Sunday, October 14, 2012

இந்தியாவிலேயே முதன்முறையாக செய்திகளுக்கென ஓர் இணயதளம், ஜெயலலிதா துவக்கி வைத்தார் !




செய்தித் துறைக்கென தனியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தை  முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

மேலும், புகைப்படங்கள், விடியோ காட்சிகளை ஊடகங்களுக்கு அனுப்புவதற்காக சென்னைக் கோட்டைத் தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்ட ஊடக மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த ஊடக மையம் மூலம் செய்தி வெளியீடுகள், புகைப்படங்கள் மற்றும் விடியோ காட்சிகளை அதிக அளவில் சேகரித்து வைத்துத் தேவைப்படும்போது ஒருசில விநாடிகளில் தேடி எடுத்துக் கொள்ள முடியும்.  அரசு வெளியிடும் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக் காட்சிகளை மற்றவர்களால் மாறுதல் செய்ய முடியாது.

தனி இணையதளம்: இந்தியாவிலேயே முதல் முறையாக இத்தகைய அதிநவீன வசதிகளுடன் ரூ.81 லட்சம் மதிப்பில் ஊடக மையமும், தமிழக அரசின் நிகழ்வுகளை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் செய்தித் துறைக்கென தனி இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த இணையதளத்தில் அரசின் செய்தி வெளியீடுகள், அரசு விழா புகைப்படங்கள், தமிழரசு இதழ், தமிழ்நாடு திரைப்பட பிரிவின் விடியோ செய்தி மலர், நினைவகம் குறித்த விவரங்கள், துறையில் பணியாற்றும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் முதலான பல்வேறு தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மக்களும் இந்த இணையதளத்தின் மூலம் அரசின் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

ஏழு ஜீப்புகள்: திருப்பூர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்குப் புதிதாக ஏழு ஜீப்புகளையும், அரசின் சாதனைகளை அறிந்து கொள்ளும் வகையில் திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குப் புதிதாக டெம்போ டிராவலர் விடியோ வேன்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர் ராஜாராம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.          

நன்றி :- தினமணி, 14-10-2012




0 comments:

Post a Comment

Kindly post a comment.