Tuesday, October 16, 2012

நதிகளைத் தேசிய மயமாக்க வேண்டும் !




தண்ணீரும் காவிரியே தார் வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே'' என்று பாடினார் ஒளவையார். சோழவளநாடு சோறுடைத்து என்று ஒரு பழமொழியும் உண்டு. காவிரியின் வளத்தால் இங்கு ஒரு காலத்தில் நெல் விளைந்து குவிந்தது. சோற்றுக்குப் பஞ்சமில்லை. எங்கு பார்த்தாலும் அன்ன சத்திரங்கள். இன்றோ நிலை வேறு.

1972 வரை பஞ்சமில்லாமல் ஓடிவந்த காவிரி, அரசியல் பஞ்சை பராரிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டுத் தமிழ்நாட்டு விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். 1972-ல் காவிரி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் திரும்பப்பெற்று அன்றே தஞ்சை மக்களுக்கு மரண அடி கொடுத்தார்கள்.

 கபினி, ஹேரங்கி அணைகள் மைசூர் மாநிலத்தில் கட்டப்படும்போது தமிழக அரசியல்வாதிகள் குறட்டைவிட்டுத் தூங்கினார்கள்; எல்லாம் போயிற்று. காவிரி ஆறும் போயிற்று. கொஞ்சம் நஞ்சம் தண்ணீர் இழுத்து பூமியில் வைத்துக்கொள்ளும் தன்மை வாய்ந்த மணலை அரசியல் திருடர்கள் கொள்ளை அடித்தார்கள். எந்தக் கட்சி அரசியல்வாதிகளும் இதில் சளைத்தவர்கள் இல்லை.

 கடந்த பல ஆண்டுகளாக "கர்நாடகத்தில் “ யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதில்லை. மாதம் இவ்வளவு டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் கர்நாடக அரசு மதிப்பதில்லை.

 கர்நாடகத்தில் மழைபெய்து அணைகள் முழுக்கொள்ளளவும் நிரம்பி, உபரி தண்ணீரை எல்லா ஏரி, குளங்களிலும் நிரப்பி அதற்கும் மேல் நிரப்ப இடமில்லை என்றால் கர்நாடக அரசு "போனால் போகிறது' என்று ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு மேல் தண்ணீரைத் திறந்து விடுகிறது. அப்படி தண்ணீர் திறந்துவிடும்போது நமக்கு "குறுவை' இல்லாமல் போய்விடுகிறது. "சம்பாவும்' பயிர் செய்ய முடியாமல் கர்நாடகம் நம்மைத் தவிக்க வைக்கிறது. கர்நாடக அரசு சமீபத்தில் கூட்டப்பட்ட சிஆர்ஏ கூட்டத்தில் தமிழகத்துக்குத் திறந்துவிட இப்போது தண்ணீர் இல்லை என்று கூறிவிட்டது.

 இந்த ஆண்டு ஜனவரி 18-ம் தேதி கிருஷ்ணசாகர் அணையில் நீர்மட்டம் 119.8 அடியாகவும் நீர்க்கொள்ளளவு 417.8 டி.எம்.சி.யாகவும் இருந்தது. இந்நிலையில் இருந்து ஜனவரி 18-ம் தேதி அன்று வரை 3,200 கன அடிவரைதான் தண்ணீரை வெளியேற்றி இருக்கிறது. இடைப்பட்ட 130 நாள்களில் 35 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு தனது மாநிலத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி இருக்கிறது.

 அதே நேரத்தில் தமிழகம் தனது குறுவை சாகுபடிக்காக 18 டி.எம்.சி. தண்ணீரைக் கேட்டபோது எங்கள் அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடகம் கூறிவிட்டது. கபினி அணையில் இருந்தும் 10 டி.எம்.சி. தண்ணீரைக் கால்வாய் மூலம் அருகிலுள்ள ஏரி, குளங்களுக்கு கர்நாடக அரசு திறந்துள்ளது.

 ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில் இருந்தும்  தண்ணீரைத் தனது பாசனத் தேவைக்காக நிரப்பி உள்ளது. கர்நாடக அரசு செய்யும் கபட நாடகத்தால் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாமல் போய்விட்டது.

