Friday, October 19, 2012

அருணாசலக் கவிராயரின் பாடலும் தஞ்சை வீரரின் எழுச்சியும் & தமிழில் ஓர் மங்களப் பாடல் !

http://jeevagv.blogspot.in/2008/08/blog-post_2521.html

 தமிழ் மூவரில் ஒருவர், அருணாசலக் கவிராயர்
தமிழ் மூவர் என்று நம் இசை அறிஞர்களால் போற்றப்படும் மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் அவர்களைப் பற்றி இந்த இடுகையில் பார்க்கப்போகிறோம். தமிழில் கீர்த்தனைகள் உருவாக்கிய முன்னோடிகளான இம்மூவரில், மற்ற இருவரான முத்துத்தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை பற்றி ஏற்கனேவே முன்பொரு இடுகையில் பார்த்தோம்.

அருணாசலக் கவிராயர் (1711-1779) தில்லையாடியில் பிறந்து சீர்காழியில் வாழ்ந்தவர். பல இசைப்பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பெற்றவர். இவரது ஆக்கங்களில் முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டியது, 'இராம நாடகக் கீர்த்தனம்' எனப்படும் இசைக் காவியம். இராமயணத்தில் வரும் முக்கிய நிகழ்சிகளை மையமாக வைத்துக்கொண்டு, அவற்றை கீர்த்தனைப் பாடல்களாக இயற்றியுள்ளார்.

 இப்பாடல்களை இவர் இயற்றியும், தன் உதவியாளர்களைக் கொண்டு அவற்றுக்கு இசை அமைத்தும், இவற்றை மக்களிடையே பரப்பினார். நடனம் மற்றும் நாட்டிய நாடகங்களிலும், கச்சேரிகளிலும் இன்றளவும் இப்பாடல்களைப் பாடக் கேட்கலாம். கம்பரைப்போலவே, இவரும் தனது இராம நாடகக் கீர்த்தனையை திருவரங்கக் கோயிலில் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த அரங்கேற்றத்தின் போது பாடியதுதான் புகழ்பெற்ற 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாடல். 'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' போன்ற புகழ் பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிராயர்.

முன்னொரு முறை தஞ்சைக் கோட்டையை ஆர்க்காடு நவாபின் படைகள் முற்றுகை இட்டபோது, தஞ்சைப்படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, அருணாசலக் கவியாரை அழைத்து சிப்பாய்களுக்கு முன்னால் பாடச் சொன்னார்களாம். அவரும் 'அனுமன் விஜயம்' என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, 'அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?' என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,

'அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?'
என்று பாடியபோது,

வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.


"ராமசாமியின் தூதன் நானடா ராவணா!", என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், 'பாய்ந்தானே அனுமான்', என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.
சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்பிள்ளைத் தமிழ், சீர்காழி புராணம், சிர்காழிக்கோவை, அனுமான் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் என்பன இவர் இயற்றிய இதர நூல்கள்.

இவரது பாடல்களில் என் மனதைக் கவர்ந்தவை:

    ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
    இராகம் : மோகனம், தாளம் : ஆதி
    பாடுபவர் : சுதா ரகுநாதன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

    ஆரோ இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே
    இராகம் : பைரவி, தாளம் : ஆதி
    பாடுபவர் : எம்.எஸ்.சுப்புலஷ்மி
    பாடலை இங்கு கேட்கலாம்.

    கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை, இராகவா
    இராகம் : வசந்தா, தாளம் : ஆதி
    பாடுபவர் : சௌம்யா
    பாடலை இங்கு கேட்கலாம்.

    இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே
    இராகம் : ஹிந்தோளம், தாளம் : ஆதி
    பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

    எப்படி மனம் துணிந்ததோ என் சுவாமி
    இராகம் : ஹூசைனி, தாளம் : கண்ட சாபு
    பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

    பாடலை இங்கு கேட்கலாம்:
    Eppadi Manam .mp3


பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக 'நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்' அல்லது 'பவமான சுதடு படு பாதார விந்த முலகு' பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:

எடுப்பு / பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

தொடுப்பு / அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

முடிப்பு
(சஹானா சரணம்)
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம். 


நன்றி  :-http://jeevagv.blogspot.in/2008/08/blog-post_2521.html

0 comments:

Post a Comment

Kindly post a comment.