Friday, October 19, 2012

அரசியல் சினிமா- தாய்- புரட்சி பெற்றெடுத்த தாய் !முனைவர் சு.இரவிக்குமார்-

1905ஆம் ஆண்டில் நடந்த ருஷ்யப் புரட்சியின் முதல் காலகட்டத்தில் நிகழ்கிறது இந்தக் கதை.

அரசியல் பற்றி ஏதும் அறியாத வள் அந்தத்தாய். அவள் கணவன் முரடன், குடிகாரன், அவளை அடிப்பதில் சுகங்காண்பவன். அவர்களுக்கு ஒரு மகன். பெயர் பாவேல். தந்தையும் மகனும், ஒரே தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்ற குடும்பம். தந்தைக்குக் குடிக்கப் பணம் தேவை. அதற்காக அவன் கறுப்பு நூற்றுவர் என்கிற ரகசியக் குழுவில் சேர்கிறான். அது எதிர்ப்புரட்சிக் கும்பல். புரட்சிகர இயக்கத்தினரை அடக்குவதற்காக அன்றைய ஆளும் ஜார் மன்னனால் உருவாக்கப்பட்ட ரகசி யப்படை. வன்முறையான கூலிப்படை.

ஒரு முறை தொழிற் சாலை வளாகத்தில் தொழிலாளர்களுக்கும் கறுப்பு நூற்றுவர் படைக்கும் மோதல் வெடிக்கின்றது. அந்த மோதலின் போதுதான் மகன் பாவேல் வேலை நிறுத்தக்காரர்களில் ஒருவன் என்று தந்தை கண்டறிகிறான். மோதலில் பாவேலின் நண்பன் ஒருவனால் சுடப்பட்டு, பாவேலின் தந்தை இறக்கிறான்.

பிறகென்ன, ஆயுதங்கள் வைத்திருக்கிறானா எனத் தேட போலீஸ் பாவே லின் வீட்டுக்கு வருகின்றது.தாய் தன் அறியாமையால் விசாரித்து விட்டு மகனை விடுதலை செய்து விடுவார்கள் என நம்பிப் போலீ சில் ஒப்படைக்கிறாள். ஆனால் பாவேல் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டு, கொடுமையான சிறைத் தண்டனை வழங்கப்படுகிறான். கணவனையும் இழந்து, மகனையும் பிரிந்து தாய் கலங்குகிறாள்.

ஆனால் ஜாரிய அரசின் கொடுமையின் வேகம் அவளை மெதுவாகப் புரட்சிகர அரசியல் உணர்வு கொள்ளச் செய்கிறது. அவள் பாவேலின் நண்பர்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்கிறாள். அவர்களுக்குச் சிறு சிறு வேலைகளில் உதவி செய்கிறாள். அவர் களே பின்னர் பாவேல் சிறையிலிருந்து தப்பிக்க உதவுகின்றனர்.

மே தினம் வருகின்றது. தொழிலாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது. அங்கே தான் மகனைத் தாய் மறுபடி யும் சந்திக்கிறாள். தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தைச் சீர்கு லைக்க ஜாரிய அரசாங்கத்தின் கொசாக்குகள் படை எனப்படும் குதிரைப்படை வருகின்றது. போராட்டக்காரர்களைக் கண்மூடித் தனமாகத் தாக்குகின்றது. சுற்றிச் சுற்றித் தாக்குகின்றது. போரில் மகனும் தாயும் பலியாகின்றனர்.

1907 ஆம் ஆண்டில் வெளிவந்த ருஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்துலக மேதை மாக்சிம் கார்க்கியின் தாய்  உலகப் புகழ் பெற்ற நாவலாகும்.

உலகெங்கிலுமுள்ள புரட்சிகர இலக்கியவாதி களுக்கெல்லாம் உத்வேகம் தருகின்ற நாவலாகும். 1905ம் ஆண் டில் ருஷ்யாவில் நிலவிய புரட்சிகரச் சூழலை, புரட்சிகர வாழ் வின் சாரத்தை, புரட்சி எனும் பெருநதியில் இணைந்த தாய் போன்ற ஈரமுள்ள மனித நெஞ்சங்களின் கதையை அற்புதமான எழுத்துச் சிற்பமாக வடித்த நவீனம் கார்க்கியின் தாய் ஆகும்.

