ரூ. 4,160 கோடி இந்திய நிதியுதவியுடன் இலங்கையின் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரில், வட பகுதியில் இருந்த இருப்புப் பாதைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன. போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மீண்டும் தண்டவாளத்தை அமைத்து ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இப்பணியை இந்திய பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.ஓ.என். மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்துக்கு ரூ. 4,160 கோடி (800 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கடனுதவியாக இந்தியா வழங்கியுள்ளது.
அனுராதபுரம் மாவட்டம் மெதவாச்சியிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை 252.5 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது.
இது குறித்து இந்திய ரயில்வேயின் கட்டுமான நிறுவனமான ஐ.ஆர்.சி.ஓ.என்.னின் இலங்கைப் பிரிவுப் பொதுமேலாளர் எஸ்.எல்.குப்தா கூறியது:÷""பல இடங்களில் ரயில்பாதை அமைந்திருந்ததற்கான தடமே இல்லாத வகையில் புதர்மண்டிக் கிடந்தது. இப்பாதையைச் சீரமைத்து, மீண்டும் தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி நான்கு கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது'' என்றார்.
இந்த இருப்புப் பாதைகள் போடப்பட்ட பின், நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள், யாழ்ப்பாணம், மன்னார், தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கு வந்துசெல்வது எளிதாக இருக்கும். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த யாழ் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்படும்.
இலங்கையின் தெற்குப் பகுதியில் 2004 ஆம் ஆண்டு சுனாமியால் 100 கி.மீ தூர இருப்புப் பாதை சேதமடைந்தது. அதை ஐ.ஆர்.சி.ஓ.என். நிறுவனம் ஏற்கெனவே சீரமைத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி :-தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.