Friday, October 19, 2012

ஏழை மாணாக்கர்களுக்கு 25% தனியார் பள்ளிகளில் .....ஏன் ஒதுக்கப்படவில்லை ?



சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பொது விசாரணையில் பங்கேற்ற
(இடமிருந்து) ஆணையத்தின் உறுப்பினர் நினா நாயக், நடுவர் குழு உறுப்பினர் வி.வசந்திதேவி, ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா.

 தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் ஏழைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீடை ஏன் முறையாக அமல்படுத்தவில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேள்வி எழுப்பியது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவது, குழந்தைகளின் உரிமை மீறல் தொடர்பான புகார்கள் ஆகியவை தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சென்னையில் பொது விசாரணையை வியாழக்கிழமை நடத்தியது.

அப்போது, ஆணையத்தின் நடுவர் குழு உறுப்பினரான வி.வசந்தி தேவி பேசியது:

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்செய்யத் தேவையில்லை என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்திலிருந்து எந்த மாதிரியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன?

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செந்தமிழ்ச்செல்வி: இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்து கடந்த ஜனவரி முதலே தனியார் பள்ளி நிர்வாகிகளுக்குப்  பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரம் திரட்டப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின குழந்தைகள், ஆண்டுக்கு 2 லட்சம் வருமான வரம்புக்குக் கீழே உள்ளவர்களின் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரின் விவரங்கள் திரட்டப்பட்டன. பள்ளிகள் சமர்ப்பித்த விவரங்களின் படி, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளின் அறிமுக வகுப்புகளில் இந்தப் பிரிவுகளின் கீழ் 95 சதவீதத்துக்கும் மேலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன.

வசந்திதேவி: இந்த மாணவர்கள் கட்டணம் எதுவுமின்றி இலவசமாகக் கல்வி பயில்கிறார்களா?

செந்தமிழ்ச்செல்வி: ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அரசுப் பள்ளிகள் இருக்கும்போது, தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு எந்தவிதக் கட்டணத்தையும் திரும்ப வழங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை இலவசம் என்று கூற முடியாது. அவர்களுக்கான சேர்க்கை மட்டுமே உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர்
சாந்தா சின்ஹா: இந்தச் சட்டம் குறித்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

இதில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவீதம் பேர் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும்.

அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்குவதில் எந்தவித நிபந்தனையும் விதிக்கக் கூடாது.

வசந்திதேவி: இந்தச் சட்டமே குழந்தைகளின் கல்வி உரிமையை உறுதிசெய்யும் சட்டம்தான். தனியார் பள்ளிகளைப் பாதுகாப்பது அல்ல.

செந்தமிழ்ச்செல்வி: ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அரசுப் பள்ளியிருந்தால், அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு திருப்பி வழங்குமா என்று மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது.

அவர்களுக்கும் கட்டணத்தைத் திருப்பி வழங்கலாம் என்று மத்திய அரசிடம் இருந்து விளக்கக் கடிதம் இப்போதுதான் கிடைத்துள்ளது.

சாந்தா சின்ஹா: இந்தக் கடிதத்தையும், இதுதொடர்பான விவரங்களையும் எங்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

வசந்திதேவி: அதிகாரிகளின் பதிலிலிருந்து தமிழகத்தில் இந்த ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமே அமல்படுத்தப்படவில்லை என்பது தெரிகிறது.

அந்த ஆணையத்தின் தமிழ்நாடு பிரதிநிதி ஹென்றி டிஃபேன்: இது தொடர்பாக தனியார் பள்ளிகளிடமிருந்து எந்தவித உறுதிமொழிப் பத்திரத்தையும் மே மாதம் வரை அதிகாரிகள் பெறவில்லை.

சாந்தா சின்ஹா: இவ்வாறு உறுதிமொழிப் பத்திரத்தை வாங்குவதன் மூலம் 25 சதவீத இடஒதுக்கீட்டை கண்காணிக்கலாம் அல்லவா?

செந்தமிழ்ச் செல்வி: இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் சில குழப்பங்கள் இருப்பது உண்மைதான்.

வரும் கல்வியாண்டிலிருந்து இதை சரிசெய்துவிடுவோம்.

சாந்தா சின்ஹா: தனியார் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரைச் சேர்ந்த 25 சதவீத மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவது தொடர்பாக விரைவில் வழிகாட்டி விதிமுறைகளை மாநில அரசுக்கு அனுப்புகிறோம். அதை நீங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

நன்றி :- தினமணி, 19-10-2012.

0 comments:

Post a Comment

Kindly post a comment.