Thursday, October 18, 2012

முழுமைபெற்ற வரலாறு -உதையை மு. வீரையன்

 எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
            இருந்ததும் இந்நாடே- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
             முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
             சிறந்ததும் இந்நாடே- இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
             வாயுற வாழ்த்தேனோ? -இத
வந்தே மாதரம், வந்தே மாதரம்
              என்று வணங்கேனோ ?  -மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
 
உலகில் எல்லா உயிர்களுக்கும் தோற்றமும் உண்டு, முடிவும் உண்டு. வளர்ச்சியும் உண்டு, தளர்ச்சியும் உண்டு; மனிதர்களுக்கு உடல் வளர்ச்சி என்பது முதுமையிலேபோய் முடிகிறது.

"மூப்பு' என்பது எல்லா உயிர்களுக்கும் உண்டு; என்றாலும் மனிதர்களுக்கே கடமைகளும், கவலைகளும் அதிகரிக்கின்றன. குடும்பத்துக்காக மட்டும் வாழ்வது முழுமையான வாழ்வாகாது. அதற்கும் அப்பால் மனித சமுதாயத்துக்காக வாழும்போதுதான் வாழ்க்கை முழுமையாகிறது. இதையே "வாழ்வாங்கு வாழுதல்' என்று அற நூல்கள் கூறுகின்றன.

நிலையில்லாத உலகத்தில் நிலையாக வாழ்வது எப்படி? நாம் மறைந்த பிறகும் நமது பெயர் நிலைத்து நிற்க வேண்டுமானால் புகழோடு வாழ வேண்டும். அந்தப் புகழே அழியாதது; அழிக்க முடியாதது. அதுவே நாம் வாழ்ந்த வாழ்க்கையின் எச்சமாகும். "தோன்றில் புகழோடு தோன்றுக' என்று திருவள்ளுவர் கூறியதும் அதுவேதான்.

சித்தர்களும், ஞானிகளும் அப்படித்தான் வாழ்ந்தனர். மக்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டனர். அவர்களது துயரங்களுக்குத் தீர்வுகாணச் சிந்தித்தனர். உடல் நோய்க்கு மருத்துவமும், உள்ள நோய்க்கு ஆன்மிகமும் மருந்தாகக் கண்டனர். சித்தர் பாடல்களும், சித்த மருத்துவமும் இப்படித்தான் உருவாயின.

அக்காலத்தில் மக்களின் "நிலையாமை'யைப் பற்றி எழுதாத இலக்கியங்களே இல்லை. ஆனால், முதுமையை எப்படி வாழ்ந்து கடப்பது என்பதுபற்றி இப்போதுதான் அதிகமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

இக்காலத்தில் அறிவியல் வளரவளர, மனித நேயம் குறைந்துகொண்டே போகிறது. பெற்றவர்களின் மீது பிள்ளைகளின் பாசத்தைக்கூட விலைகொடுத்து வாங்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுவிட்டது.

""முதியோர்களுக்கு உரிய மரியாதையை இளைஞர்கள் அளிக்க வேண்டும். நாட்டில் உள்ள முதியோரில் மூன்றில் ஒருவர் அவமதிப்புக்கு உள்ளாவதாக ஆய்வு தெரிவித்துள்ளது. இந்நிலை வருத்தத்துக்குரியது...'' என்று இந்தியாவின் முதல் மூத்த குடிமகன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

முதியோர்கள் கண்ணியத்துடன் வாழவும், அவர்களுக்கு மருத்துவ வசதி, பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்; உணர்வுப்பூர்வமான ஆதரவை முதியவர்களுக்கு அளிக்க வேண்டும்.

உறவினர்களின் புறக்கணிப்பு, அவமரியாதை, வசைச்சொற்கள், உடல் மற்றும் உணர்வுப்படியான துன்புறுத்தல் ஆகியவற்றால் முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 வயதைக் கடந்த முதியோர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

உலக முதியோர் தினத்தையொட்டி "ஹெல்ப் ஏஜ் இந்தியா' என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரணாப் முகர்ஜி இக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மோசமாக நடத்தப்படும் முதியவர்கள், அதுபற்றிப் புகார் தர முன்வருவதில்லை. தங்களின் குடும்ப மரியாதையைக் காப்பாற்றுவதற்காக அமைதியாக இருந்து விடுகின்றனர். மகன், மருமகள் போன்ற நெருங்கிய உறவினர்களால்தான் முதியவர்கள் கடும் துயரத்துக்கு ஆளாகின்றனர் என்று 20 நகரங்களில் முதியோர்களின் நிலைமை பற்றி "ஹெல்ப் ஏஜ் இந்தியா' ஆய்வு நடத்தியதில் தெரியவந்துள்ளது.

முதுமை என்பது வாழ்க்கையின் இரண்டாவது பகுதி என அவர்கள் உணர வேண்டும்; குடும்பத்தைத் தாண்டி பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய இந்தியாவில் இளைஞர்கள் மிகுதியாக இருந்தாலும், மூத்தவர்களே நாட்டை வழிநடத்திக் கொண்டு போகிறார்கள். அந்த இடத்தைப் பிடிக்க வேண்டிய இளைஞர்கள் அதற்குத் தயாராக வேண்டாமா?

