Thursday, October 18, 2012

கடவுள் துகள் - ஒரு மீள்பார்வை ! - பொன்னி செல்வநாதன்

அண்மையில் விஞ்ஞான உலகின் உயரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று, ஹிக்ஸ் பாஸன் என்று பெயரிடப்பட்ட அணுத்துகள் வெற்றிடத்தில் இருப்பதற்கான தடயம்தான்.

1965-ஆம் ஆண்டு பிரபல விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் இந்தக் குறிப்பிட்ட அணுவைக் கண்டறிந்தார். எனவே இவருடைய பெயரைக் கொண்ட இந்த அணுத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இது பற்றிய ஆராய்ச்சி பெரும் பொருள்செலவில் இடைவிடாது தொடரப்பட்டு இன்று இந்த அணுத்துகள் இருப்பதற்கான தடயமும் கிடைத்த நிலையில் இதனைக் கடவுள் துகள் என்று (காட் பார்ட்டிகள்) விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

அண்ட சராசரம் உருவானது பற்றி பலதரப்பட்ட செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் இதனைக் கண்டுபிடிப்பதே ஒரு சவால் நிறைந்த செயலாகும் என்று விஞ்ஞான உலகம் குறிப்பிடுகின்றது. விஞ்ஞானத்தில் நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் போன்றவை அணுக்களாகும். இவை சாதாரணமாக கண்ணுக்குப் புலப்படாத அணுக்கள் என்பது நாம் அறிந்த செய்தியாகும். இந்த அணுக்கள் ஒன்றாகச் சேர்ந்து இணைவதற்குக் காரணமாக உள்ள பிரிதொரு அணுவின் கூட்டுச் சேர்க்கையொன்று நிகழ்வதாகவும் அந்த அணுத்துகளைக் கண்டறிந்தால் பிரபஞ்சம் உருவானதைக் கண்டறிய முடியும் எனவும் விஞ்ஞான உலகம் உறுதிப்பட நம்புகின்றது.

அதென்ன பிரபஞ்ச சிருஷ்டி? பல கோடி ஆண்டுகளுக்கு முன் அண்ட சராசரம் கும்மிருட்டுடன் இருந்ததாக வேதங்கள், உபநிஷதங்கள், நீதிநூல்கள், சித்தாந்த நூல்கள் மற்றும் பைபிள் பழைய ஏற்பாடு போன்றவற்றின் வாயிலாக அறிகின்றோம். இதனை விஞ்ஞான உலகமும் ஆமோதிக்கின்றது. அண்டமே இருண்டு காணப்பட்டபோது அங்கே ஒடுங்கியிருந்த கூட்டுச்சேர்க்கை ஒன்றுக்கொன்று பிரியாமலே பின்னிப் பிணைந்திருந்ததாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகின்றது. இந்நிலையில்தான் அக்கூட்டுச் சேர்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து அக்கூட்டுச் சேர்க்கை வெடித்துச் சிதறியதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட ஒரு வெடிப்புச் சத்தத்தின்போது பின்னிக்காணப்பட்ட கூட்டுச் சேர்க்கையானது, பிரிந்த நிலையில், ஒலியும் ஒளியும் தனித்தனியே வெளிப்பட்ட நிலையில் உருவாகியதுதான் நம்முடைய பிரபஞ்சம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

 இதனால் அண்டத்தைப் பிளந்துகொண்டு வெடித்துச் சிதறிய கோடானு கோடி அணுக்களின் இந்நிகழ்வுதான் "பிக் பேங்க் தியரி' என்று மேலைநாட்டு விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது. அதாவது அண்டத்தில் ஏற்பட்ட இந்த வெடிப்புச் சத்தம் அதனால் ஏற்பட்ட அணுச் சிதறல்களினால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்பதுதான்.

மேற்கண்ட இக்கூற்றினை நம்முடைய மூதாதையர்களும் ஆமோதித்துக் குறிப்பிட்டுள்ளதை பற்பல சாஸ்திர ஏடுகள் மூலம் காணலாகிறது. ஆம், அண்ட சராசரத்தில் அணுக்கள் வெடித்துச் சிதறியதன் வெளிப்பாடுதான் பிரபஞ்சத்தில் நாம் காணுகின்ற அனைத்துக் காட்சிப் பொருள்களென உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளது.

