Friday, October 12, 2012

கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் பரிசளிப்பு விழா.!





கு.சின்னப்ப பாரதி மற்றும் கி.இராஜநாராயணன்



நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், கு. சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை சார்பில், 16 படைப்பாளிகளுக்குச் சிறப்பு விருதும், தலா ரூ.10,000 பொற்கிழியும் வழங்கப்பட்டன.

இந்த இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் முனைவர் பொ.செல்வராஜ் தலைமை வகித்தார்.

உலக சமுதாய சேவா சங்க சேலம் மண்டலத் தலைவர் உழவன் ம.தங்கவேல், சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அறக்கட்டளைச் செயலர் கா.பழனிச்சாமி தொடக்க உரையாற்றினார். விழாவில், முதன்மை விருதுடன், ரூ.1.50 லட்சம் பொற்கிழி தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டது. விருதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும், சிறந்த நூல்கள் எழுதிய வகையில்,

சிறுகதைப் பிரிவில்  கனடாவைச் சேர்ந்த அகில் என்கிற அகிலேஸ்வரன் சாம்பசிவம்  எழுதிய கூடுகள் சிதைந்த போது ,

கவிதைப் பிரிவில், சிங்கப்பூர் மா.அன்பழகன், என் வானம் நான் மேகம், நாமக்கல் கா.ஜெய்கணேஷ் எழுதிய  நட்பின் முகவரி,

சிறுவர் இலக்கியம் பிரான்ஸ் பத்மாராணி இளங்கோவன் ,, இலங்கை டாக்டர் ஓ.கே.குணநாதன் பறக்கும் ஆமை,

நாவல் பிரிவில் கன்னியாகுமரி மலர்விழி  எழுதிய ,தூப்புக்காரி ,
அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சிங்காரவடிவேல்  எழுதிய ஆத்தா கல்லறையில் ஒரு ஆவாரஞ்செடி,

கட்டுரைப் பிரிவில் ஈரோடு புலவர் செ.ராசு (வாழ்நாள் சாதனை விருது),

மலேசியா ராஜம் ராஜேந்திரன்  எழுதிய மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும் ,

லண்டன் சிவ.தியாகராஜா  எழுதிய தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்,

சிற்றிதழ் பிரிவில் இலங்கை கலாமணி பரணீதரன்  நடத்தும் ஜீவநதி,

கணினித் தமிழ்ப் பிரிவில் கோவை ஜெ.வீரநாதன்  எழுதிய இணையத்தை அறிவோம் ,

மொழி பெயர்ப்புப் பிரிவில் திருச்சி இலக்குவன் திருவரங்கம் (இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - இஎம்எஸ் நம்பூதிரிபாட்),  

சென்னை ஆர்.சௌரிராஜன் ,கு.சி.பா. நூல் மொழிபெயர்ப்பு,

இலங்கை உபாலி லீலாரத்ன (கு.சி.பா. சர்க்கரை நூல் மொழி பெயர்ப்பு,

உஸ்பெகிஸ்தான் லோலா.மக்துபா  கு.சி.பா. நூல் மொழிபெயர்ப்பு ஆகிய

16 எழுத்தாளர்களுக்கு தலா 10 ஆயிரத்துடன் பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி வழங்கினார்.

இந்த விருதுகளுக்கு மொத்தம் 401 படைப்புகள் வரப்பெற்றதில் சிறந்த 16 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டிருப்பதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, விழா மலரை சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கே.முத்துச்செழியன் வெளியிட, அதை லண்டன் எழுத்தாளர் ரா.உதயணன் பெற்றுக் கொண்டார்.

மேலும், எழுத்தாளர் லோலாமக்துபா உஸ்பெகிஸ்தான் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட கு.சி.பாவின் "பவளாயி' புதினத்தின் முதல் பிரதியை புதுதில்லி மொழி பெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.

உபாலி லீலாரத்னா சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட கு.சி.பா.வின் "சர்க்கரை' என்னும் புதினத்தின் முதல் பிரதியை இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா பெற்றுக் கொண்டார்.

 இவ்விரு புதினங்களையும் நீதிபதி ராமசுப்பிரணியன் வெளியிட்டார்.

தொடர்ந்து, எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, செல்வம் கல்வி நிறுவனங்களின் செயலர் கவீத்ராநந்தினி பாபு வரவேற்றார்.

அறக்கட்டளை உறுப்பினர் சி.ரங்கசாமி நன்றி கூறினார்.

அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நா.செந்தில்குமார் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.                                                               

கு.சின்னப்ப பாரதியின் செயல் போற்றத்தக்கது. படைப்பாற்றலால் பெற்ற செல்வத்தை, இதர படைப்பாளிகளுக்கு வழங்கிய சீரிய செயல் இதர வளர்ந்த எழுத்தாளர்களாலும் பின்பற்றத்தக்கதொரு பாதை.

ஒவ்வொருவரைப்போல் சில காலம் சிந்தித்து வேண்டியவர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு பட்டத்தை வழங்காமல், நல்ல நூல்களைப் படைத்தவர்களைத் தேர்ந்தெடுத்துச் சிறப்புச் செய்த மாண்பினையும் போற்றி, அவர் நீடு வாழ நெஞ்சாற வாழ்த்தி மகிழ்வோம்.





நன்றி :- தினமணி, 03-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.