Thursday, October 18, 2012

பெட்ரோலியப் பொருட்களின் வரிவிதிப்பைக் குறைத்து,. புகையிலை மற்றும் போதைப் பொருட்களின் வரிவிதிப்பைக் கூட்ட வேண்டும் !

மத்திய அரசு சமீபத்தில், ஒரே நேரத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் அளவுக்கும் கட்டுப்பாடு கொண்டுவந்துள்ளது.

டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களை சர்வதேசச் சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாகவும், நஷ்டத்தைக் குறைப்பதற்காகவே விலையை உயர்த்தியதாகவும் மத்திய அரசு கூறுகிறது.

ஆனால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் வருடாந்திர வரவு-செலவு அறிக்கைகளைக் கவனித்தால் அவை லாபகரமாக இயங்குவது வெளிப்படையாகத் தெரிகிறது.

லாபத்தின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு ஈவுத் தொகையாகவும் வழங்கி வருவதே இதற்குச் சான்று.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுவதாக அரசு கூறுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இங்கு எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நமது பக்கத்து நாடுகளில் பெட்ரோல் நம்மைவிடக் குறைவான விலையில் கிடைப்பது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.

பக்கத்து நாடுகளைவிட நம் நாட்டில் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதற்கு, அதிக வரி விதிக்கப்படுவதே காரணம். மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களைப் பணம் காய்க்கும் மரமாகக் கருதி அவற்றின் மீது 24 முதல் 26 சதவீதம் வரை வரி விதிக்கின்றன. இதற்குப் போட்டியாக மாநில அரசுகளும் கிட்டத்தட்ட அதே அளவு "விற்பனை வரி' விதிக்கின்றன.

அதாவது பெட்ரோலியப் பொருள்களின் மொத்த விலையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரியாக விதிக்கப்படுகிறது. இப்படி வரியைத் திணித்துவிட்டு, இழப்பு ஏற்படுவதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. இது சரியா என்ற கேள்வி எழுகிறது.

சிகரெட், மது உள்ளிட்ட உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கும், சொகுசுக் கார் உள்ளிட்ட ஆடம்பரப் பொருள்களுக்கும்தான் அதிக வரி விதிப்பது வழக்கம். ஆனால், அத்தியாவசியத் தேவையாக உள்ள பெட்ரோலியப் பொருள்களுக்கு புகையிலைப் பொருள்களைவிட கூடுதல் வரி விதிப்பது வித்தியாசமாக உள்ளது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களைப் பலி வாங்கும் சிகரெட்டுக்கு 65 முதல் 80 சதவீதம் வரை வரி விதிக்கலாம் என்று உலக வங்கி பரிந்துரை செய்துள்ள நிலையில்,

 நம் நாட்டில் சிகரெட் மீது அதிகபட்சமாக 38 சதவீதம்தான் வரி விதிக்கப்படுகிறது.

பீடிக்கு வெறும் 9 சதவீத வரிதான் வசூலிக்கப்படுகிறது. இதற்கு 40 சதவீதம் வரை வரி விதிக்கலாம் என உலக வங்கியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


புகையிலைப் பொருள்கள் மீதான வரியை அதிகரிப்பதன் மூலம், அரசுக்குக் கூடுதலாக ரூ.18 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பதன் மூலம், புகையிலையைப் பயன்படுத்தும் பழக்கம் குறையும். இதனால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதுடன், அதற்காக செலவிடப்படும் பெருமளவு மருத்துவச் செலவையும் மிச்சப்படுத்த முடியும்.
வேறு எந்தெந்த வகையில் வரி வருவாயை அதிகரிக்க முடியும் என்பதையும் ஆராய்ந்தால் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க வழி ஏற்படும்.

அத்தியாவசியப் பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதில் டீசல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், பெட்ரோலைப் போல டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டையும் முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

ஒருபக்கம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வரும் நிலையில், டீசல் விலை மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்தினால் விலைவாசி கடுமையாக உயர்ந்து நிலைமை மேலும் மோசமாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லா பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரியையும் குறைக்காவிட்டாலும், டீசல், மண்ணெண்ணெய் மீதான வரியை மட்டுமாவது குறைத்து விலை உயர்வைத் தடுக்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயரும்போதெல்லாம், மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் விலை உயர்வுக்கு இவர்களும் காரணம் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள்.

நன்றி :- தினமணி, 18-10-2012, கட்டுரை ஆக்கம் :- க.ஆனந்தன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.