ஒவ்வோராண்டும் அக்டோபர் முதல் நாள் ""உலக முதியோர் நாளாக''க் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி ஐ.நா. மக்கள்தொகை நிதியம் மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வளர்ந்துவரும் முதியோர் பிரச்னை ஒரு சவாலாக மாறிவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 2050-ஆம் ஆண்டில் உலகில் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைவிட, 60 வயதைக் கடந்த முதியவர்களே அதிக அளவில் இருப்பார்கள். அவர்களில் ஐந்தில் நான்கு பேர் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இப்போது இந்தியாவில் 9 கோடி முதியவர்கள் உள்ளனர். இவர்களில் 75 விழுக்காட்டினர் கிராமங்களில் வசிக்கின்றனர். அந்த 75 விழுக்காட்டில் 40 விழுக்காடு பெண்கள். அவர்களில் 55 விழுக்காடு விதவைகள். 2050-ஆம் ஆண்டு இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை 31 கோடியே 50 லட்சமாக இருக்கும்.

உலகத்தில் உள்ள எல்லா முதியவர்களுக்கும், வருவாய்க்கு உத்தரவாதம் அளிப்பதும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதும், அரசுகளுக்குப் பெரிய சவாலாகவே இருக்கும். இந்தியாவில் உள்ள முதியவர்களுக்கும் இவற்றைச் செய்து தர வேண்டியது மிகவும் முக்கியமானது.

இந்தியாவில் அமைப்புச் சாராத துறைகளில் ஏராளமானவர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்குச் சமூக அளவில் பாதுகாப்பு ஏதும் வழங்கப்படவில்லை.

எனவே, வயதான காலத்தில் முதியோர்களுக்கு வருமான உத்தரவாதம் வழங்கப்படுவதோடு, அவர்கள் வறுமையில் வாடுவதைத் தவிர்க்க விலைவாசிக்கேற்ற ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அமைப்பான ஐ.நா.வின் ஆலோசனைகளை ஏற்று, மத்திய - மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக அப்போதைக்கு அப்போது புதிய புதிய சட்டங்களை இயற்றிச் செயல்படுத்தி வருகின்றன. இயற்றிய சட்டங்களை மனப்பூர்வமாகச் செயல்படுத்திடாமல் நீர்த்துப்போகச் செய்யும் அதிகாரிகள்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

இந்தியாவில் மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அனைத்துத் தேவைகளுடன் நிதி மற்றும் உணவுப் பாதுகாப்பு, உடல்நலக் கவனிப்பு, உறைவிடம், ஆபத்திலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதற்காக முதியோர்களுக்கான தேசியக் கொள்கை கடந்த ஜனவரி 1999-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 2007-இன் படி பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களை அவர்களது வாரிசுகள் மற்றும் உறவினர்கள் பாதுகாத்துப் பராமரிப்பது கட்டாயமாகும். இதில் குறைபாடு காணும் மூத்த குடிமக்கள் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தீர்ப்பாயங்களை அணுகலாம்.

மூத்த குடிமக்களைப் புறக்கணித்துப் பாதுகாக்கத் தவறும் அல்லது ஆதரிக்காமல் விட்டுவிடும் வாரிசுகள், உறவினர்கள் இந்தச் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள். அவர்கள் வாரிசு அடிப்படையில் மூத்த குடிமக்களிடமிருந்து பெற்றிருந்த சொத்துகளை மீட்டு முதியவர்களிடமே மீண்டும் ஒப்படைக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இவர்களது நலனுக்கும், பாதுகாப்புக்கும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இந்தச் சட்டம் விரிவான அறிவுரைகளை வழங்கியுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சம் வரையிலான வருமானத்துக்கும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வருமானத்துக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

65 வயது வரையுள்ள மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும்படி காப்பீட்டு நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அவர்களுடைய பிரீமியக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதில் வெளிப்படையான அணுகுமுறை பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய மனுக்கள் நிராகரிக்கப்படுமானால் அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவில், முதியவர்களுக்காகத் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 60 வயது ஆண்களுக்கு 40 விழுக்காடும், 58 வயது பெண்களுக்கு 50 விழுக்காடும் பயணக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசுத் திட்டங்கள் பல இருந்தாலும், அவற்றைத் தெரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்பவர் எத்தனை பேர்?

அறியாமையும், கல்லாமையும் நிறைந்த நாட்டில் சட்ட திட்டங்களை யார் அறிவார்?

வயது முதிர்ந்த, உடல் தளர்ந்த நேரத்தில் அலைந்து திரிந்து இந்தச் சலுகைகளைப் பெறுவது அவர்களால் முடியக்கூடிய காரியமா?

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போனதும், பற்றும் பாசமும் குறைந்துகொண்டே போய்க் கொண்டிருப்பதும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த சங்கிலித் தொடர் ஆகும்.

இந்தச் சங்கிலியில் எங்காவது சிறு சிதைவு ஏற்பட்டாலும் சங்கிலித் துண்டு துண்டாக அறுந்துபோய் விடுகிறது. இதுதான் இன்றைய நிலை; இதைத் தொடர அனுமதிக்கலாமா?

நேற்றையக் குழந்தைகளே இன்றைய இளைஞர்கள். இன்றைய இளைஞர்களே நாளைய மூத்தவர்கள். இதை இளைய தலைமுறை அறிந்து, வயது முதிர்ந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். அவர்களுடைய சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும்.

குழந்தைகள் பிஞ்சாகவும்,
இளைஞர்கள் காயாகவும்,
முதியவர்கள் கனியாகவும்
மாறுவதே மனித வாழ்க்கையாகும்.
முதுமை என்பது முடிந்துபோன வரலாறு அல்ல;
முழுமைபெற்ற வரலாறாகும்.                                                                        

நன்றி :- தினமணி  17-10-2012




0 comments:

Post a Comment

Kindly post a comment.