Friday, October 12, 2012

ஏழ்மை ஒருபுறம் ! அம்பானிகள், மிட்டல்கள், டாடாக்கள் மறுபுறம் ! இருவேறு இந்தியா - எஸ். கோபாலகிருஷ்ணன்


“பிரிக்” என்கிற ஆங்கிலச் சொல்லை, உலக அரங்கில் 2001-ம் ஆண்டில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் ஜிம் ஓ’ நீல். இவர் “ஸ்டேண்டர்டு அண்டு பூர்’ என்கிற சர்வதேச தர நிர்ணய நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர். பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் சுருக்கம்தான் “பிரிக்”.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தொழில்வளம் மிக்க, செல்வம் கொழிக்கும் நாடுகளாகத் திகழ்ந்தன. இவற்றை ‘ஜி-7' நாடுகள் என்று அழைத்தார்கள்.

நாளடைவில் இவற்றில் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்தன. அந்த காலகட்டத்தில், பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகள் 2027 ஆம் ஆண்டுக்குள் ‘ஜி-7' நாடுகளை முந்திவிடும் என்று பொருளாதார நிபுணர் ஜிம் ஓ’ நீல் அறி வித்தார். ‘பிரிக்’ என்ற சொல் உருவானது இப்படித்தான்.

கடந்த 10 ஆண்டுகளாக, இந்தியா உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருவதில் வியப்பில்லை. அதேபோல், கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட 8 சதவிகிதமாக இருந்து வந்தது. வளர்ச்சி வேகத்தில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து வருகின்றன.

2008 ஆம் ஆண்டு அமெரிக்கா பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. அதைத்தொடர்ந்து, ஐரோப்பியப் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந் தது. அந்நாடுகள் சரிவிலிருந்து இன்னமும் மீட்சி அடையவில்லை. இந்த சர்வதேசத் தேக்கநிலை, இந்தியாவையும் பாதிக்கத்தான் செய்தது. எனினும், மற்ற நாடுகளைவிட இந்தியா விரைவிலேயே சமாளித்துக்கொண் டது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பது கண்கூடு.

முக்கியமாக, மனித மேம்பாட்டுக் குறியீடு களில், இந்தியா ஒரு பின்தங்கிய நாடாகவே இருந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி உள்ளிட்ட பல அமைப்பு களின் ஆய்வுகள் தரும் தகவல்களைக் கூர்ந்து கவனித்தால், ஒரு சராசரி இந்தியனின் தலை சுற்றாமல் இருக்காது. ஊட்ட உணவு, சிசு மரணம், கல்வி, மருத்துவம் போன்ற மனித மேம்பாடு தொடர்பான பல அம்சங்களில் இந்தியா கடைநிலையில்தான் இன்றுவரை இருக்கிறது.

உதாரணமாக, பசியாறுவதற்கான உணவு கிடைப்பதுகூட பல கோடி மக்களுக்கு குதிரைக் கொம்பாக இருக்கிறது. குழந்தைகளுக்கான ஊட்ட உணவு, நாட்டில் உள்ள 43 சத விகித சிறுவர், சிறுமிகளுக்குக் கிடைப்பதில்லை. இதனால் அவர்களது உடல் வளர்ச்சி ஏதேனும் ஒரு வகையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல் எடையும் சராசரியைவிட மிகக் குறைவாக உள்ளது.

இந்தக் குறியீட்டில், இந்தியாவுக்கு இணை யாக, அதல பாதாளத்தில் இருக்கும் நாடுகள் எவை தெரியுமா? அங்கோலா, கேமரூன், காங் கோ மற்றும் யேமன் போன்ற பத்து ஆப்பிரிக்க நாடுகள்தான். ஆப்பிரிக்காவில் உள்ள மொத்த 54 நாடுகளில் மீதம் உள்ள நாடுகள் இந்தி யாவைவிட மேல்!

வங்கதேசம், நேபாளம், எத்தியோப்பியா, சோமாலியா, லாவோஸ், சூடான், கம்போடியா போன்ற சிறிய நாடுகளில் உள்ள குழந்தை களுக்குக்கூட, இந்தியக் குழந்தைகளைவிட நல்ல ஊட்ட உணவு கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

இந்த விஷயத்தில், உலக நாடுகளின் வரி சையில் இந்தியா 67-வது இடத்தில் உள்ளது.

நாம் ‘கிள்ளுக்கீரை’யாக நினைக்கும் பாகிஸ்தான் 59-வது இடத்தில், நம்மை முந்திக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, உள்நாட்டுப் போரைச் சந்தித்த இலங்கை 36-வது இடத்தைப் பிடித்துள்ளது!

தொடர்ந்து பல ஆண்டுகள் 8 சதவிகித வளர்ச்சியை அடைந்தது இந்தியா. அந்த அபரிமிதமான வளர்ச்சி, இந்தப் பிரச்சனை யின் விளிம்பைக்கூடத் தொடவில்லை என் பதுதான் சோகம்.

சரி, சிறுவர் - சிறுமியரின் நிலைதான் அப் படி. சிசுக்களின் கதி என்ன? ஐக்கிய நாடு களின் மக்கள்தொகை அமைப்பு சமீபத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. 194 நாடு களைக் கொண்ட அந்தப் பட்டியலில், சிசு மர ணத்தைக் கட்டுப்படுத்தியுள்ள நாடுகளை வரி சைப்படுத்தி உள்ளனர். அந்த வரிசையில், இந்தியா 150-வது இடத்தில் தாழ்ந்து காணப் படுகிறது. அதாவது 149 நாடுகள் நம்மைவிடச் சிறப்பாக உள்ளன.

