Friday, October 19, 2012

என்றென்றும் அமைதி - அபி.

உலகச் சுகங்களால் நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தர முடியாது. வறுமையில் வாடும்போது "எனக்கு சொத்தும் சுகமும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்' என்று நினைக்கிறோம். எப்படியாவது சொத்து சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சியும் செய்கிறோம். ஆனால், அளவுக்கு அதிகமான சொத்து சேர்க்கும்போது, அதுவே நம் நிம்மதியைப் பறித்துவிடுகிறது.                         

சிலர் தங்களுடைய சோகங்களை மதுபானத்தில் மூழ்க வைத்துச் சாகடிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், மதுவின் சோகம் தீரும்போது மீண்டும் சோகங்களுக்கே திரும்பி விடுகிறார்கள்.

வாழப் பிடிக்காமல் வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக இருக்கக்கூடாது நம்முடைய வாழ்க்கை. தவறான, அர்த்தமிழந்த நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்க நம்மால் முடியும். எப்படி?        

இயேசுவின் அன்பு நம் வாழ்வில் கடந்து வரும்போது உருக்குலைந்த நம் வாழ்வு உயிர்பெறும். அந்த இறையன்பை நாம் சுவைத்து, அவரை உண்மையாக ஏற்று வாழத் தொடங்குவதே அர்த்தமுள்ள வாழ்வுக்கான ஒரே வழி.  

வாழ்க்கைப் போராட்டங்களிலும் வறுமையின் அகோரப்பிடியிலும் அமைதியை இழக்காமல் வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்வோடு வாழ்ந்து இவ்வுலகிலிருந்து விடை பெற்றவர்கள் ஏராளம். அவர்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?

இயேசுதான். உங்கள் வாழ்விலும், நிறைவான, முழுமையான அமைதியைத் தர அவரால் மட்டுமே முடியும்.

 இயேசு, ""நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் (யோவான் 14:1)'' என்று கூறினார்.         

இயேசுவின் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள நம்முடைய சாதியோ, மதமோ, கடந்த கால வாழ்வோ ஒரு தடையல்ல. ஏனென்றால், அவரே உலகின் மீட்பர். அவரால் மட்டுமே உலகிற்கு அமைதியைத் தர முடியும்.  

 ""சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார் (கொலோ 1:20). 

 எனவே, நம்முடைய தவறுகளை அறிக்கையிட்டு ஆண்டவராகிய இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டால் அவர் அருளும் அமைதியும் என்றென்றும் நம்மில் குடிகொண்டிருக்கும்.                                                               

எழுத்தாக்கம் :- அபி, நன்றி:- தினமணி, வெள்ளிமணி, 19-10-2012





0 comments:

Post a Comment

Kindly post a comment.