Friday, October 12, 2012

ஆடவர் மார்பில் தேவையற்ற “இரண்டு குமிழ்கள் “ எதற்காக ? - நெல்லை-சு.முத்து
உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், ஆடவர் மார்பில் பழைய காலணா வடிவத்தில் தேவையற்ற "இரண்டு குமிழ்கள்' எதற்காக?

 விடை யோசித்து வையுங்கள். அதற்கு முன்னதாக, உயிர்களின் ரகசியம் பற்றி அலசி விடலாம். உலகின் முதலாவது ஒரு செல் உயிரினம் "யூகாரியோத்'. அதன் படிம வளர்ச்சியில் ஆயிரம் கோடி அணுக்களின் தொகுப்பே இன்றைய மனிதன். இடைப்பட்ட காலத்தில் 350 கோடி ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன!

 தொல்காப்பிய அறிவியல் மரபுப்படி உயிரினங்கள் மெல்ல மெல்ல ஒவ்வொரு புலன் அறிவைப் பெற்றன. ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னரேயே "சிந்திக்கும்' நாலு கால் மனிதன் வாலுடன் தோன்றிவிட்டான். "ஹோமோ சேப்பியன்' இனம். ஆனால், 45,000 ஆண்டுகளுக்கு முன்புதான் "நிமிர்நிலை' மனிதன் ஆனான். இன்றும் மனித முதுகுத்தண்டின் நுனியில் அதன் அடையாளம் எஞ்சி நிற்கிறது.

 காலவட்டத்தில் அவனது "வாலு போச்சு', "கத்தி வந்தது'. அதுதான் "நாக்கு' என்ற கத்தி வந்தது. இன்று "கத்திக்கத்தி' வாய் போச்சு, வெள்ளைக்கார "வால்' (மார்ட்) வந்தும் ஆயிற்று.

 "வெள்ளையனே வெளியேறு' என்று போராடிய உண்மையான காந்தி பிறந்த நாளில், மகளிர் கல்லூரியில் "பெண்சுகம்' பேசி இருக்கிறார் ஒரு நரைத் தலைவர். சாமானியர் அல்லர். "பெண் காந்தி' உருவாக்கிய அரசின் அமைச்சர். வயதான மனைவியிடம் "இன்பம்' கிடைக்காதாம். இன்று நீதிமன்ற வழக்கில் "துன்பம்' அனுபவிக்க இருக்கிறார். ஏற்கெனவே ஒரு மாநில நீதிபதியே கணவன், மனைவியை அடிப்பதில் தவறு இல்லை என்கிற மாதிரி கருத்து சொல்லி விமர்சனத்துக்கு ஆளானதும் நாடறியும்.

 எப்படியோ, இந்துப் புராணங்கள் காட்டும் அவதாரங்கள் அனைத்தும் ஆண்களே. விவிலியமும் இதைத்தானே சொல்கிறது. ""இவ்வாறு கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார்'' (ஆதி ஆகமம், 27 - 29). ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஏவாள் உருவாக்கப்பட்டாள்.

 கடலில் தோன்றிய மச்ச (மீன்) அவதாரத்தில், கடற் குதிரைகள் அதிசயம் ஆனவை. ஆங்கிலத்தில் "சிங்னத்தைடுகள்' எனப்படும் தாடை ஒட்டுப் பிராணிகள். இந்த இனத்தில் ஆண் கடற்குதிரைகள்தாம் பிரசவிக்கின்றன. இவை பெட்டைகள் இடும் 1,500 முட்டைகளைக்கூட வயிற்றில் சுமந்து குஞ்சு பொரித்து விடுகின்றன. குழல் மீன்களின் ஆண் இனமும் இதே வகை. ஆண் திமிங்கலத்தின் கர்ப்பப் பையைச் சுற்றிலும் இன்றைக்கும் எஞ்சிய சூலக எலும்புக் கட்டு இருக்கிறது.

