Thursday, October 11, 2012

சூதாட்ட விவகாரம்: 6 நடுவர்களையும் இடைநீக்கம் செய்தது ஐ.சி.சி. !




சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய 6 நடுவர்களையும் அவர்கள் மீதான விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

அவர்கள் மீதான விசாரணை முடிவடையும் வரையில் அவர்களை சர்வதேச போட்டி, உள்ளூர் போட்டி என எவ்வித போட்டிக்கும் நடுவராக நியமிப்பதில்லை என்ற முடிவை ஐசிசி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என்று ஐசிசி ஆட்சிமன்றக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடுவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்கள் சூதாட்டப் புகார் தொடர்பாக உடனடி விசாரணை நடத்த வேண்டும். ஐசிசி நடுவர் ஒப்பந்தத்தில் அவர்களின் பெயர்கள் இடம்பெறாது என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

லஞ்சம் பெற்றுக் கொண்டு யாருக்குச் சாதகமாக வேண்டுமானாலும் தீர்ப்பளிக்க கிரிக்கெட் நடுவர்கள் ஒப்புக் கொண்ட காட்சிகளை இண்டியா டி.வி. கடந்த திங்கள்கிழமை ஒளிபரப்பியது.

இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த நதீம் கெüரி, அனீஸ் சித்திக், வங்கதேசத்தைச் சேர்ந்த நாதிர் ஷா, இலங்கையைச் சேர்ந்த காமினி திசநாயக, மெüரீஸ் வின்ஸ்டன் மற்றும் சகாரா கல்லேக் ஆகிய 6 நடுவர்களும் சிக்கினர்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை அனைத்து நடுவர்களும் மறுத்துள்ளனர். மேலும் இண்டியா டி.வி., சூழ்ச்சி செய்து தங்களை சிக்கவைத்துவிட்டது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேநேரத்தில் இண்டியா டி.வி.யின் தலைவரும், முதன்மை ஆசிரியருமான ராஜத் சர்மா கூறுகையில், "நாங்கள் ஒளிபரப்பிய விடியோவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தால், அது தொடர்பாக விசாரணை நடத்தலாம். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது ஆடுகளத்தின் தன்மை, டாஸ், அணி வீரர்கள் விவரம் உள்ளிட்ட தகவல்களை ரூ. 50 ஆயிரத்துக்கு வெளியிடுவதாக இலங்கை நடுவர் கல்லேக், ஒப்புக் கொண்டதும் விடியோவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடியோ போலியானது:   பாகிஸ்தான் நடுவர் :

"இண்டியா டி.வி. வெளியிட்டுள்ள விடியோ பதிவுகள் போலியானவை. அவை எங்களை சிக்க வைக்கும் நோக்கில் சித்திரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) நிர்வாகிகளைச் சந்தித்து எனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளேன். பிசிபி விசாரணையை முடித்தபின் டி.வி. நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்வேன்' என்று பாகிஸ்தான் நடுவர் நதீம் கெüரி தெரிவித்துள்ளார்.                                                          

நன்றி :-தினமணி.





0 comments:

Post a Comment

Kindly post a comment.