Wednesday, October 10, 2012

கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடர்ந்தால் பெண்கள் போற்றுவர்; தலைமுறை காக்கப்படும் !


 தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. உடன் உலகத் தமிழ் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர்.

மதுவிலக்கை அமல்படுத்தும்வரை ம.தி.மு.க.வின் போராட்டம் ஓயாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிரந்தர மதுவிலக்கு கோரி தென்சென்னை, வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தொடங்கி வைத்தார். உலகத் தமிழ் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துப் பேசினர். பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:

காமராஜர் தனது ஆட்சிக் காலத்தில் மதுவைக் கொண்டு வரவில்லை. அண்ணா ஆட்சி காலத்திலும் மதுவை அனுமதிக்கவில்லை. ஆனால், கருணாநிதியோ 1972-ல் மதுவைக் கொண்டு வந்தார்.

அதன் பிறகு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் மதுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மக்களை பெரும் குடிகாரர்களாக்கினர். இப்போது டாஸ்மாக் மூலம் மதுவை தெருத் தெருவாக கொண்டு வந்து நமது இளைஞர்களை சோம்பேறிகளாக்கி விட்டனர்.

தீவிர மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். அவரது முயற்சியைப் பாராட்டுகிறேன்.

டிசம்பரில் நடைப்பயணம்: இந்த உண்ணாவிரதப் போராட்டம் முதல் கட்டம்தான். 2-ம் கட்டமாக நவம்பர் 6-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அறப்போராட்டம் நடைபெறும். அடுத்த கட்டமாக டிசம்பர் 12-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் உவரி கடற்கரையில் இருந்து நடைப்பயணம் தொடங்கி, டிசம்பர் 25-ம் தேதி மதுரையில் நிறைவடையும். தமிழகம் முழுவதும் அந்தந்தப் பகுதிகளில் டிசம்பர் 16 முதல் 25 வரை கட்சியினர் நடைப்பயணத்தில் பங்கேற்பர். இதற்கு பிறகும் தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால், அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து டிசம்பர் 25-ல் அறிவிக்கப்படும் என்றார் வைகோ. 

காஞ்சிபுரம், அக். 2: தி.மு.க. தலைவர் கருணாநிதியால் 3 தலைமுறை இளைஞர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தில் தீவிர மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ம.தி.மு.க தலைவர் வைகோ தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பழ. நெடுமாறன் பேசியது:

காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் காமராஜர் மறைந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி மதுவிலக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்தப்படுகிறது.

காந்திஜி, பெரியார், காமராஜர், அண்ணா ஆகியோர் மதுவிலக்குக் கொள்கையை தங்களது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தனர்.

இதற்காகப் பல போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆனால், கருணாநிதி முதல்வராக இருந்தபோது மதுவைக் கொண்டு வந்தார். இதனால் தமிழகத்தில் 3 தலைமுறை இளைஞர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர்.

நமது இளைஞர்களை எப்படியும் மீட்க வேண்டும் என்று வைகோ உண்ணாவிரதம் நடத்துகிறார்.

சீரழிவில் இருந்து தமிழ் மக்களைக் காக்க நடக்கும் போராட்டம் வெற்றி பெறும்.

இதற்காகத் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களுக்குத் துணை நிற்போம் என்றார் பழ. நெடுமாறன். 

நன்றி :-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.