Sunday, October 14, 2012

நினைவிலிருந்து நீங்காத திரு..நெ.து.சுந்தர வடிவேலு.


ஈ.வே.ரா.வுடன், திரு.நெ.து. சுந்தரவடிவேலு



.
கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில் எத்தனையோ கல்வியாளர்கள், கல்வித் தந்தையர், அறச் சிந்தனையாளர்கள் தோன்றி மறைந்துள்ளனர். ஆனால் கல்வித்துறையில் நிர்வாகப் பதவிக்கு வந்து செயற்கரிய பல செய்து அனைவர் எண்ணங்களிலும் நீங்காத இடம் பெற்றவர் ஒருவர் என்றால் அது நெ.து.சு. என்று  அன்போடு அழைக்கப்படும் நெ.து. சுந்தரவடிவேலுதான்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திண்ணைப் பள்ளிக்கூடம் கூட இல்லாத நெய்யாடுபாக்கம் என்னும் சிற்றூரில் தொண்டை மண்டல சைவ வேளாளர் மரபினரான துரைசாமி முதலியார் - சாரதாம்பாள் தம்பதியருக்கு 1912ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் முதல் மகனாகப் பிறந்தார் சுந்தரவடிவேலு. இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது தொடக்கக் கல்வி பாட்டனாரால் ஏற்பாடு செய்யப்பட்ட திண்ணைப் பள்ளிக்கூடத்தில்தான். மூன்றாம் வகுப்பு முதல் உயர்நிலைப் பள்ளிவரை காஞ்சிபுரத்தில் தங்கிப் படித்தார். இளம் வயதிலேயே பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். சாதிய வாழ்க்கை முறை கூடாது என்ற முடிவோடு இருந்தார்.

 1928ஆம் ஆண்டு சென்னை விக்டோரியா விடுதியில் தங்கி "இன்டர்மீடியட்' படித்தார். அங்கு படிக்கும்போது ஓ.வி. அழகேசன், சி. சுப்பிரமணியம் ஆகியோருக்கு நண்பரானார். விடுதி மாணவர்களில் பெரும்பாலும் காந்தியக் கொள்கையாளர்களாகவும் காங்கிரஸ் ஆதரவாளர்களாகவும் இருந்தனர்.

 படித்த காலத்தில் விடுதலைப் போராட்டத்திலோ மொழிப் போராட்டத்திலோ கலந்துகொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்தினார். கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. ஆனர்ஸ் படித்தார்.

 படித்து முடித்தும் 1933, 1934இல் வேலையில்லாது இருந்தார்.

 நண்பர் உதவியுடன் 1934 டிசம்பரில் உதவிப் பஞ்சாயத்து அலுவலர் என்ற அரசுப் பணியில் சேர்ந்தார். அக்காலத்தில் தேர்தலில் போட்டியிட மக்களிடம் ஆர்வம் இல்லாமல் இருந்ததால் சில கிராமங்களில் காலியாக இருந்த இடங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவர், உறுப்பினர்களை நியமித்தார்.

சில தலைவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தினார். பஞ்சாயத்து நிர்வாகங்களைச் சீரமைத்து வலுப்படுத்தினார். சாலைகள், பள்ளிக்கட்டடங்கள், குளங்கள், ஏரிகளை மக்கள் உதவியுடன் அரசின் நிதிகொண்டு சீரமைத்தார். பஞ்சாயத்துகளின் கணக்குகளை ஆய்வுசெய்து சரி செய்தார்.

 1938ஆம் ஆண்டில் இளம் துணைக் கல்வி ஆய்வாளர் பதவியில் சேர்ந்தார். வறுமையாலும் சாதியப் பாகுபாட்டாலும் பள்ளிக்கூடம் வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதில் வெற்றி கண்டார். பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பாது வீட்டிலேயே வேலைக்கு வைத்துக்கொண்ட பெற்றோரிடம் பேசி கல்வியின் அவசியத்தை உணர்த்தினார்.

அரசுப் பணியில் உயர் பதவிக்கான தகுதித் தேர்வுகளுக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பி.எட். இளங்கல்வியாளர் படிப்பை முடித்தார்.

1939ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த "மெட்றாஸ் ஸ்டேட்'டில் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மாவட்டக் கல்வி அலுவலராகச் சேர்ந்தார் நெ.து.சு.

