Sunday, October 14, 2012

புதிய எரிவாயு இணைப்புக்குத் தடை இல்லை !

புதிதாக எரிவாயு இணைப்பு வழங்கத் தடை ஏதும் விதிக்கவில்லை என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்திய ஆயில் கார்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) ஆகியவை விளக்கமளித்துள்ளன.

இது தொடர்பாக அந்த நிறுவனங்கள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே பெயரில் பல்வேறு இணைப்புகள் உள்ளனவா என்பது தொடர்பான ஆய்வு இப்போது நடைபெற்று வருகிறது. இதற்காக இப்போதுள்ள வாடிக்கையாளர்களிடம் விண்ணப்பப் படிவம் மூலம் விவரம் பெறப்பட்டு வருகின்றது.

இந்தப் பணி நடைபெறுவதால் தாற்காலிகமாக புதிய இணைப்புகள் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுப் பணிகள் முடிந்தபின் மானியவிலையில் எரிவாயு இணைப்புகள் வழங்கும் பணி வழக்கம்போல நடைபெறும்.

ஒரே முகவரியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எரிவாயு இணைப்பு வைத்துள்ளவர்களுக்குக் கூடுதல் இணைப்பு ரத்து செய்யப்படும். 2013 மார்ச் 31ஆம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் 3 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். 2013 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அடுத்த மார்ச் இறுதி வரை மானிய விலையில் 6 சிலிண்டர்கள் வழங்கப்படும்.

வீட்டில் சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மானிய விலையில் அல்லாத சிலிண்டர்களைப் பெற எவ்வித கட்டுப்பாடும் இல்லை. பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் நுகர்வோருக்கு எவ்விதத் தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் வழங்கப் போதுமான இருப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.                                             

நன்றி :-தினமணி,  14-10-2012



0 comments:

Post a Comment

Kindly post a comment.