Monday, October 15, 2012

இலக்கண-இலக்கியப் பயில்முறை- “இலக்கணக் கொத்து “



17-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சுவாமிநாததேசிகரே இலக்கணக் கொத்தின் ஆசிரியராவர். இவர்,

திருநெல்வேலியைச் சேர்ந்த பெரும் புலவர் தாண்டவமூர்த்தி என்பார் மைந்தராகிய மயிலேறும் பெருமாளிடம் 12 ஆண்டுகள் தமிழ் கற்றார்.

செப்பறைப்பதியினராகிய சிவச்செல்வர் கனகசபாபதி என்பவரிடம் வடமொழி கற்றார்.

இரு பெரும் அறிஞர்களிடம் இரண்டு மொழிகளைக் கற்ற  சுவாமிநாததேசிகர்
தாமியற்றிய இலக்கணக் கொத்தில் கூறியுள்ள இலக்கண-இலக்கியப் பயில்முறை எந்நூல் நோக்குதற்கும் பொதுவான கருத்தாகும்.

ஆதலால் அவற்றை ஈண்டு அறிவோம்.

முதற்கண் அவர் கூறியுள்ள நூற்பாவை நோக்குவோம்.                    

""சூத்திரம் சிலசில நோக்குதற்கு அரிதேல்

முன்பின் பார்த்துப் பின்பே நோக்குக

விதிகளில் சிற்சில வெளிப்படா ஆயின்

உபலக் கணத்தினை ஓர்ந்தே உணர்க

தாம்முன் அறிந்ததற்கு ஈதுமா றாயின்

எந்நூல் விதியோ எனவே எண்ணுக

சிலநாள் பழகின் சிலவும் பலியா

பலநாள் பழகின் பலிக்கும் என்க

விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும்

விரையாது ஏற்கின் கருகாது என்க

வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி

வந்ததில் சிந்தையைச் சிந்தாது இறக்குக

நூலினை மீளவும் நோக்க வேண்டா

சூத்திரம் பல்கால் பார்க்கவே துணிக

மாரிபோல் கொடுப்பினும் மந்தனை விட்டுக்

கூரிய னுடனே கொடுத்தும் பழகுக

வேறுஒரு கருமத்தினை மனத்து எண்ணின்

ஆரியன் ஆயினும் அப்பொழுது ஒழிக

சொல்பயில் விப்பவன் எப்படிச் சொற்றனன்

அப்படி ஒழுகி அரும்பொருள் பெறுக''                                             

÷நூற்பாவின் விளக்கம் வருமாறு:

*  இலக்கியத்தில் ஓரிடம் விளங்காதாயின் அப்பகுதிக்கு முன், பின் பகுதியைப் படித்துப் பார்த்தால், அவ்விடம் இன்ன பொருளைத்தான் உணர்த்த வேண்டும் என்பது விளங்கும் அல்லது முன்பு கற்ற இலக்கியத்திலிருந்தோ அல்லது பின்பு கற்கப்போகும் நூல்களிலிருந்தோ விளங்காத இடம் விளங்கக்கூடும்.

2.  சிலவற்றிற்குப் பொருள் தெளிவாய்த் தெரியாவிட்டால் உப இலக்கணத்தால் பொருள் தெளியலாம்.

*   தாம் முன் உணர்ந்ததற்கு இப்பொழுது படிக்கும் செய்தி வேறுபடின், இப்படி ஓர் இலக்கியம் உண்டு போலும். அதன் பொருளைக் கூறுவதால் இவ்விடம் மாறுபட்டுள்ளதென்று உணரவேண்டும்.

*  ஓரிலக்கியத்தில் சில நாளையப் பயிற்சி ஏற்பட்டால் சில செய்திகூடத் தெளிவாகத் தெரியாது. பலநாள் ஆழ்ந்த பயிற்சி வேண்டும்.

*  ஓரிலக்கியத்தை விரைந்து படித்தால் அவ்விலக்கியத்தில் ஒன்றும் தெரியாது. விரையாமல் ஆழ்ந்து படித்தால் பொருள் தெளிவு உண்டாகும்.

*   கற்றதைத் தெளிவாய் உணரச் சிந்தனையை இறக்காமல், புதிதாகக் கற்பனவற்றில் சிந்தனையை இறக்குதலால் பயனில்லை என்க. எல்லார்க்கும் புதிதாகக் கற்பதில் கருத்து இறங்கும். கற்றதில்  கருத்து இறங்காது அத்தகைய உள்ளத்தை வலிந்து இறக்க வேண்டும்.

*   இலக்கியம் ஒன்றை முழுமையும் ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றுமுறை என்று படிப்பவர்கள் உள்ளனர். அங்கங்கே உள்ள செய்யுளை ஒருமுறை, இரண்டு முறை, மூன்றுமுறை என்று படித்து பொருளை வரையறுத்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

* மந்தன் ஒருவன் மாரிபோல் நமக்குப் பொருள் கொடுத்தாலும் அப்பொருளைக் கருதி அவனுடன் பழகாமல், கூர்மையான அறிவுள்ளவனிடம் கொடுத்தும் பழகுக.

*    இலக்கியம் படித்துக் கொண்டிருக்கும்போது பசி முதலிய வருத்தம் வந்தாலும், உணவு முதலியவற்றின் மேல் விருப்பம் வந்தாலும், வேறு காரணங்களால் கருத்து மயங்கினாலும் அப்பொழுதே படித்தலை விட்டுவிட்டு அவை தீர்ந்த பிறகு படிக்க வேண்டும்.

*    பிணி, வறுமை முதலியன இல்லாதிருத்தலும், பொருள், இளமை முதலியன பெற்றிருத்தலும் கற்றற்குக் கருவியாயினும் மிகவும் சிறந்த கருவி ஆசிரியன் கருத்தில் அருள்வர நடத்தல் ஒன்றே அரிய கருவியாம்.

÷மேற்கூறிய பத்து வகையால் கல்வி பயில்முறையை இலக்கணக் கொத்தாசிரியர் கூறியுள்ளார். அவர் கூறியவாறு இலக்கண-இலக்கியக் கல்வியைப் பயின்றால் நுண்மாண் நுழைபுலம் மிக்கவராய் விளங்கலாம்.                                                          


நன்றி:- தினமணி ;_ தமிழ்மணி:- முனைவர். அ.சிவபெருமான்

0 comments:

Post a Comment

Kindly post a comment.