Friday, October 19, 2012

ஒவ்வொரு முஸ்லிமினதும் முயற்சி, தியாகமே புனித ஹஜ் !இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகளில் ஒரு பிரதான கடமையாகவும் மனித உள, உடல், பொருள் என்பவற்றுடன் தொடர்புபற்ற ஒரு தனித் தன்மையான அமலாகவும் திகழ்வதனால் இதன் ஆரோக்கியத்தின் பலத்தைக் கொண்டே ஹஜ் பிரகாசிப்பதாக இஸ்லாம் சுட்டிக்காட்டுகின்றது

* இறை இல்லம் புனித கஃபாவை தரிசிக்கப் பொருள் வளமும், உடற் பலமும் கொண்ட முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் கடமையாக்கப்படடுள்ளது.

மனித குல ஒற்றுமை, சர்வதேச உறவு உலக சமாதானம் என்பனவற்றுக்கு வலுவூட்டி அவை உலகம் வாழும் வரை, நிலவக்கூடிய சக்தியுடையதுமான ஒரு உன்னத அனுஷ்டானமாகவும், தியாகம் பொறுமை கட்டுப்பாடு என்பவற்றின் சின்னமாகவும் ஹஜ்ஜை மேற்கொண்டு புனித மக்கமா நகரில் ஒன்று திரளுமாறு உலக முஸ்லிம்களுக்கு இறை அறை கூவல் விடுக்கும் சர்வதேச ஏகத்துவ மகாநாடாகவும் திகழ்கின்றது புனித ஹஜ் கடமை.

ஹஜ்ஜின் குறுகிய காலப் பயிற்சி நெறியின் மூலம் மனிதர்களின் பாவக் கறைகள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு ஆத்மீக லெளகீக வழிகாட்டல்கள் வழங்கப்பட்டு இறையச்சம் தக்வாவை உள்ளிருத்தி செல்வந்தர்களின் மனிதப் பண்புகளை மறுசீரமைக்கப்பட்டு அவர்களது

உணர்வுகள் இஸ்லாமிய ரீதியில் நெறிப்படுத்தப்பட்டு புடம் போடப்பட்ட தூய மனிதர்களாக அன்று பிறந்த பாலகர் போன்று புது மெருகூட்டப்பட்ட புது வாழ்வை எதிர்நோக்கி நேரான திசையில் பயணிக்க முன்னெடுக்கும் இறை வழியிலான தூய வாழ்வில் மார்க்கப் பரிணாமங்கள், பரிணமிக்கச் செய்வதுடன் சமுதாயத்திற்கொரு முன்மாதிரியான தலைவராகவும் சமூக நல வழிகாட்டியாகவும் திகழ வழிவகுப்பதுடன், ஈமானின் வளர்ச்சிக்கான பாசறையாகவும் விளங்கும் ஹஜ்,

இறை தெரிவான சிறப்பாக விளங்கும் நான்கு மாதங்களில், ஒன்றான துல்ஹஜ் மாதத்தில் ஆதி இறைவன் இல்லமான புனித கஃபாவை தரிசிக்க வருட மொருமுறை புனித ஹஜ்ஜின் புது வசந்தம் புவியெங்கும் பரவலாக தூயவன் அல்லாஹ் பரவச் செய்கின்றான்.

குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் புரியப்படும் இவ்வணக்கம், உள, உடலால் மாத்திரம் இறைவனுக்கான தொழுகை நோன்பு போன்ற இறை வழிபாடுகள் போலன்றி உடலுழைப்பால் ஈட்டிய செல்வம்,

உடலுறுப்புக்களின் இயக்கம் என்பவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் இறைவழியில், அர்ப்பணித்து தியாகத்தின் பாதையில் புரியப்படும் வணக்கம் என்பதனால் தியாகம், பொறுமை என இரு பண்புகளையும் அடியார் மீது பரீட்சிக்கும் ஒரு இறை வழிபாடாகத் நிகழும் ஹஜ் ஒவ்வொரு முஸ்லிமினதும் தியாகத்தையே வெளிக்காட்டுகின்றது.

முற்றுமுழுதாக உடற் பலத்திற்கும் செலவினத்திற்கும் பொருளாதாரத்தையே ஹஜ் கடமை சார்ந்து நிற்பதனால் பொருள் வாய்ப்பை முன்வைத்து லெளகீக சக்திகளை ஏற்படுத்துமாறு முஸ்லிம்களை ஊக்குவிப்பதுடன் ஆன்மீகமான ஹஜ் கடமைக்கும் துணை போகின்றதனால் ஆன்மீக வாழ்வு உலகியல் வாழ்வு இரண்டும் இணைந்திருப்பதான சிறந்த பயன்பாடுகளை வழங்கி நிற்கின்றது புனித ஹஜ் கடமை.