குறிப்பாக, இலங்கை 70-வது இடத்திலும், நேபாளம் 138-வது இடத்திலும், பூடான் 139-வது இடத்திலும், வங்கதேசம் 148-வது இடத்திலும் இருக்கின்றன.

இந்நிலையில், மத்திய அரசு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்த ஆய்வுகள் இந்தியாவுக்கு நியாயம் வழங்கவில்லை எனக் குறை கூறியுள்ளது. இதைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா?

“கல்வியில் சிறந்த நாடு நம் நாடு” என் கிறோம். நமது மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்த பிரகாசமான மாணவர்கள்கூட, ஹார் வர்டு, பிரின்ஸ்டன், ஆக்ஸ்போர்டு, கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில் கிறார்கள் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறோம். ஆனால், நம் நாட்டில் எழுத் தறிவு பெற்ற ஆண்கள் 82 சதவிகிதமே; பெண் கள் 65 சதவிகிதமே. ஆக, இதிலும் எண் ணற்ற நாடுகள் இந்தியாவை முந்திக் கொண் டுள்ளன.

கல்வியைப் பற்றிய உலக ஆய்வில், நமது பல்கலைக்கழகங்கள் உலகத் தரத்தில் இல் லை என்கிற கசப்பான உண்மை வெளியாகி யுள்ளது. உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூட இந்திய பல்கலைக்கழகமோ, இந்திய ஐ.ஐ.டி.யோ இல்லை என்றால் நம்புவீர்களா?

ஆசியாவைச் சேர்ந்த இரண்டே இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒன்று, ஹாங்காங் பல்கலைக்கழகம். இரண்டாவது, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்.

இதில் வேடிக்கை என்னவெனில், “பிரிக்” நாடுகளில் (பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா) இந்தியாவுக்கு மட்டும்தான் அந்தப் பெருமை கிடைக்கவில்லை.

அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு சிறந்த பல்கலைக் கழகமாக இருந்த இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜை இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட்டது எம்.ஐ.டி.! சரியான போட்டி!

ஒரு காலத்தில், உலகுக்கே வழிகாட்டிய “நாளந்தா” பல்கலைக்கழகம் தோன்றியது நம் நாட்டில்தான்! 20-ம் நூற்றாண்டில் சென்னை பல்கலைக்கழகம் நாட்டுக்கே எடுத்துக்காட் டாகத் திகழ்ந்தது. ஆனால், காலப்போக்கில், கல்விதான் வியாபாரம் ஆகிவிட்டதே!

சில தினங்களுக்கு முன்பு, கரக்பூர் ஐ.ஐ.டி. யின் 58-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியது கவனிக்கத்தக்கது.

“சிலர் இந்த ஆய்வுகளையே குறை கூறலாம்; எனினும் பொருளாதாரத்தில் சூப்பர் பவராக உயர விரும்பும் நாம், கல்வியில் ஏன் 10-வது நாடாகவோ, 50-வது நாடாகவோ அல்லது 100-வது நாடாகவோ உயர்வதற்கு
இயல வில்லை?’’ என்கிற கேள்வியை எழுப்பினார் பிரணாப் முகர்ஜி.

புதிய, புதிய சோதனைகள் தேவை. கல்வி என்பது வேலை தேடிக்கொள்வதற்காக மட்டுமே என்ற சிந்தனையை இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் முற்றிலுமாக அகற்றிவிட முடியாது.

எனினும், நமது மாணவர்களின் மனத்தில், அறிவியல் தாகத்தை உருவாக்கிடவும், புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வத்தை ஊட்டுவதற் கும், அனுபவமும், ஆற்றலும் மிக்க நமது பேராசிரியர்கள் முன்வர வேண்டும்.

மருத்துவத் துறையை எடுத்துக் கொண்டோமானால் இன்று உலகின் பல நாடுகளிலிருந்து நம் நாட்டுக்குச் சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள். காரணம், இந்திய டாக்டர்கள் திறமைசாலிகள். அது மட்டுமல்ல,
வெளிநாடுகளைவிட இங்கு கட்டணங்கள் குறைவு.

இந்தியாவில், பொதுவாகத் தனியார் மருத்துவமனைகளில் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளும், நவீன சாதனங்களும் உள்ளன. அரசு மருத்துவமனைகளிலும் நவீன சாதனங்களுக்குக் குறைவில்லை. அதேநேரம், ஏழை - எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காகச் செல்லும் அரசு மருத்துவமனைகளில் திருப்திகரமான சேவை கிடைப்பதில்லையே?

இப்படி எதை எடுத்தாலும், இரண்டு முகங்களைக் கொண்ட, இரு வேறு நாடாகத் தோற்றம் அளிக்கும் நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் மட்டும் போதாது. அந்த வளர்ச்சி அனைத்துத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருத்தல் வேண்டும்.

11 ஐந்தாண்டு திட்டங்கள் முடிந்து, 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாம் இருக் கிறோம். சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பொருளாதாரச் சீர் திருத்தங்களை மேற்கொண்டு 20 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

இன்னும் எத்தனை காலத் துக்கு, இந்தியாவில் ஒருபுறம் ஏழ்மை, வறுமை, மறுபுறம் அம்பானிகள், மிட்டல்கள், டாடாக்கள் என உலகப் பெரும் செல்வந்தர்களைக் கொண்ட “ஒளிரும் இந்தியா” என இருப்பது என்பதே கேள்வி?

நன்றி : தினமணி (27.9.2012)

0 comments:

Post a Comment

Kindly post a comment.