 ஆனால், தென் அமெரிக்காவில் பெட்டை எறும்புகள் மட்டுமே கொண்ட எறும்பு இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை மக்கிய காய்கறிகள் மற்றும் அழுகிய உயிரினங்களில் படரும் ஒருவகை பூஞ்சைக் காளான்களை உண்டு வாழும் இனம். இலைவெட்டி சாதி. "மைக்கோசிப்புருஸ் ஸ்மித்தி' என்று பெயர். ஆஸ்டின் நகரில் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் அன்னா ஹிம்லர் தலைமையிலான பேராசிரியர்கள் குழு, பனாமா முதல் அர்ஜென்டினா வரை பல்வேறு களங்களில் நடத்திய ஆராய்ச்சிகளின் முடிவு இது.

 அந்த இனத்தில் ராணி எறும்புகள் ஆண் உறவு இல்லாமலே படியெடுப்பு முறையில் குஞ்சுகளை ஈன்று எடுக்கின்றனவாம். செந்நிற எறும்புகளில் ஆண், பெண் பாலின உறுப்புகள் இருந்தாலுமே அவை உடலுறவு கொள்வது இல்லையாம். ஆச்சரியம்தான். அந்த இனத்தில் அத்தனை எறும்புகளின் டி.என்.ஏ. மரபணுக்களையும் பரிசோதித்ததில், அனைத்தும் ஒரே மாதிரி இருந்தன.

 உள்ளபடியே ஆண் - பெண் ஆகிய இருபாலருக்கும் இடையே மூளைத்திறனில் மட்டும் அல்ல, உடல் இயங்கியலிலும் வேற்றுமை இருக்கிறது. பூப்பு, மகப்பேறு, மாதவிலக்கு நிற்றல் ஆகிய மூன்று கட்டங்களில் மகளிர் தம் உடல் சுரப்பிகளின் "சுனாமி' தலைக்கு ஏறுவது இயல்பு.

 சமீபத்தில் "பிட்ஸ்பர்க் குழந்தைகள் மருத்துவமனை'யில் நடத்தப்பெற்ற ஆண் - பெண் ஆராய்ச்சி, வித்தியாசம் ஆனது. வழக்கம்போல சில எலிகளைப் பிடித்து, அவற்றை ஒருநாள் முழுவதும் பட்டினி போட்டனர். மறுநாள் பெண் எலிகளின் நரம்பு அணுக்களைத் தனியே பிரித்து எடுத்து, "திசு வளர்ச்சி' முறையில் ஆராய்ந்தனர். 24 மணி நேரத்துக்குப் பிறகும், பத்தில் ஐந்து நரம்பணுக்கள் சோர்வின்றிக் காணப்பட்டன. ஆண் எலிகளின் நரம்பணுக்களோ பத்தில் ஏழு நலிந்தேவிட்டன.

 இந்த ஆராய்ச்சி முடிவுகள் சமீபத்தில் "உயிரி வேதியியல் சஞ்சிகை' ஒன்றில் வெளிவந்தன. பட்டினி கிடக்கும் பெண் மூளை நரம்பணுக்கள் உண்ணா விரதத்தில் உயிரிழந்து விடுவது இல்லையாம். அவை புதிய "லிபிட்டுகள்' (கொழுப்புப் புரதங்கள்) தயாரிப்பில் ஈடுபடுகின்றன. ஆண் எலிகளின் நரம்பணுக்களோ பக்கத்தில் சொந்த நரம்பணுவையே பறித்துத் தின்னத் தொடங்கி விடுகின்றனவாம். அரசியல் சுண்டெலிகள் அண்டை அயலார் கிரானைட் நிலத்தைச் சுரண்டுவதுபோல!

 அது மட்டுமா, இன்றைக்கு ஆண் - பெண் ஈர்ப்பு பற்றியே பேசி வருகிறோம். கல்லூரி வாசலில், கடற்கரை மணலில் தலைவிரி கோலமாய்ச் சிலுப்பித் திரியும் முகவரி அறியாத மங்கையைப் பார்த்ததுமே நாயகனுக்குக் காதல் பிறக்கிறதாம். அவள் படித்தவள் என்பதால் எழுந்த மோகமா? பணக்காரப் பெண் என்கிற ஆசையா? குணவதி என்னும் தப்புக் கணக்கா? இதில் எதுவுமே சித்திரிக்கப்படாது. புறக்கவர்ச்சியே முதலில் அவன் மனதில் எழுந்த அகத் தூண்டுதல்.

