Friday, November 9, 2012

தேசியக் கொடிகளைப் பார்த்து 225 நாடுகளின் பெயர்களைச் சொல்கிறான் இரண்டரை வயதுச் சிறுவன் யு.ஆரோன் ஜோயல். !

பெங்களூரைச் சேர்ந்த இச்சிறுவனின் இந்தச் சாதனை நிகழ்ச்சி பாளையங்கோட்டை  மகாராஜநகர் ஸ்ரீ ஜயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.



 இந்நிகழ்ச்சியில், இச் சிறுவன் 225 உலக நாடுகளின் தேசியக் கொடிகளைப் பார்த்து, அந்த நாடுகளின் பெயர்களையும், அதன் தலைநகரங்களையும் கூறியதுடன், சார்க், ஜி8 உள்ளிட்ட 6 உலக நாடுகளின் அமைப்புகளுக்கான கொடிகளையும் அடையாளம் காண்பித்தான்.

 மேலும், உலக வரைபடத்தில் இடங்களையும், சோலார் சிஸ்டம், சாலைப் போக்குவரத்து அடையாளச் சின்னங்கள், தேசியத் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர்பான சில பொது அறிவுக் கேள்விகளுக்கும் விடையளித்தான்.

இச் சாதனை நிகழ்ச்சிக்கு நடுவர்களாக சிங்கம்பாறை தூய பவுல் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் அருள்தந்தை ஏ. ஜெயபாலன், மகாராஜநகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வி.எஸ். கண்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.

பள்ளியின் தாளாளர் வி. ஜெயேந்திரன், பள்ளி முதல்வர் ஏ. ஜெயந்தி ஜெயேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

"இந்தியன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் கின்னஸ் சாதனை முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக இச் சிறுவனின் தந்தை தி.பி. ஆல்பர்ட் மனோகர் தெரிவித்தார்.

நன்றி:- தினமணி, 09-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.