கணக்கிலடங்காத இந்த அணுக்கள் சிதறியபோது எத்தகைய நிலையில் இருந்தன என்பதை ஆராய்ந்த நம்முடைய இறையாளர்களும், பேரறிஞர்களும் இந்நிகழ்வை வருணிக்கின்றனர். அதாவது ஒரு கண்ணாடியாலான கிண்ணத்தைக் கீழே தவறவிடும்போது, அது எங்ஙனம் பல கனச்சதுரத் துண்டுகளாக உடைந்து சிதறிக் காணப்படுமோ அதே நிலைதான் இந்த அணுக்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

வெடித்துச் சிதறுண்ட நிலையில், அண்டசராசரம் எங்கிலும் பரவலாக ஒளி மற்றும் ஒலியின் வேகத்தை ஆட்கொண்டு அசைந்தாடிக் கொண்டிருப்பதே அணுக்களும் அணுக்கள் நிறைந்த பிரபஞ்சமும் என்பர் நம்முடைய இறை ஞானியர்கள் மற்றும் மறைந்த டாக்டர் வை.கணபதி ஸ்தபதி போன்ற மூத்த ஆய்வறிஞர்கள்.

இப்பேரறிஞர்கள் அவ்வாறு வெடித்துச் சிதறிய அணுக்களின் நிலையானது தன்வயப்பட்ட துடிப்பலைக்குள் கட்டுண்டு ஒளிர்வதாக நம்முடைய சாஸ்திரச் சுவடிகளில் சொல்லியிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, வெட்டவெளியில் அசைந்தாடி ஒளிர்கின்ற இந்த அணுக்களை இலகுவாகப் புரிந்து கொண்டிட நம்முடைய முன்னோர்கள் இதனைச் சுருக்கி தத்துவார்த்தமாகவும் கலை நயமாகவும் "அணுவின் நடனம்' என்று சொல்லியதையும் ஆய்வறிஞர்கள் ஆமோதிக்கின்றார்கள். அப்படியென்றால் நம்முடைய பிரபஞ்சத்தின் தோற்றமானது அளவியலுடன் அழகியலையும் பெற்று விளங்குகின்றது அல்லவா?

பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிகளின் மற்றொரு பக்கம் இதுபற்றி மேலும் என்னவெல்லாம் சொல்லப்பட்டுள்ளது, சொல்லப்படுகிறது அல்லது சொல்லப்பட்டு வருகிறது என்று ஆராய்ந்தால் பற்பல தகவல்கள் விரிந்துகொண்டே போகின்றன.

அவற்றில் தொன்மைவாய்ந்த நாகரிகத்தின் பின்னணியில் வந்த நம்முடைய மூதாதையர்கள் விட்டுச்சென்ற செய்திகள் மிகுந்து காணப்படுகின்றன. அவையாவும் இன்றைய விஞ்ஞானத்துடன் ஒத்துப் போவதையும் கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் திருமந்திரம், திருவாசகம், அருட்பிரகாச வள்ளலாருடைய அருட்பெருஞ்சோதி அகவல் போன்ற நூல்களைச் சொல்லிடலாம்.

இந்நூல்கள் யாவும் தொன்மைக் காலத்தில் இறையருளாளர்கள் மற்றும் மகரிஷிகளாலும் ஆக்கப்பட்டனவா என்பதையும் அறிவோம்.

நவீன தொழில்நுட்பச் சாதனங்களோ அல்லது கருவிகளோ இல்லாத காலத்தில் அணுத்திரள், பிரபஞ்சம் பற்றி இந்நூல்களில் விளக்கப்பட்டிருப்பது விந்தையிலும் விந்தைதான்.

குறிப்பாக, திருமந்திரத்தில் அணுவின் அளவையும் எடையையும் கண்டறிந்து விளக்கியிருப்பது மிகவும் வியப்பாக இருக்கிறது.

