Wednesday, October 10, 2012

என்னவாயிற்று நதிநீர் வாரியச் சட்டம் ?- பழநெடுமாறன்

பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் பிறப்பித்த ஆணையைச் செயற்படுத்தாத கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த ஆணையத்தின் உத்தரவை ஏற்று தமிழகத்துக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிடவேண்டும் என்றும் அந்த நீரைக் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதற்கு எதிராக "பந்த்', போராட்டம் நடத்தப்போவதாகக் கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காவிரி ஆணையக் கூட்டத்தை பிரதமர் கூட்டி அதில் விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீரைக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையை ஏற்க மறுப்பதாக கர்நாடக முதலமைச்சர் பகிரங்கமாக அறிவித்து ஆணையக் கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார். பிரதமரின் ஆணையை மீறியதோடு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தையும் கர்நாடக முதலமைச்சர் அவமதித்துள்ளார்.

ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பினையும் இறுதித் தீர்ப்பினையும் கர்நாடகம் ஏற்க மறுத்துவிட்டது. தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்தை மதியாதப் போக்கில் கர்நாடகம் நடந்து வருகிறது. அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளாததின் விளைவாகவே தமிழகக் காவிரிப் பாசன விவசாயிகள் பெரும் இழப்புக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

கடந்த 1968-ம் ஆண்டிலிருந்து 44 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் கர்நாடக அரசினாலும் மத்திய அரசினாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. பிரதமர்களான இந்திரா காந்தி முதல் மன்மோகன் சிங் வரை காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு அநீதி இழைத்து ஓரவஞ்சனையுடன் நடந்து கொண்டனர். காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகளை மதிக்கவோ தமிழகத்திற்குத் தண்ணீர் தரவோ கர்நாடகம் மறுத்தபோது பிரதமர்களாக இருந்தவர்கள் அரசியல் சட்டப்படி தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாமல் செயலற்றுப் போனார்கள் அல்லது புறக்கணித்தார்கள்.

உச்ச நீதிமன்றம் தலையிட்டு பிரதமரின் ஆணைப்படி நடக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலைமை இருப்பது வெட்கக்கேடானதாகும். நாட்டின் பிரதமருக்கு உள்ள மரியாதையைப் பார்த்து உலகம் நகைக்கும் நிலை இருப்பது அப்பதவிக்கே அவமானகரமானதாகும்.

1968 ஆம் ஆண்டு காவிரி நீர்ப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. மத்தியப் பாசனத் துறை அமைச்சர் கே.எல். ராவ் முயற்சியிலும் தலைமையிலும் தொடர்ந்து கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகியவற்றின் முதலமைச்சர்கள் பலமுறை பேச்சு நடத்தினார்கள். இந்தப் பேச்சுகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை. 1970 ஆம் ஆண்டில் பேச்சு பயனளிக்கும் என்ற நம்பிக்கையை மத்திய பாசன அமைச்சர் இழந்துவிட்டார் என்றாலும் நடுவர் குழுவினை அமைக்க இந்திய அரசு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஹேமாவதி, கபினி திட்டங்களின் கட்டுமானப் பணிகளைக் கர்நாடகம் தொடங்கிவிட்டது.

வேறுவழியில்லாத நிலைமையில் 1971 ஆம் ஆண்டில் இந்திய அரசையும் கர்நாடக அரசையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்திய அரசு நடுவர் மன் றத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் வழக்காகும். இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் வாக்குமூலத்தில், சட்டப்படி இனியும் பேச்சுகளால் பயனில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்தால்தான் நடுவர் மன்றம் அமைக்க முடியும் என்று கூறியது.