எழுத்துலகில் புகழ்பெற்ற புரட்சிகர நவீனமான தாய் திரையுலக வரலாற்றிலும் தன் முத்திரையைப் பதித்த அரசியல் படமாகும். சோவியத் ருஷ்யாவில் போர்க்கப்பல் போதம்கின் படத்தை இயக்கி உலகப் புகழ்பெற்ற இயக்குநராகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட ஐசன்ஸ்டைனுக்கு அடுத்து, தாய் (1926) படத்தின் மூலம் உலகத் திரைப்பட வரலாற்றில் தனக் கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார் புடோவ்கின் (1893-1953).

இதே தாய் நாவல் 1936 ஆம் ஆண்டில் புகழ் பெற்ற இடதுசாரி நாடக ஆசிரியரான பெர்ட்டோல்ட் பிரெக்டினால் நவீன நாடகமாகவும் நடிக்கப்பட்டுப் புகழடைந்த ஒன்றாகும்.

புடோவ்கின் சோவியத் திரைப்பட உலகின் ஐசன்ஸ்டை னுக்கு அடுத்து இரண்டாவது பெரிய இயக்குநராக மதிப்பிடப்படுப வர். ஒரு இரசாயனவியல்வாதியாகப் பயிற்சி பெற்ற புடோவ்கின் தனது வேலையாகத் திரைப்படத் துறையைத் தேர்ந்தெடுத் தவர். அதற்குக் காரணமாக அமைந்தது கிரிஃபித்தின் புகழ் பெற்ற படமான சகிப்பின்மை (-1916 ) படத்தை அவர் 1920 ஆம் ஆண்டில் மாஸ்கோ நகரத்தில் காண நேர்ந்ததிலிருந்து, தனது வாழ்வையும் திரைப்பட உலகோடு இணைத்துக் கொண்டார்

 புடோவ்கின். மாஸ்கோ வில் அரசுத் திரைப்படப் பள்ளியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் குலாஷவ்வின் பட்டறையில் தம்மைப் பட்டை தீட்டிக் கொண்டார். அங்கே தான் புகழ் பெற்ற பல தொகுப்புக்களைப் பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டன.

1924, 1925 காலகட்டத்தில் பல சோவியத் திரைப்படத் தயாரிப்புக்களில் உதவியாளராகத் தம் அனுப வத்தை வடித்தெடுத்துக் கொண்ட புடோவ்கின், மூளை யின் பொறியமைப்புக்கள் ( 1926 ) என்ற புகழ்பெற்ற விஞ்ஞானி பாவ்லோவ் செய்த பரிசோதனையை அடியொற்றிய படம் ஒன்றை இயக்கினார். குலா ஷவ் பட்டறையில் தாம் பயின்ற தொகுப்புக்கலை
உத்திக ளைப் பயன்படுத்தி அந்தப் படத்தை இயக்கினார் புடோவ் கின்.

ஐசன்ஸ்டைன், புடோவ்கின் இருவருமே குலாஷவ் வின் திரைப்பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள். புடோவ்கின் சிறந்த நடிகராகவும் திகழ்ந்தவர்.

படத்தை வெகு அழகாகப் படம் பிடித்திருந்தவர், கோலனவ்யா. படம் புடோவ்கின்னாலேயே தொகுக்கப்பட்டது. புரட்சிகர நிகழ்வின் பல்வேறு போக்குகள் புடோவ்கின் னால் ஒரு கவித்துவ அழகோடு தொகுக்கப்பட்டது. ஐசன்ஸ் டைன் புரட்சிகர நிகழ்வுப் போக்குகளை மையப்படுத்தி, மனிதர்களை அதனுள் ஊடாட வைத்தாரென்றால், புடோவ் கின், மனித நாடகத்திற்கு முக்கியத்துவமளித்தார். தாய், தந்தை, மகன், நண்பர்கள், மற்றும் கதை நிகழுகின்ற சூழல் என்று தம் கட்டமைப்பை வடிவமைத்தார்.