அணுவானது எவ்வளவு சிறியதாக உள்ளது என்பது திருமந்திரத்தில் "அணுவுள் அணுவும் அவனுள் அணுவும்: கணுவர நின்று கலப்பதுணரா
நனையிலி யிசானவவெனங்குமாகித்: தனிவற நின்ற சராசரம்தானே' என்று சொல்லப்பட்டுள்ளது.

உபநிடதத்தில் ""அணோர் அணீயான் மஹதோ மஹீயான்'' என்று அணுவைச் சிறியதற்கு சிறியதாகவும் - பெரியதற்கு பெரியதாகவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதனையே "விதைக்குள் மரமும், மரத்திற்குள் விதையும்' என்ற எளிமையான எடுத்துக்காட்டினால் சுட்டிக்காட்டுவர் சான்றோர்.

வை.கணபதி ஸ்தபதி அவருடைய "ஸ்தாபத்ய வேதம்' என்ற நூலில்

"அண்ட மூலமாய் பிண்ட மூலமாய் கொண்டிலங்கு ஒளி வெளியென....'

என்று ஒரு வாக்கியம் சொல்லப்படுகிறது.

அணுக்களால் நிறைந்த அண்டமே மூலமாக, அதிலிருந்து விளைந்திட்டதே பிண்டமாகவும் - அணுக்களால் ஆக்கப்பட்ட பிண்டமே மூலமாய் கொண்டு காட்சியளிப்பதே ஒளி நிறைந்த வெட்டவெளியென்று விளக்கிச் சொல்லிடலாம் என்கிறது.

சரியாகச் சொல்ல வேண்டுமாகில் சூக்குமத்திலிருந்து ஸ்தூலமும் ஸ்தூலத்திலிருந்து சூக்குமமும் உலவுவதே வெட்ட வெளியில்தான். அதாவது ஒளி நிறைந்த ஆகாசத்தில்தான் எனப்படுவதாயிற்று.

இங்கே அண்டம் அல்லது ஆகாசம் எனும்போது சிற்றாகாசம், பேராகாசம் என இரண்டையுமே நோக்கிட வேண்டும். சிற்றாகாசத்தில் ஏற்படுகின்ற ஒவ்வொரு நிகழ்வும் பேராகாசத்திலும் நிகழ வேண்டும் என்பதே பிரபஞ்ச விதியாகும்.

இதனையே உலகப்புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டின் "ஈ = எம்.சி. ஸ்கொயர்' என அதாவது சூக்குமம் = ஸ்தூலம் அதாவது அண்டத்திற்குள் பிண்டமும், பிண்டத்திற்குள் அண்டமும் இருக்கின்ற நிகழ்வினையே சுட்டிக்காட்டுவதாக கணபதி ஸ்தபதி தம்முடைய ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையே உபநிடதம் ஒன்றில் "அச்சின்ந்திய அவ்யக்த ரூபாய நிர்குணாய குணாத்மனே

சமஸ்த்த ஜகதா தார மூர்த்தயே, பிரம்மணே நமஹ' (சூர்ய சித்தாந்தம்) எனக் குறிப்பிடப்படுகிறது.

அருவமாகவும் உருவமாகவும் குணங்களுடையவனும் குணங்களற்றவனும்

அகிலத்திற்கெல்லாம் ஆதாரமானவனும், பிரம்மண நமஹ!

ஆகையால், பிரபஞ்ச சிருஷ்டியின் இரகசியத்தை உணர்ந்துகொண்ட நம்முடைய மூதாதையர்கள், பிரபஞ்சத்தில் ஏற்படுகின்ற நிகழ்வுகளைப் புரிந்து கொண்டதனால் "ஆடலான் வடிவத்தையே' மறைபொருளாக ஆக்கியுள்ளனர் என்பர் ஆராய்ச்சியாளர்கள்.