1972 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராவிடம் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி இப்பிரச்னை குறித்துப் பேசினார். வழக்கைத் திரும்பப்பெற்றால் பேச்சுகளை மீண்டும் நடத்தித் தீர்வு காண உதவுவதாக இந்திரா அளித்த வாக்குறுதியை நம்பி, வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது. அதே ஆண்டில் மே மாத இறுதியில் மூன்று மாநில முதலமைச்சர்கள் கூடிப் பேசியதன் விளைவாக, "காவிரி உண்மை அறியும் குழு' ஒன்று அமைக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு கடைசியில் தில்லியில் 3 மாநில முதலமைச்சர்களும் இந்தியப் பாசன அமைச்சரும் "காவிரி உண்மை அறியும் குழு'வின் அறிக்கையை ஆராய்ந்தார்கள். அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் சரியானவை என்று மூன்று மாநிலங்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

1974 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் தில்லியில் கூடிய மூன்று மாநில முதல்வர்களும் "காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு' ஏற்படுத்தும் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இந்த அமைப்பை நிறுவ வேண்டிய மத்திய அரசு அவ்வாறு செய்யாமல், தானே தீர்வுகாண முயன்றதால் பேச்சுகள் பயனற்றுப்போயின. 1971 ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த தமிழக அரசு 1990-ம் ஆண்டு வரையில் கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய தவறைச் செய்தது. பேச்சு வார்த்தை நடைபெறும்போது உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.

கர்நாடகம் திட்டமிட்டுப் பேச்சுவார்த்தையை 19 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டே சென்றது.

1990 ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மீண்டும் முறையீடு செய்தது. அப்போது கர்நாடக முதலமைச்சராக இருந்த பங்காரப்பா தலைமையில் முன்னாள் முதலமைச்சர்களான குண்டுராவ், இராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர். பொம்மை ஆகியோர் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றுசேர்ந்து தில்லிக்குச் சென்று பிரதமர் வி.பி.சிங்கைச் சந்தித்து நடுவர் மன்றத்தை அமைக்கக்கூடாது என்று வற்புறுத்தினார்கள். கர்நாடகத்தின் இந்த நெருக்குதலை பிரதமர் வி.பி.சிங்கினால் மீறமுடியவில்லை.

பன் மாநில நதிநீர் பிரச்னைச் சட்டத்தின் 4-1 பிரிவின்படி நடுவர் மன்றத்தை அமைப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. ஆனால், பிரதமர் வி.பி.சிங் அவ்வாறு செய்யாமல் உச்ச நீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அவ்வாறே நடந்துகொள்ளத் தீர்மானித்தார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இதைத் தெரிவித்தார். அதன் பின் உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

1990 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி நடுவர் மன்றம் இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. கர்நாடக அரசு இந்த ஆணையை ஏற்க மறுத்தது. அத்துடன் அது நிற்கவில்லை. 1991 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி "காவிரிப் பாசனச் சட்டம்' என்ற பெயரில் ஓர் அவசரச் சட்டத்தை கர்நாடக அரசு பிறப்பித்தது. நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையைச் செயலற்றதாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.

இந்த அவசரச் சட்டம் சகல நியாயங்களுக்கும் எதிரா னது என்பதைத் தமிழகம் இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டி முறையிட்டது. இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரம் அளிக்காமல் மத்திய அரசே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இச்சட்டத்தை அனுப்பி அவர் அதை உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பினார். உச்ச நீதிமன்றம் 1991 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது.

இத்தீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் கெஜட்டில் பிரசுரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மட்டுமல்ல, நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பினையும் கெஜட்டில் பிரசுரிக்க மத்திய அரசு வேண்டுமென்றே தயங்கியது. மத்திய அரசு நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பினையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் கெஜட்டில் பதிப்பித்தால்தான் இந்தத் தாவாவில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அதை ஏற்று நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஆனால், இந்திய அரசு அவ்வாறு செய்யாததின் விளைவாக இந்தத் தீர்ப்புகள் யாரையும் கட்டுப்படுத்தும் வலிமையற்றுக் கிடக்கின்றன.

மத்திய அரசிடம் தமிழக அரசு பல தடவை முறையிட்டபோதும் எந்தப் பயனும் இல்லை. எனவே தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 1993 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி உண்ணா நோன்பை மேற்கொண்டார். 4 நாட்கள் அவர் மேற்கொண்ட உண்ணாநோன்பின் எதிரொலி டில்லியைச் செயல்படவைத்தது. அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் மத்திய பாசனத் துறை அமைச்சரான வி.சி. சுக்லாவை அனுப்பி, தமிழக முதலமைச்சருடன் பேச்சு நடத்தி இறுதியாகக் காவிரிப் பிரச்னை சம்பந்தமாக இரண்டு குழுக்களை அமைக்கப் போவதாக அறிவித்தார்.

காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைக் கண்காணிக்க ஒரு குழுவையும் அதை நடைமுறைப்படுத்த மற்றொரு குழுவையும் நியமிக்கப்போவதாக அறிவித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இந்த அறிவிப்பை ஏற்று கர்நாடகம் காவிரியில் நீரைத் திறந்துவிடவேண்டும் என்று ஆணையிடுமாறு நடுவர் மன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அதை நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டு டிசம்பர் 19 ஆம் தேதி கீழ்க்கண்ட ஆணையைப் பிறப்பித்தது. உடனடியாக தமிழ்நாட்டுக்கு 11 டிஎம்.சி. தண்ணீரை அளிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், இந்த ஆணையை மதிக்க கர்நாடகம் மறுத்துவிட்டது. இதன் விளைவாக மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக ஆவன செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு ஆணை பிறப்பித்தது. இந்தியப் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், நடுவர் மன்றம் கூறியபடி 11 டி.எம்.சி. தண்ணீருக்குப் பதில் 6 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட ஆணையிட்டார். மறுபடியும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்தது.

2007 ஆம் ஆண்டு ஜனவரியில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால், இந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மத்திய அரசும் இந்தத் தீர்ப்பை தனது கெஜட்டில் பதிப்பிக்கவில்லை. எனவே அது செயல்படாத தீர்ப்பாகவே இன்னமும் இருந்து வருகிறது.

பிரதமராக வாஜ்பாய் பதவி ஏற்றபோது பிரதமரும் 4 மாநிலங்களின் முதல்வர்களும் அடங்கிய குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவிற்கு உதவியாக சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களையும், மத்திய நீர்ப்பாசனத்துறை செயலாளரையும் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் அதிகாரமற்ற குழுக்களாகும். எனவே இத்தகைய குழுக்களினால் எத்தகைய நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை.

சட்டப்படி மத்திய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு முன்வரவில்லை. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நதிநீர் வாரியச் சட்டத்தைப் பயன்படுத்தி காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்தத் தீர்ப்புகளைக் கர்நாடகம் மதிக்கவில்லை என தமிழகம் மத்திய அரசிடம் புகார் செய்தவுடன் மேலே கண்ட சட்டத்தின் 41 பிரிவின்படி "காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை' மத்திய அரசு அமைத்து அதை தனது கெஜட்டிலும் பதிப்பித்திருக்க வேண்டும். இச்சட்டத்தில் இந்த அமைப்பின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படக் கூடியவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது பற்றி விரிவாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இச்சட்டத்தின் 221 (சி) பிரிவில் சொல்லப்பட்டுள்ளபடி அதிகார அமைப்பின் ஆலோசனையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏதாவது மீறினால் வாரியம் உடனடியாக ஒரு நடுவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன் நியமிக்கும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் இவ்வாறு நியமிக்கப்படலாம். இந்த நடுவரின் தீர்ப்பே இறுதியானது. பிரச்னையில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் இத்தீர்ப்புக் கட்டுப்படுத்தும் உடனடியாக இத்தீர்ப்பை ஏற்றுச் செயல்படுத்துவது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நீங்காத கடமையாகும்.

இச்சட்டத்தில் இவ்வளவு தெளிவாக எல்லாம் சொல்லப்பட்டிருந்தும் நதிநீர் வாரியச் சட்டத்தை 1956 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மத்திய அரசு பயன்படுத்தவேயில்லை என்பதும் இது செயலற்றச் சட்டமாக இன்றுவரை கிடக்கிறது என்பதும் மிகமிக வருந்தத்தக்கதாகும்.

1974 ஆம் ஆண்டிலேயே காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை ஏற்படுத்த கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்களும் ஒப்புக்கொண்டன. ஆனால், கடந்த 38 ஆண்டுகளாக அதை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குப் பிறகாவது இந்த அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கு மாநிலங்களுக்கிடையே மோதலை அதிகமாக்குவதோடு இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றம் போன்ற உயர் அமைப்புகளையும் யாரும் மதிக்காத நிலையை ஏற்படுத்திவிடும் என்பதையும் இறுதியில் தேச ஒருமைப்பாடு என்பது சிதறுண்டு போகும் என்பதையும் மத்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.                                                                       

நன்றி :-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.