Friday, November 16, 2012

தமிழகத்தில் 16 ரெயில் நிலையங்களில் கேமரா மூலம் கண்காணிப்பு: திருட்டுகளைத் தடுக்க நடவடிக்கை !


சென்ட்ரல், எழும்பூர், மதுரை, கோவை உள்ளிட்ட 16 ரெயில் நிலையங்கள் கேமரா மூலம் கண்காணிப்பு: திருட்டுகளை தடுக்க நடவடிக்கை

முக்கிய ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுத் திருட்டைத் தடுக்கத் தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரூ.41 கோடியே 40 லட்சம் செலவில் 625 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரெயில்வேயின் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தைத் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஏ.கே.மிட்டல் தொடங்கி வைத்துப் பேசியதாவது:-

ரெயில் பயணிகளின் பாதுகாப்பிற்காகத் தெற்கு ரெயில்வே ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் குற்றவாளிகள் ரெயில் பயணிகளுக்குத் தீங்கு விளைவிப்பதால் அவர்களைக் கண்காணிக்கத் தெற்கு ரெயில்வே தீர்மானித்துள்ளது.

இதற்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருவனந்தபுரம், எர்ணாகுளம் சந்திப்பு, மதுரை சந்திப்பு, கோவை சந்திப்பு, திருச்சி சந்திப்பு, கோழிக்கோடு, மங்களூர் மற்றும் சென்னைக் கடற்கரை, மாம்பலம், தாம்பரம், பேசின் பிரிட்ஜ், திருவள்ளூர் ரெயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் ஜி.நாராயணம் கூறியதாவது:-

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களது உடமைகளைச் சோதனை செய்யும் 295 ஸ்கேனர் மிஷின்கள் இப்போது வைக்கப்பட்டுள்ளன.

அதே போல முக்கிய ரெயில் நிலையங்களில் வெடி குண்டுகளைக் கண்டு பிடித்துச் செயலிழக்கச் செய்யும் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவர்.

பயணிகளின் நலனுக்காகப் பாதுகாப்பு வசதிகள் நவீனப் படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் ரெயில் நிலையங்களின் அனைத்து இடங்களையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.         

நன்றி :- மாலை மலர், 16-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.