 உயிரினத்தில் ஆண் - பெண் இரண்டுக்கும் இடைப்பட்ட மூன்றாம் பாலினம் ஆங்கிலத்தில் "இயுனிக்' என்று சுட்டப்படுகிறது. கிரேக்க மகாராணிகளின் அந்தப்புரங்களில் இந்தஇயுனிக்குகளே காவலர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். ஆண் உறுப்பு வெட்டப்பட்ட இனம்.

ஆளும் அரசர்களுக்கு இந்த வியூகம்கூட இல்லை என்றால் எப்படி? "இயுனே' என்றால் படுக்கை. எக்கீய்ன் என்றால் "காக்க'. தெரிந்தோ தெரியாமலோ அரவாணிகளுக்கு இதுதான் ஆங்கிலக் கலைச்சொல். ""ஒரு சார் விலங்கும் உள என மொழிப'' (மரபியல் 34) என்கிறது தொல்காப்பியம். இது மூன்றாம் பாலினத்தைக் குறிக்குமோ என்னவோ?

 மனித இனத்தில் "முப்பால்' அல்ல, "ஐம்பால்' இனங்கள் உள்ளன என்று கண்டு அறிவிக்கிறார் அன்னி ஃபௌஸ்டோ - ஸ்டெர்லிங் என்னும் ஆய்வாளர். போ"பால்', லோக்"பால்' பற்றி எல்லாம் அவர் தெரிந்துவைத்திருக்க வாய்ப்பு இல்லை. பிரௌனிங் பல்கலைக் கழகத்தில் உயிரியல் மற்றும் மகளிரியல் துறைப் பேராசிரியர். "அறிவியல்' எனும் ஆங்கில இதழில் அவர் வெளியிட்ட கட்டுரை உள்ளபடியே பரிணாமத் துறையின் புதுப் பரிமாணம்.

 விஷயத்துக்கு வருவோம். ஆணும் பெண்ணும் அற்ற இடைத்தரப் பாலினத்தவர்க்கு ஆண் உறுப்பு உண்டு. விந்தணுவும், முட்டைக் கருவும் உற்பத்தி செய்யும் ஒரு சினைப் பையும் இருக்கும். இவர்களை ஆங்கிலத்தில் "ஹெர்மாஃப்ரோடைட்டுகள்' என்கிறார்கள். என்ன, புது வகையான மோசடிக் கம்பெனி என்று எண்ணிவிடாதீர்கள்.

 வேறு ஒன்றுமில்லை. கிரேக்கத் தொன்மத்தில் "ஹெர்மிஸ்' ஆண் தெய்வம். புதன் கோளைக் குறிக்கும். "ஃப்ரோடைடட்' பெண் தேவதை. வெள்ளிக்கோளாம். இந்த இருவருக்கும் பிறந்தவன் "ஹெர்மா - ஃப்ரோடைட்டு'. கியுனத் மற்றும் டிக்கோர்த் ஆகிய மருத்துவர்கள் கருத்துப்படி மூன்றாம் பாலினத்தவரில் 55 சதவிகிதம் ஆண் உடற்கூறு தென்படுகிறதாம். "அரை ஆண்' என்பதால் தமிழில் அரவாணி. பண்டைய வானவியலில் "கேது' என்கிறார்கள். பிந்திய காலத்தில் இவர்களை "ஹிஜ்ரா' என்றும் சுட்டுகிறார்கள். உருது மொழியில் "ஹஜர்' என்றால் "தன் இனம் துறந்தவன்' என்று அர்த்தம்.

