Thursday, October 18, 2012

சென்னை LLA கட்டிடத்தில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் கூட்டம் போட போலீஸ் அனுமதி தேவை இல்லை !



சென்னை அண்ணா சாலை எல்.எல்.ஏ. கட்டடத்தில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ச்சிகளை நடத்துவோர், அதற்காகக் காவல் துறையிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பிறந்த நாள் நிகழ்ச்சியைக்  கடந்த ஜூன் 15-ஆம் தேதி தேவநேயப் பாவாணர் அரங்கில் நடத்த சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதற்காக அரங்கத்தை முன்பதிவு செய்த அறக்கட்டளையினர், அரங்கத்துக்கான வாடகைக் கட்டணத்தையும் செலுத்தி விட்டனர்.

எனினும், நிர்வாகக் காரணங்களுக்காக நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஜூன் 14-ஆம் தேதி கட்டணத் தொகையை அரங்க நிர்வாகிகள் திருப்பித் தந்து விட்டன                                                    


 இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அறக்கட்டளையினர் முறையிட்டனர். நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற தேவநேயப் பாவாணர் அரங்க நிர்வாகிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், நீதிமன்ற உத்தரவை அரங்க நிர்வாகிகள் மதிக்கவில்லை என்று கூறி அறக்கட்டளையின் நிறுவனர் நக்கீரன் கோபால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரங்கினுள் அமர்ந்திருந்தவர்களை அரங்க ஊழியர்கள் வெளியேற்றி, கதவை மூடி விட்டனர் என்றும், இதனால் அங்குள்ள கார் நிறுத்தும் இடத்தில் கார்களின் முகப்பு விளக்கைப் பயன்படுத்தி நிகழ்ச்சியை நடத்தியதாகவும் அந்த மனுவில் கோபால் கூறியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.சந்துரு, நீதிமன்ற உத்தரவை மதித்து, நிகழ்ச்சியைத் திட்டமிட்டபடி நடத்த அனுமதிக்காத தேவநேயப் பாவாணர் அரங்க நிர்வாகிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் நூலக வரி மூலம் நடத்தப்படும் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நிகழ்ச்சிகளை நடத்துவோருக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அரங்கத்தின் செயலாளர் தன் இஷ்டப்படி செயல்பட முடியாது. சட்ட விதிகளின்படியே அவர் செயல்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில் அரங்க நிர்வாகிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நிகழ்ச்சி நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒருமுறை அனுமதி அளித்து விட்டால், இயற்கை இடர்பாடுகளைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் அனுமதியை ரத்து செய்யக் கூடாது.

தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடத்த காவல் துறை அனுமதி பெறத் தேவையில்லை. வேண்டுமானால் நிகழ்ச்சி குறித்த தகவல்களை அரங்க நிர்வாகிகள் காவல் துறைக்கு தெரியப்படுத்தலாம். ஆனால், காவல் துறை அனுமதி பெற்று வருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்                                                 

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.