படத்தின் காட் சித் தொகுப்புக்கள் புடோவ்கினின் மேதைமையை உலகுக்குப் பறைசாற்றின. ஐசன்ஸ்டைன் பாணியில் அல்லாமல் தனிமனித வாழ்வியலின் ஊடாகப் புரட்சிகரச் சூழலைச் சித்தரித்தவர் புடோவ்கின். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்பட விமர்சகர் லியான் மௌஸினாக் இரு வரைப் பற்றியும் இவ்வாறு கூறினார், ஐசன்ஸ்டைனின் படங்கள் அலறலை ஒத்துள்ளனவென்றால், புடோவ்கி னின் படங்கள் பாடலை ஒத்திருக்கின்றன.

கிரிஃபித்தின் படங்களில் வரும் மக்கள் திரள் நடவ டிக்கைக் காட்சிகளில் காணப்படும் முரண்பட்ட காட்சி யமைப்புக்களை புடோவ்கின் ஆழ்ந்து கற்றார். அது புடோவ் கினுக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அது போலவே வகைமாதிரிப் பாத்திர வார்ப்புக்களையும் அவர் கிரிஃபித்தின் பாணியிலிருந்தே உருவாக்கினார். மேலும் கிரிஃபித்தின் படங்களில் காணப்படும் மனித உணர்வு நிலை வெளிப்பாட்டைத் தன் படங்களிலும் அழுத்தமாக வெளிப்படுத்தினார் புடோவ்கின்.

ஆனால் அதே நேரம் ஐசன்ஸ்டைனின் போர்க்கப்பல் போதம்கின் படத்தை, மிக உயர்வாக மதிப்பிட்டார் புடோவ் கின். கிரிஃபித்தின் சகிப்பின்மை (ஐவேடிடநசயஉந -1916) படத்திற்குப் பிறகு தனக்கு நேர்ந்த அதி முக்கியமான திரைப்பட அனுபவத்தை போர்க்கப்பல் போதம்கின் வழங்கியது என்றார் புடோவ்கின். படத்தின் இறுதியில் நிகழும் பாவேல் சிறையிலிருந்து தப்பிக்கின்ற காட்சியும் ஆற்றின் ஐஸ் கட்டிகள் உடைந்துருகி நகர்வதையும், அழகான கவித்துவமாகத் தொகுத்திருக்கிறார் புடோவ்கின். தனது தாய் அனுபவத்தோடு தன் திரைப்படக் கோட்பாடுகளை விளக்கி, அவர் எழுதியுள்ள நூலான திரைப்பட நுணுக்கங்களும் திரைப்பட நடிப்பும் ( 1926  )
 என்கிற நூல் திரைப்படக் கலையைப் பயில்பவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும்.

தாய் படத்தில் முக்கியப் பாத்திரமான தாயாக நடித்த வேரா பரனாவ்ஸ்கியாவின் அற்புதமான நடிப்பு படத்துக்கு உரம் சேர்த்த ஒன்றாகும். அது போலவே பாவேலாக நடித்த நிகலாய் படாலவ்வின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதாகும். புடோவ்கின்னும் அதிகாரியாகச் சிறு வேடத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

அரசியல் இலக்கிய வரலாற்றைப் போல, அரசியல் நாடக வரலாற்றைப் போல, அரசியல் சினிமா வரலாற்றிலும் தாய் நிரந்தர இடம் பிடித்திருப்பவள்.


நன்றி :- தீக்கதிர், 19-10-2012.

தாய் வரலாற்று உண்மைக் ம்கதையைப் படித்திட ...,

தாய்-மக்சீம் கார்க்கி  தமிழாக்கம் :- தொ.மு.சி. ரகுநாதன்

NCBH முதல் பதிப்பு , மே, 2003

விலை ரூபாய் 150/-  பாவை பிரிண்டர்ஸ், ( பி )லிட்,
142, ஜானி ஜான் கான் ரோடு,
இராயப் பேட்டை, சென்னை-600 014.
044/ 28482441    044/ 28482973

0 comments:

Post a Comment

Kindly post a comment.