Saturday, October 13, 2012

வலைப்பூ பங்கேற்பு வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்தது ?


இத்தலைப்புக்கு செல்லும் முன் என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம் என் பெயர் ராமசாமி ஊர் சங்கரன்கோவில், திருநெல்வேலி மாவட்டம். BSNL தொலைதொடர்பு துறையில் பணி நிறைவு செய்து தற்சமயம் ஓய்வில்
சென்னை அம்பத்தூரில் வாழ்ந்து வருகின்றேன்.

 அலுவலகம் சென்று வருவதே வாழ்க்கை என்று எண்ணி இது தான் உலகம் என்று  நினைத்துக்கொண்டிருந்தேன் எத்தனை பேருக்கு என் பெயர் தெரியும் ? உறவினருக்கும்  நான் வேலை பார்த்த  இடத்தில் உள்ளவர்களையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

ஓய்வு பெற்ற  பின் பல சமயம் வெறுமையும் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற எண்ணமும் தான்  மேலோங்கி இருந்தது. வீட்டில் இருக்கும் இணையம் வழியாக அவ்வப்போது இமெயில் வந்திருக்கிறதா  என்று பார்த்தால் ஒன்று கூட வந்திருக்காது.

இந்த சுழ்நிலையில் தான் நாமும் ஒரு வலைப்பூ தொடங்கி நாம் இதுவரை சேர்த்து வைத்த , மற்றும்படித்ததில் பிடித்த பயனுள்ள தகவல்களை நம் தமிழ் சமூகத்திற்கு தெரியப்படுத்தினால் என்ன என்ற

எண்ணம் வந்தது. நண்பர் ஒருவர் உதவியுடன் பிளாக் பற்றிக் கேட்டேன் அவர் வலைப்பூ உருவாக்கிக் கொடுத்து எப்படி பதிவிட வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்தார். ஒவ்வொரு நாளும் ஒன்றல்லஇரண்டு மூன்று பதிவுகள் கூடத் தட்டச்சு செய்து வெளியீட்டு இருக்கிறேன்.

எனக்குத்தெரிந்த நண்பர்களிடன் என் வலைப்பூ பற்றி சொல்லி நீங்கள் அதைப் பார்த்து உங்கள்  கருத்துக்களைப் பின்னோட்டம் கொடுக்க வேண்டும் என்று பல சமயம் கேட்டதுண்டு.

ஒரு சிலர்  படிக்காமலே நன்றாக இருக்கிறது என்று சொல்வதும் எனக்குத்தெரிந்ததுதான். ஆரம்ப கால கட்டத்தில் !ஒரு நாளைக்கு 10 பேர் கூடத் தளத்தைப்படிக்க வருவதில்லை.

விடாமல் முயற்சி செய்தேன் பல தகவல்களை மறுக்காமல் மறைக்காமல் பதிவு செய்தேன்.பதிவுகளின் எண்ணிக்கை 200 - ஐ தாண்டியது ஆனாலும் அதே போல் தான் 10 பேர் தான் படிக்கின்றனர்

ஆனால் யாரும் பின்னோட்டம் கூட இடுவது இல்லை.. நல்லத்தகவல்களை எந்த அரசியல்சாயமும் பூசாமல் அப்படியே சொல்கிறேன் ஆனாலும் படிக்க ஒருவருமில்லையே என்ற வெறுப்பில்,

இனி யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டாம் அப்படியே வலைப்பூவை விட்டுவிடலாம் என்றுநினைத்து அன்றிலிருந்து பதிவிடுவதையே நிறுத்திவிட்டேன்.

10 நாட்கள் கழித்து அம்பத்தூரில் இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு சென்று ஒரு புத்தகத்தை ஜெராக்ஸ்செய்யக் கொடுத்துவிட்டு அங்கு அமர்ந்து இருந்தேன். ஜெராக்ஸ் எடுக்கும் பையன்,

அவர் நண்பர்,ஒருவரிடம் போனில் நம் வலைப்பூவை சொல்வது காதில் கேட்டது. உடனடியாக அந்தப்பையனைஅழைத்து இப்போது ஒரு வலைப்பூ பற்றி தெரியப்படுத்தினாயே அது என்ன என்று கேட்டேன். அவன்

நம் வலைப்பூ முகவரியான rssairam.blogspot.com என்று கூறினான்,

அதில் அப்படி என்னஇருக்கிறது என்று மறுபடியும் கேட்டேன். ஐயா நான் எனக்கு என் நண்பர் தான் இந்த வலைப்பூவைஅறிமுகப்படுத்தினார்

இத்தளத்தில் ஆபாசங்கள் மற்றும் சினிமா நடிகர் , நடிகைகளின் கிசு கிசு என்ற
எதுவும் இல்லை. பல்வேறு தகவல்களை சமூகத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சொல்வதால் எனக்குப்பிடித்து இருக்கிறது என்றார்.

இதைவிட எனக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்.?

யாருக்காக இல்லாவிட்டாலும் இது போல் இருக்கும் ஒருசிலருக்காகவாவது நம் தளம் பயனுள்ளதாகஇருக்கிறதே என்று மறுபடியும் தொடர்ந்து எழுதினேன்.

யாரிடமும் எப்படி இருக்கிறது நீங்கள்பாருங்கள் என்று சொல்வதை விட்டுவிட்டேன், சில மாதங்கள் சென்ற பின் ஒரு சிலர் பின்னோடம்
கொடுக்க ஆரம்பித்துவிட்டனர் அதைக்கூட எதிர்பார்க்கவில்லை. சில பெரிய மனிதர்களின் நட்பும் அவர்களின் பாரட்டும் கிடைத்தது.

இணையதளம் தொடர்பாக நடக்கும் சில முக்கிய விழாக்களுக்கு அழைப்பும் வந்தது. சில விழாக்களில்பங்கேற்பதை நானும் மகிழ்ச்சியாகவே எண்ணிச் சென்றேன், தற்போது

10 பேர் கூட பார்க்காமல் இருந்த நம் வலைப்பூ 2 லட்சத்தை நோக்கி பீடுநடை போடுகிறது. நட்பு வட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது.

எல்லாஊர்களிலும் உள்ள சில முக்கிய வலைப்பதிவர்களின் நட்பும் அன்பும் கிடைத்த வண்ணம் உள்ளது. 

இப்போதெல்லாம் எந்த ஊரில் எந்த தகவல் வேண்டுமானாலும் உடனடியாக பெற்றுக்கொள்ளும் அளவிற்கு நட்பு வட்டம்விரிந்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்போதும் கூட ராமசாமி என்றால் பலபேருக்குத் தெரியாது, RSsairam என்று சொன்னால் தான்புரிந்து கொள்கின்றனர். என் வாழ்க்கையில் சாதாரண ராமசாமியாக இருந்த என்னை உலக அளவில்

பிரபலப்படுத்தி எதிர்பார்க்க முடியாத அளவில் மாற்றத்தை கொண்டு வந்த இந்த வலைப்பூவிற்கு நான் எப்படி நன்றி கூறினாலும் அது ஈடாகாது.



0 comments:

Post a Comment

Kindly post a comment.