  இராமாயணத்தில்கூட இவர்களைப் பற்றிய செய்தி வருகிறது. வனவாசத்தின்போது ராமபிரான் தம்மைப் பின்தொடர்ந்த ஜனங்களை நோக்கி, ""ஆண்களும் பெண்களும் திரும்பிச் செல்லுங்கள்'' என்று அன்புக் கட்டளை இட்டாராம். இருபால் சாராத அரவாணிகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அங்கேயே ராமர் திரும்பி வரும் வரை 14 ஆண்டுகள் காத்து இருந்தார்களாம். அவர்களது பக்தியில் நெகிழ்ந்த ராமபிரான் ஆசி அருளினார். அதன் நினைவாகவே "பதாயி'த் திருவிழா.

 "டெஸ்டோஸ்டெரோன்' என்ற சுரப்பு நீர்மம் கொண்டது ஆண் இனம். இவர்தம் மரபணுக்களில் "எக்ஸ் - ஒய்' குரோமோசோம்கள் அடக்கம். எஸ்ட்ரோஜன் கொண்ட பெண் மரபணுக்களில் "எக்ஸ் - எக்ஸ்' இணை மட்டும்தான்.

 நாம் குறிப்பிட்ட ஹெர்மாஃப்ரோடைட்டுகளை உயிரியலார் "ஹெர்ம்' என்று சுருக்கி வழங்குகிறார்கள். இவர்களில் சிலருக்குத் தாடி வளரலாம். குரலும் கரகரப்பு ஆகலாம். ஆயின், சினைப் பை இன்றி, ஏனைய பெண் உறுப்புகளும் எக்ஸ் - ஒய் குரோமோசோம்களும் கொண்ட நான்காம் "போலி ஆண்' பாலினம் - "ஃமெர்ம்'. தமிழில் அரவாண்(ன்)கள் எனலாம்.

 ஐந்தாவதான "போலிப் பெண்' பாலினம் "ஃபெர்ம்'. இந்தத் திருநங்கையர்க்கு பெண் அங்கங்களும், சினைப் பையும் இரண்டு எக்ஸ் குரோமோசோம்களும் உண்டாம்.

 ஆக, மனித இனத்தின் படிம வளர்ச்சிக் காலத்தில் தந்தையரும்தான் குழந்தைகளுக்குப் பாலூட்டி வளர்த்தனர். பிற்காலத்தில் இயற்கையின் உந்துதல். இரை அல்லது பொருள் ஈட்டும் புற வாழ்க்கை பிரதானம் ஆனது. பால் ஊட்டும் அக வாழ்க்கை சமரசம் ஆனது. அதன் எச்சமாகவே இன்றும் ஆண் மார்பில் சுரப்பு தூர்ந்துபோன உறுப்புகள். உலகில் மனித இனத்தில் மட்டுமல்ல, ஆர்மடில்லோ தொடங்கி வரிக் குதிரைகள் வரை பெரும்பாலான உயிர்களுக்கும் ஆணின் பாலூட்டு உறுப்புகள் பரிணாம வளர்ச்சியின் ஓர் எச்சம்.

 எப்படியோ, ஆண் மார்பகம் என்பது நண்டுப் புற்று மாதிரியாம். உண்மையில் "கான்சர்' (புற்று) என்ற ஆங்கிலக் கலைச்சொல்லை "கான்கர்' என்றுதான் உச்சரிக்க வேண்டும். கார்க்கினோஸ் என்றால் நண்டு.

 அதனால் புற அழகு கெட்டுப் போகும் என்பதாலோ, வேலைக்குப் போக நேர்வதாலோ, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையாலோ எதிர்காலத்தில் பெண் இனத்திற்கும் இதே நிலை வரக் கூடும். தாய்ப்பால் ஊட்டாத பெண்களுக்கு இது ஓர் அறிவியல் எச்சரிக்கை.         

ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வோல்கா முதல் கங்கை வரை “  என்ற நூலினை நினைவூட்டுகிறது  நெல்லை சு. முத்துவின் இந்தக் கட்டுரை!

நன்றி :- தினமணி, 11-10-2012

                         


0 comments:

Post a Comment

Kindly post a comment.