Friday, October 12, 2012

ஆசிய வளர்ச்சி வங்கியின் " அற்புதமான “ ஆலோசனை !விருப்பப்படி ஆட்டுவித்தல் என்பதற்கான ஒரு உத்தி ஒரு பயங்கரமான எதிர்காலம் பற்றிய அச்சத்தை விதைத்து, அதைக் காட்டியே நிர்ப்பந்திப்பது. ஆசிய வளர்ச்சி வங்கி இந்த உத்தியைக் கையாண்டு இந்தியாவை மேலும் நிர்ப் பந்திக்க முயல்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 5.6 விழுக்காடாகச் சரிவடையப் போகிறது என்று ஒரு புள்ளி விவரப் பூச்சாண்டியை அந்த வங்கி தற்போது கிளப்பிவிட்டிருப்பதற்கு வேறு நோக்கம் எதுவும் இருப்பதற்கில்லை.

உலக வங்கியின் ஒரு பிரிவான ஆசிய வளர்ச்சி வங்கி, 2012-13ம் நிதியாண்டுக்கான வளர்ச்சி விகிதம் இந்தியாவில்  7 விழுக்காடாக இருக்கும் என்று முன்னதாக மதிப்பிடப்பட்டிருந்தது என்றும், ஆனால், தற்போதைய நிலவரப்படி அது 5.6 விழுக்காட்டைத் தாண்டாது என்று கணிக்கப் படுவதாகவும் கூறியுள்ளது. உலக அளவிலான தேவை சுருங்கிவிட்டதாலும், இந்தியாவில் பருவ மழை பெரிதும் குறைந்துவிட்டதால் விவசாய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் காரணமாகவும் வளர்ச்சி விகிதம் சரிவடைவதாக வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய அரசுக்குக் கடன் வழங்குகிற இந்த வங்கி இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிடுவதோடு நிற்கவில்லை. இதைச் சமாளிக்கவும், வளர்ச்சிவிகிதத்தை அதிகரிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்ற “ஆலோசனையையும்” அளித்திருக்கிறது. அதாவது, இந்தியா தனது பொருளாதார “சீர்திருத்த” நடவடிக்கைகளை மேலும் வேகப்படுத்தினால் நிலைமை மாறும் என்பதே அந்த ஆலோசனை.

அண்மையில் இந்தியா மேற்கொண்டுள்ள சில சீர்திருத்தங்கள் வர்த்தக உலக உணர்வுகளை ஊக்கப்படுத்தி யுள்ளது, மேலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

அண்மையில் அரசு மேற்கொண்ட “சீர்திருத்த” நடவடிக்கைகள் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். உள்நாட்டுச் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண் டர் எண்ணிக்கை வெட்டு, விமானத்துறையில் அந்நிய நேரடி முதலீடு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மாதாமாதம் ஏலம் விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளைத்தான் ஆசிய வளர்ச்சி வங்கி குறிப்பிடுகிறது என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

இதில் சந்தேகம் வேண்டியதில்லை என்பது போல் வங்கியின் பொருளாதாரப் பிரிவு தலைவர் சாக்யோங் ரீ, “பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இறுக்கமான நிதிக்கொள்கைகளைக் கடைப் பிடிப்பது முதலீடுகளை அதிகரிப்பதற்கான சூழலை ஏற்படுத்தாது,” என்று கூறியிருக்கிறார்.

இதன் அர்த்தம், கடும் எதிர்ப்பின் காரணமாக அரசு வேறு வழியின்றி மக்களுக்குச் சில சொற்பமான சலுகைகளை அறிவிக்கிறது அல்லவா, அதைக்கூட இனிமேல் கைவிட்டு விடவேண் டும் என்பதுதான்.

முதலீட்டுக்குச் சாதகமான சூழலை மேம்படுத்துவதன் மூலமாகவும் சீர் திருத்தங்களை வேகப்படுத்துவதன் மூலமாக வும் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கச் செய்ய முடியும் என்றும் ரீ கூறியுள்ளார்.

ஏற்கெனவே டீசல், சமையல் எரிவாயு போன் றவற்றின் விலைக்கட்டுப்பாட்டை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று சில பொருளாதார வல்லுநர்களை விட்டுச் சொல்ல வைத் திருக்கிறார்கள்.

ஏழை எளிய மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்குக் கொஞ்சமும் உதவாத வளர்ச்சி விகிதத்தை முன்னிறுத்தித்தான் மக் கள் மீதான தாக்குதல்களை மன்மோகன் சிங் அரசு தொடுக்கிறது. அந்தத் தாக்குதல்களின் கடுமை போதாது என்று கூறும் இத்தகைய புள்ளி விவர அடியாள் வேலைகளை அம்பலப் படுத்தியாக வேண்டும்.

நன்றி :- தீக்கதிர், தலையங்கம், 12-10-2012.

0 comments:

Post a Comment

Kindly post a comment.