்.

பணம் தேவை என்றாலும் இதே நடைமுறையைப் பின்பற்றினால் போதும். எச்எஸ்பிசி வங்கியின் பிரதிநிதி வீட்டுக்கு வந்து பணம் கொடுப்பார்.

இந்தச் செயல்பாடு மிகப்பெரிய அன்னியச் செலாவணி மோசடியாகும். இதில் ஈடுபட்ட அம்பானி சகோதரர்கள், நரேஷ் கோயல், பர்மன்ஸ், பிர்லா குடும்பத்தினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ய எச்எஸ்பிசி உதவியது வருமான வரிச் சோதனைக்கு உள்ளான மூன்று இந்தியர்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஏன் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

கோரிக்கை என்ன? ஹவாலா மோசடிக் குற்றத்துக்காக எச்எஸ்பிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அந்த வங்கியின் செயல்பாட்டுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும். ஸ்விஸ் வங்கியில் உள்ள அமெரிக்கர்களின் பெயரை அண்மையில் அந்நாட்டு அரசு வற்புறுத்திப் பெற்றது.

அதுபோல் இந்தியாவும் ஸ்விட்சர்லாந்து நாட்டு அரசை நிர்ப்பந்தித்து கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலைப் பெற வேண்டும்.

அம்பானி, நரேஷ் கோயல், பர்மன்ஸ் உள்ளிட்ட பெரும் பணக்கார தொழிலதிபர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த வேண்டும். அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் அவர்களைக் கைது செய்ய வேண்டும்'' என்றார் அரவிந்த் கேஜரிவால்.

முகேஷ் அம்பானி - ரூ. 100 கோடி

அனில் அம்பானி - ரூ. 100 கோடி

மோடெக் சாஃப்ட்வேர்

நிறுவனம் (ரிலையன்ஸ்) - ரூ. 2,100 கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - ரூ. 500 கோடி

சந்தீப் டாண்டன் - ரூ. 125 கோடி

அனு டாண்டன் - ரூ. 125 கோடி

கோகிலா திருபாய் அம்பானி

கணக்கு உள்ளது; வைப்பு இல்லை

நரேஷ் கோயல் - ரூ. 80 கோடி

பர்மன்ஸ் (மூன்று கணக்குகள்) - ரூ. 25 கோடி

யஷோவர்தன் பிர்லா - கணக்கு உள்ளது; வைப்பு இல்லை


0 comments:

Post a Comment

Kindly post a comment.