 நிறையத்தண்ணீர் இருந்தால் மட்டுமே 17-ம் தேதியும் திறக்க முடியும் என்றாலும் தமிழக அரசு மழையை நம்பித்  திறந்துள்ளது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தையும் தமிழக அரசையும் ஏமாற்றி வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தினமும் 2 டி.எம்.சி. தண்ணீரைக் கேட்டது. கர்நாடக அரசோ 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடுவதாகக் கூறியுள்ளது. அதையும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து திறந்துவிடாமல் கபினி அணையிலிருந்து திறந்துவிடுவதாகக் கூறியிருக்கிறது. பிறகு காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் 9,000 கன அடி மட்டுமேதான் திறந்துவிடுவோம் என்றது.

 கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால் நேராக தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துவிடும். ஆனால், சுற்று வழியாக கபினி நீரையும், நேராக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து கொஞ்சம் தண்ணீரும் விடுகிறது.

 பருவமழை பெய்யும்போது, காவிரி நீர்த்தீர்ப்பாயம் - 2007 - பிப்ரவரி ஐந்தாம் தேதி ஒரு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின்படி கர்நாடகம் வருடத்துக்கு 419 பில்லியன் கன அடிநீர் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். கர்நாடகம் 270 பில்லியன் கன அடி நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாட்டுக்கு ஒவ்வோராண்டும் 192 பில்லியன் கன அடி நீரை மட்டும் கர்நாடகம் தருகிறது.

 சமீபத்தில் உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர் மன்றம் கூடுகின்ற 19-ம் தேதி வரை 1 டி.எம்.சி. தண்ணீரை வெளியிட வேண்டும் என்று சொன்ன உச்ச நீதிமன்றத்தை "அப்படி திறந்துவிட முடியாது' என்று கர்நாடக அரசு மிகக் கடுமையாக எதிர்த்தது. நாம் தண்ணீர் கேட்டதற்காக கர்நாடக காங்கிரஸôர் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 உச்ச நீதிமன்றம், காலக்கெடு நிர்ணயித்து நாட்டிலுள்ள எல்லா நதிகளையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளது.

 தென்னாட்டில் உள்ள நதிகளை இவ்வாறு இணைக்கலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். 1. மகாநதி - கோதாவரி 2. புலி சிந்தலா - கிருஷ்ணா 3. கோதாவரி - கிருஷ்ணா (நாகார்ஜுன சாகர்) 4. கோதாவரி - கிருஷ்ணா (விஜயவாடா) 5. கிருஷ்ணா - (அலமாட்டி) பெண்ணார் 6. கிருஷ்ணா (ஸ்ரீசைலம்) பெண்ணார் 7. கிருஷ்ணா - நாகார்ஜுனசாகர் - பெண்ணார் (சோமசீலா) 8. பெண்ணார் (சோமசீலா) - காவிரி கிராண்ட் அணைக்கட்டு 9. காவிரி (கட்டளை வாய்க்கால்) வைகை - குண்டார் இந்த அணைத்திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டுடன் ஆந்திரத்தில் உள்ள ஆறுகளை இணைக்கின்றன.

 இந்த அணைத்திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது. ஆனால், அத்திட்டங்கள் எப்போது நிறைவேறுமோ தெரியாது. கர்நாடக மற்றும் கேரள, ஆந்திர அரசுகள், தமிழ்நாட்டுக்கு எக்காலத்தும் நன்மை செய்யாது.

 நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம் ஆகியவை தேசிய அளவிலான அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அதேபோல் நாட்டின் நீர் ஆதாரத்தையும் நிர்வகிக்க தேசிய அளவிலான அமைப்பு உருவாக்க வேண்டும்.

 அமெரிக்காவில் மிசிசிபி ஆறு அந்த நாட்டிலுள்ள 32 மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. ஆற்று நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக மாநிலங்களிடையே அங்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கடந்த 200 ஆண்டுகளாக மிசிசிபி ஆற்றுநீர்ப் பராமரிப்பு, நீர்ப் பங்கீடு அந்த நாட்டு ராணுவத்தின் பொறுப்பில் உள்ளது.

எனவே, இப்போது நிலவும் தண்ணீர் பிரச்னைகளைத் தீர்க்க நீர் ஆதாரங்களைத் தேசியமயமாக்க வேண்டும்.

 ஆறுகள் அணைகள் ராணுவம் அல்லது கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். 

அதன் மூலம் நமது நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும். 

தனிப்பட்ட அரசியல் கட்சிகளின் நலன்களைவிட தேசிய நலனே முக்கியம் என்ற உணர்வு நம் அனைவரிடமும் வேண்டும்.                                          

நன்றி :- தினமணி, கருத்துக் களம், கி.வெங்கடேசன், மன்னார்குடி, 24-09-2012




0 comments:

Post a Comment

Kindly post a comment.