ஒவ்வொரு மனிதனதும் முயற்சி, நம்பிக்கை, பிரயத்தனம், உழைப்பு என்பவற்றின் அடிப்படையிலே இறை அருட்கொடைகள் பலதரப்பட்டதாக தீர்மானிக்கப்படுகின்றன. நீ தெண்டித்தால் நான் அருள் பாலிப்பேன் என்ற இறைவாக்கியம் இதனை உண்மைப்படுத்துவதுடன் தெண்டிப்பு என்பதற்கு உழைப்பிற்கான முயற்சி, பிரயத்தனம் போன்ற உடற் தொழிற்பாடுகளையே விளக்கி நிற்கின்றான். ( தெண்டிப்பு - தண்டனை )

இந்த அடிப்படையில் செல்வம் அபரிமிதமாக இறைவனால் வழங்கப்பட்ட செல்வந்தர்கள் மீது இஸ்லாம் முன்வைத்துள்ள பொருளாதார ரீதியிலான கடமைகளைப் புரிவதோடு வாழ்நாளில் ஒருமுறை பர்ளான ஹஜ்ஜையும் புரியுமாறும் அகிலத்தின் இரட்சகன் தன் முற்றுமுழுதான அதிகாரம் பலம் என்பவற்றைப் பிரயோகித்து கட்டளை பிறப்பிக்கின்றான்.

இறைவனது  கட்டளையை மீறும் பட்சத்தில் அதற்கான தண்டனையையும் விளக்கி நிற்கின்றது. அல்-குர்ஆன் + ஹஜ் செய்ய வசதி வாய்ப்புக்கள் இருந்தும் செய்யாதவர் யஹுதியாகவோ நஸாராவாகவோ மரணிக்கட்டும்.

(திர்மிதி பைஹகி) இறை எச்சரிக்கையால் உந்தப்பட்ட குறிப்பிட்ட தரப்பினர். இறைகட்டளைப்படி பணிந்து கட்டளையைத் தலைமேற்கொண்டு வாழ்வின் பலதரப்பட்டப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஒருசில நாட்களை ஒதுக்கி உழைப்பின் பாதையில் ஏற்பட்ட பிரச்சினைகள் பாரிய சிரமங்கள் அனைத்திற்கும் முகம் கொடுத்துத் தன் முயற்சி பிரயத்தனத்தின் பிரதிபலிப்பில் ஹலாலாக ஈட்டிய தன் செல்வத்தை அர்ப்பணித்து உறவுகளைப் பிரிந்து தொழிற்துறை சுகபோகங்கள் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் ஓய்வு நிம்மதி அத்தனையையும் இறை வழியில் தியாகஞ்செய்து இறை கடமையே தன் இலட்சியமென தியாகத்தின் பாதையில் ஹஜ்ஜை மேற்கொள்ள நாட்டங்கொண்டு இறைவனின் சிறப்புப் படைப்பினர் யாவருக்கும் கிடைக்காத இவ்வரிய பாக்கியத்தை தனக்கருளியதற்காக இறைவனைப் புகழ்ந்து நன்றி பாராட்டி நிற்கின்றான்.

இறைவனின் இலக்கு எதிர்ப்பார்ப்பை அடியாளர்கள் வெற்றி மயமாக்கினாலேயன்றி அடியாளர்களின் இலக்குகள் இறையருளில் வெற்றி காண முடியாது என்ற யதார்த்தத்தை உயர்ந்து தன் நாட்டம் நிறைவேற இறைவனை நாடி நிற்கின்றான்.

இதன் பிரகாரம் சுவர்க்கத்தை நோக்கி நகரும் தியாகப் பயணமாக இறை தெரிவில் ஹஜ் பிரதிநிதியாக முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமான இறை தூதைச் சுமந்து உன்னத இலக்கை நோக்கிப் பயணித்து நீண்ட தூர பயணக் களைப்புடன் மனித அலைகளினால் ஏற்பட்ட இட நெருக்கடிகள் போன்ற பல சிரமங்களுக்கு மத்தியிலும் இடத்திற்கிடம் நகரந்து தன் உள, உடல் ஆரோக்கியத்தை தியாகஞ்செய்து பல்வேறுபட்ட உள, உடல், பொருள் தாக்கங்களுக்கு பொறுமையைக் கடைப்பிடித்து அசத்தியத்தை அழித்து சத்தியத்தைத் தலைமேற்கொண்டு இறைவனை மண்டியிட்டு ஹஜ் கிரியைகளை இறையச்சம் மேலிட இனிதே நிறைவேற்றி பாவங்கள் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்டு ‘ஹஜ்ஜுன் மப்ரூர் -(சி விருப்பைப் பெற்ற தூய்மையானவர்களாக ஹஜ்ஜின் பயன்பாடுகள் அடியார் இதயங்களில் பல திருப்பங்களால் தக்வாவின் பிரதிபலிப்பில் செப்பினிடப்பட்டவர்களாக அன்று பிறந்த பாலகர் போன்று மீண்டு வருகின்ற தன் பிரதிநிதிக்கு இறைவன் அருளும் பரிசு சுவர்க்கமன்றி வேறில்லை என அல்-குர்ஆன் இயம்பி நிற்கின்றது.

இறைவன் செல்வ வளத்தைக் கொண்டு ஹஜ்ஜை செல்வந்தர்கள் மீது கடமையாக்கினாலும் ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானவர்களுடன் கணிசமான அளவு மத்திய தரப்பினரும் ஹாஜி ஒருவரின் உதவி ஒத்தாசை பாதுகாப்பிற்காகப் பரம ஏழை எளியவர்களும் கூட ஹஜ்ஜை முடித்து வருகின்றனர்.

பாத்திமா முஹம்மத் ஸாதிக்
மருதானை, பேருவளை.   நன்றி :- தினகரன், 19-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.