 1954இல் பொதுக்கல்வி துணை இயக்குநராக நெ.து.சு. இருந்தபோது "குலக்கல்வி திட்டம்' என்று குற்றஞ்சாட்டப்பட்ட - முற்பகலில் படிப்பு, பிற்பகலில் தந்தைக்கு உதவியாக வீட்டில் வேலை செய்தல் - என்பதை நெ.து.சு. முதலில் எதிர்த்தார்.

முதல்வர் ராஜாஜி  அத்திட்டத்தைக் கொண்டுவந்தார். அந்தத் திட்டத்துக்கு ஆதரவாக ஆம்பூரில் நெ.து.சுவைப் பேச வைத்தார் ராஜாஜி. அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கவே முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ராஜாஜி.

காமராஜர் முதல்வரானார். பொதுக்கல்வி இயக்குநர் பதவி காலியானபோது நெ.து.சுவை இயக்குநராக நியமித்தார் காமராஜர். ராஜாஜியின் கல்வித் திட்டத்தை நெ.து.சு. ஆதரித்துப் பேசியதை  சிலர் சுட்டிக்காட்டினர்.

 ""ஒரு திட்டம் வருவதற்கு முன்னால் அரசுக்கு அதிகாரியால் ஆலோசனைதான் கூற முடியும். அந்த திட்டம் அமலுக்கு வந்தபிறகு அதை நிறைவேற்றுவதுதான் அவரது கடமை. எனவே அவரது செயலில் தவறு ஏதும் இல்லை'' என்று காமராஜர் பதில் அளித்தார். இப்பதவி ஏற்படுத்தப்பட்டு 100 ஆண்டுகளுக்குப் பிறகு அதில் அமர்ந்த முதல் தமிழர் நெ.து.சு.தான்.

 அவருடைய பதவிக்காலத்தில்தான் 1955-இல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 1958இல் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் 1961இல் கல்லூரிக் கல்வி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கிடச் செய்தார்.

 கிராமங்களில் விவசாயிகள் நெல் அறுவடையின்போது முதல் படியை சாமிக்கும் இரண்டாவது படியை ஊர்த் தொழிலாளர்களுக்கும் ஒதுக்குவதைப்போல பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டத்துக்காக மூன்றாவது படியையும் ஒதுக்கக் கோரி அதில் வெற்றியும் பெற்றார்.

 நெ.து.சு.வின் மனைவி பெயர் காந்தம்மாள். பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த குத்தூசி குருசாமியின் மைத்துனி. முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆசிரியர் கல்வியிலும் இளங்கலைப்பட்டம் பெற்றவர். ஆசிரியர், தலைமை ஆசிரியர், சென்னை மாநகராட்சிக் கல்வி அலுவலர் ஆகிய பதவிகளை காந்தம்மாள் வகித்தார். 2 முறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்துள்ளார். நெ.து.சு. - காந்தம்மாள் திருமணம்  எளிமையாக, சீர்திருத்த முறையில் நடைபெற்றது.

 நெ.து.சு.வின் கல்வி நிர்வாகப் பணிகளை பாராட்டி 1961ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

 1969-ல் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரானார். அன்றைய முதல்வர் மு. கருணாநிதியின் அனுமதியுடன் புகுமுக வகுப்பில் இலவசக் கல்வியைக் கொண்டுவந்தார். உயர் கல்விக்கும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் அதிக இடங்களை ஒதுக்கினார்.

 சென்னையிலேயே ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்துவதால் தொலைதூரங்களிலிருந்து வருவதில் மாணவர்களுக்கு உள்ள சிரமங்களை உணர்ந்து அந்தந்தக் கல்லூரிகளிலேயே பட்டங்களை வழங்கிக் கொள்ளலாம் என்று விதியை மாற்றினார்.

 பல்கலைக்கழகங்களில் பூட்டிவைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சிறந்தனவற்றை நூல்களாகப் பதிப்பித்து வெளியிட்டார்.

 புகுமுக வகுப்பிலும் பட்டப்படிப்பிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டுவந்தார்.

 1972-இல் மீண்டும் துணை வேந்தரானார். தன் வாழ்நாள் முழுவதும் கல்வி தொடர்பான பணிகளில் தன்னை முழுமூச்சுடன் ஈடுபடுத்திக் கொண்டார் நெ.து.சு.                                                       

நன்றி -தினமணி, 12-10-2012, எம்.சம்பத்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.