அது எப்படி என்றால், அண்டத்திலிருந்து பிளந்துகொண்டு எழுந்த ஒளிக்கு நெருப்பையும், வெடிப்புச் சத்தமாகிய ஒலிக்கு உடுக்கையையும், இருட்டிற்கு அபஸ்மாரன் என்ற அசுரனை உவமையாகக் கொண்டும், தூக்கிய இடப்பாதமும் ஊன்றிய வலது காலும் அணுவின் அசைந்தாடும் நிலையை உணர்த்திடவும், பிரபையில் சுற்றிக் காணப்படும் தீச்சுடர்களை அண்டத்தில் எங்கும் பரவியிருக்கின்ற அணுக்களாகவும் சுட்டிக்காட்டி, அவற்றுடன் பஞ்சபூதங்களின் ஆளுமையைக் குறிக்கின்ற வகையிலே ஐயுலோகத்தால் இவ்வடிவத்தை இயற்றி காட்டியுள்ளதைக் கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது.

எனவேதான், நம் நாட்டின் தொல்பழம் சிற்பி மயன் என்பான் "இவ்வடிவத்தை எழுதுதற்கரிய கோலம், எண்ணுதற்கு அரிய கோலம்...' என்று சொல்லி வைத்துள்ளான் போலும்.

ஆடல்வல்லானின் இவ்வரிய கோலத்தையும் அதனுள் பொதிந்துள்ள பிரபஞ்ச தேற்றத்தின் கருத்தாழமிக்க செய்தியையும் முழுமையாக உணர்ந்து அனுபவித்த மகான்கள் அநேகம் பேர் இருக்கின்றனர். இன்று அம்மகான்களின் வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாகில், தாம் கண்ட பரப்பிரம்மத்தை "தனிப்பெருஞ் சோதி... அருட் பெருஞ்சோதி' என்று சோதி வடிவினனாக உணர்த்திய இராமலிங்க அருட்பிரகாச வள்ளலார், "உணர்வும் அவனே உயிரும் அவனே...' என்று உணர்த்திய திருமூலர் - தாம் கண்ட ஒளியினை மெüனநிலையிற்றான் மக்கள் மனதிலே பதிய வைத்த பகவான் ரமண மகரிஷி போன்றோரைக் குறிப்பிட்டு சொல்லிடலாம்.

பிரபஞ்சத்திற்கே நாயகனாக விளங்குகின்ற நடராசனின் இவ்வழகிய திருக்கோலத்தை அதுவும் அண்டசராசரம் உருவானதன் காரணகாரியத்தை எடுத்துக்காட்டும் விதமாக அமைத்திருப்பது நம் நாட்டை விடுத்து வேறு எந்த நாடுகளிலும் காணமுடியாது என்று உறுதியாகச் சொல்லிடலாம்.

அப்படியென்றால் சிவலிங்க வடிவம் எதை குறிப்பிடுகின்றது என்ற கேள்வியும் இந்நேரத்தில் பலருக்குத் தோன்றிடலாம். சிவலிங்கம் எனப்படுவது சிவசக்தியின் ஐக்ய பாவமாகும். அதாவது சிவனும் சக்தியும் ஒடுங்கியுள்ள நிலையில் பிரபஞ்ச உற்பத்தியின் முன் காணப்பட்ட நிலையைக் குறிப்பதாகும் எனப்படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் "பிக் பேங்க் தியரி'யின் நிலையில் காணப்பட்ட இருண்ட அண்டத்தில் யாவும் ஒன்றுபட்டுக்கிடந்த நிலையைக் குறிப்பதாகும். இதனால்தான் லிங்க புராணமும் உலகில் காணப்படும் அனைத்து உருவங்களும் அருவுருவமாகிய சிவலிங்கத்திலிருந்து தோன்றுபவன' என்று சுட்டிக்காட்டுகிறது.

இவ்வரிய தத்துவத்தைப் புரிந்துகொண்டதனால்தானோ என்னவோ நம் இந்தியா பரிசாக அளித்த ஆளுயர நடராசனின் பஞ்சலோகத் திருமேனியை ஜெனிவாவில் உள்ள தன்னுடைய பிரம்மாண்டமான ஆராய்ச்சிக்கூடத்தின் முகப்பில் நிறுத்தி வைத்திருக்கிறது அணு ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (செர்ன்).                                                                             கட்டுரையாளர்: சிற்பக்கலை வல்லுநர். பொன்னி செல்வநாதன்

நன்றி :- தினமணி, 18-1-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.