Thursday, October 11, 2012

மின் அலுவலகத்தில் மின்சாரம் வீணடிப்பு: சிக்கனம் காக்கும் மக்களுக்கோ தினமும் மின்வெட்டு !



:விருதுநகரில் உள்ள மின் அலுவலகத்திற்கு ,24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் பெறும் நிலையில்,பகலிலும் மின் விளக்குகளை எரியவிட்டு வீணடிப்பது தொடர்கிறது. ஆனால், அரசுக்கு வரி, மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்துகிற அப்பாவி மக்களுக்கு, தினம் 16 மணி நேரம் மின் தடைசெய்து,எரிச்சலை உருவாக்குகின்றனர்.

மாவட்டத்தில் தினம் 16 மணி நேரம் மின்தடையால்,பல தரப்பினரும் பாதிக்கின்றனர். இரவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின் தடை ஏற்படுவதால், தூக்கம் கெட்டு பல வித நோய்களுக்கு,மக்கள் ஆளாகின்றனர்.

விருதுநகரில் பல பகுதிகளில் 25 மணிநேரம் மின் தடை செய்யப்பட்டதால், கொதித்தெழுந்த மக்கள், மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந் நிலையில், விருதுநகர் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு மட்டும், தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் இங்கு,காலை 10 மணி முதலே அனைத்து விளக்குகளும் எரிந்தப்படி உள்ளன.ஊழியர்கள் இல்லாத மேஜை பகுதிகளில் எந்நேரமும் மின் விசிறிகள் இயங்குகின்றன.

மின் சிக்கனத்தைக் கடைபிடிக்க, முன் மாதிரியாக இருக்க வேண்டிய இவர்களே ,பகலில் மின் விளக்குகளை எரிய விட்டு,மின்சாரத்தை வீணடிப்பது, பார்ப்போர் மனதைப் பதறடிக்கச் செய்கிறது.

மின் வாரிய அதிகாரிக்கும், அலுவலகத்திற்கும் அக்கறை காட்டி, தடையின்றி மின் சப்ளை செய்யும் மின் வாரியத்தினர், பல பகுதிகளில் 24 மணி நேரம் மின் தடை செய்து, மக்களை போராட்டத்திற்குத் தூண்டச் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

அரசுக்கு வரி, மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்தும் மக்கள்தான் , தினம் 16 மணி நேரம் மின் தடையால் அவதிபடுகின்றனர் . நேற்று மட்டும் பகலில் வழக்கம்போல் மின் தடை செய்யப்பட்ட நிலையில்,வழக்கத்திற்கு மாறாக,மாலை 4 .30 மணி முதல் இரவு 7 மணி வரை மின் தடை செய்யப்பட்டது.அதன்பின் இரவு 8.15 மணிமுதல் 9.40 வரை தொடர் மின் தடை உருவானது.

இதனால் மக்கள் பட்ட துன்பத்திற்கு அளவே இல்லை. இதை முறையாக கண்காணித்து,அறிவிப்புடன் மின்சாரம் வழங்க,மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

ஏன் அதிக நேர மின்தடை ...:

செயற்பொறியாளர் ராமமூர்த்தி கூறுகையில், "" மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் என்பதால், அவர் இருக்கும் நேரங்களில் மின் வினியோகம் இருக்க வேண்டும், மின் வாரிய பில் வசூலிக்க வேண்டும், என்பதால், 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் புகார் செய்வதால், எங்கள் அலுவலகத்திற்கும் மின் தடை செய்யப்பட உள்ளது. மின் பற்றாக்குறை 3 ஆயிரம் மெகாவாட் தான் உள்ளது. இதற்கு 3 முதல் 4 மணி நேரம் மின் தடை செய்தாலே போதுமானது. அதிக நேரம் ஏன் மின் தடை ஏற்படுகிறது என்பது எங்களுக்கே தெரியவில்லை,'' என்றார்.                                                                    

நன்றி :- தினமலர்.






 

0 comments:

Post a Comment

Kindly post a comment.