Friday, October 12, 2012

மக்களாட்சியின் மாண்பு - மு.அ. அபுல் அமீன்




பொது வாழ்வில் தலைமைப் பொறுப்பில் இருப்போர் தன்னலம் மறுத்துப் பிறர் நலம் பேணும் பேராண்மை உடையவர்களாக இருக்க வேண்டும்.

இறை வேதமாம் திருக்குர்ஆனை இவ்வுலகோருக்கு இயம்பிய இனிய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னதை சொன்னபடி செயல்படுத்தி செம்மையாய் வாழ்ந்து வழிகாட்டினார்கள். ""நீங்கள் செய்யாதவற்றைப் பிறருக்குச் சொல்லாதீர்கள்'' என்று குர் ஆனும் கூறுகிறது.

நன்மையை நாடிய நபியின் தோழர்களும் நபி வழியை நழுவாது பின்பற்றி வழுவாது வாழ்ந்தனர்.

அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்குப் படிப்பினைகள். கிழிந்து தைத்த ஆடைகளை அணிந்து கொண்டிருந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களுக்கு எழுபதாயிரம் திர்ஹம் அன்பளிப்பு வந்தது. அந்த அன்பளிப்பில் ஒரு திர்ஹத்தை கூட தனக்காக எடுத்துக் கொள்ளாது அன்னை ஆயிஷா(ரலி) எழுபதாயிரம் திர்ஹம்களையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்ட நிகழ்ச்சியை உர்வா(ரலி) அறிவிக்கிறார்.

யமன் நாட்டை நீண்ட காலம் ஆண்ட ஹமீரி என்ற அரசர் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை தலையில் தரித்து  மினுக்கும் ஜரிகை பட்டு ஆடைகள் அணிந்து இடுப்பிலே தங்கப்பட்டை பளபளக்க முதல் கலீபா அமீருல் முஃப்மினீன் அபூபக்கர்(ரலி) அவர்களைச் சந்தித்தார். கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் ஒரு கம்பளி ஆடையை உடுத்தி இன்னொரு கம்பளிப் போர்வையைப் போர்த்தியிருந்தார்.

இக்காட்சியைக் கண்டு வியந்த ஹமீரி ஆடம்பரத்தையும், படாடோபத்தையும் களைந்தார். இவ்வாறு தலைமைப் பொறுப்பில் இருப்போர் தன்னலம் விடுத்து பொதுநலம் பேணிப் புகழ் பெற வேண்டும்.

""மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து காரியம் ஆற்றுவது என் வழிமுறை'' என்று ஏந்தல் நபி எடுத்துரைத்தபடி உமர்(ரலி) அவர்கள் தனிக்குழு, பொதுக்குழு என்று ஈரடுக்கு ஆலோசனைக் குழுக்களிடம் கலந்தாலோசித்து எந்த முடிவையும் மக்களுக்கு அறிவிப்பார்கள்.

திருமணம் புரிய விரும்பும் ஆண்கள் மணமகளுக்குத் தரும் மஹர் தொகை அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனால் ஆண்களின் திருமணம் தடைபட்டது. உமர்(ரலி) அவர்கள் இப்பிரச்னையை ஈரடுக்குக் குழுவில் விவாதித்து முடிவெடுத்து பொதுமக்களைப் பள்ளி வாசலில் கூட்டினார்கள்.

மேடையேறிய கலீபா, நபிகள் நாயகம் வழங்கிய மஹரை விட அதிக மஹரை யாரும் வழங்கக் கூடாது. இந்த ஆணையை மீறி வழங்கப்படும் மஹர் பறிமுதல் செய்யப்பட்டுப் பைத்துல்மால் பொதுநிதியில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்கள்.

உடனே ஒரு மூதாட்டி, ""உமரே! நீர் மேடையிலிருந்து இறங்கிவிடும்'' என்று கூறினார். கீழே இறங்கிய உமர் (ரலி) அவர்கள் அம்மூதாட்டி அருகே சென்று காரணம் கேட்டார்கள்.

அம்மூதாட்டி ""மனைவிக்கு நீங்கள் ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து நீங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்'' என்ற திருக்குர்ஆனின் 4-20வது வசனத்தை நினைவூட்டினார்கள்.

கலீபா அவர்களுக்கு நல்வழி காட்டியதாக அம்மூதாட்டியைப் பாராட்டினார். மூதாட்டி நினைவுபடுத்தியபடி அதிக மஹர் பெற மகளிருக்கு உரிமை உண்டு என்றும் பிரகடனப்படுத்தினார். மக்களாட்சியின் மாண்பை உயர்த்தினார்.      

நன்றி:- வெள்ளி மணி, தினமணி,  07-09-2012





0 comments:

Post a Comment

Kindly post a comment.