Thursday, October 11, 2012

கரண்ட் பில் கட்டத் தேவையில்லை ! கரண்ட் கட் ஆகிவிடும் என்ற பயமுமில்லை !!

கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள முருகன்பதி என்ற கிராமத்தில்  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த,  விவசாயி ஆர். விஜயகுமார் !



விவசாயம் செய்ய முடியாமல், அதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குப் போகிற விவசாயிகள் இந்தக் காலத்தில் அதிகம்.   

ஆனால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த ஒருவர், விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, தனது வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கிவிட்டார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதுவும் தனது தோட்டத்துக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக் கொள்கிறார் என்றால் வியப்பு இன்னும் அதிகமாகிறது.

கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள முருகன்பதி என்ற கிராமத்தில் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஆர். விஜயகுமாரிடம் பேசினோம்.                                    

 ""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கலங்கல் கிராமம். புகழ்மிக்க விஞ்ஞானி ஜி.டி.நாயுடு எங்கள் ஊர்க்காரர்தான். எங்கள் குடும்பம் பழமையான விவசாயக் குடும்பம். எனவே விவசாயத்தில் இயல்பாகவே எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் இன்ஜினியராக வேண்டும் என்று ஆசை.
 நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ராமகிருஷ்ணா ஸ்டீல் இன்டஸ்ட்ரி என்ற நிறுவனத்திலும் லக்ஷ்மி மிஷின் வொர்க்ஸ் நிறுவனத்திலும் வேலை செய்தேன். என்றாலும் எனது மனம் என்னவோ விவசாயத்திலேயே இருந்தது.                                             

 எனது சொந்த ஊரான கலங்கலில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் அங்கே தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. எனவே கலங்கலில் இருந்த நிலங்களை விற்றுவிட்டு, கே.ஜி.சாவடிக்கு அருகே உள்ள முருகன்பதி என்ற ஊரில் 15 ஏக்கர் தோட்டத்தை வாங்கினேன். என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர விவசாயியாக மாறினேன்.

600 தென்னை மரங்களையும், 300 எலுமிச்சை மரங்களையும் எனது தோட்டத்தில் வளர்க்கிறேன். மாட்டுத் தீவனமான புல்லையும் பயிர் செய்கிறேன். இந்தப் பகுதியில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால், ஒருநாளைக்கு ஒன்றரை மணி நேரம்தான் மின்சாரம் கிடைக்கிறது. இந்த மின்சாரத்தை வைத்து எப்படி இவ்வளவு மரங்களையும் காப்பாற்றுவது? நினைக்கவே பயமாக இருந்தது.                                                

 ஜெனரேட்டர் ஒன்று வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஜெனரேட்டர் மூலமாக 1 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.22 வரை செலவாகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். அவ்வளவு செலவு செய்து தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்தால் இழப்புதான் ஏற்படும். அதைவிட சும்மா இருக்கலாம்.                                                     

 அப்போதுதான் சூரிய ஒளி சக்தியின் மூலமாக, மின்சாரத்தைத் தயாரித்துப் பயன்படுத்தினால் என்ன? என்று தோன்றியது. யூபிவி சோலார் கம்பெனி என்ற நிறுவனத்தில் 5040 வாட்ஸ் சோலார் பேனலை வாங்கினேன். இதற்கு 5.5 லட்சம் செலவானது.

ஆனால் இந்த சோலார் பேனல், 25 வருடங்களுக்கும் மேல் உழைக்கும் என்பதால் இந்தச் செலவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதிலிருந்து 870 வோல்ட் டிசி மின்சாரம் அல்லது 415 வோல்ட் ஏசி மின்சாரம் கிடைக்கும். 3 பேஸிலும் கரண்ட் வரும். மின்னழுத்தம் சீராக இருக்கும். இதனால் மோட்டார் எரிந்து போய்விடும் என்று பயப்படத் தேவையில்லை.                                         

 இப்போது காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை எங்கள் தோட்டத்தில் நீர் இறைக்கும் மோட்டார் வேலை செய்கிறது. உச்சி வெயிலில் அதிகமாகத் தண்ணீர் வரும். நான் சொட்டு நீர்ப் பாசன முறையில் மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன்.

இப்போது கரண்ட் பில் கட்டத் தேவையில்லை. கரண்ட் கட் ஆகிவிடும் என்ற பயமுமில்லை; கவலையுமில்லை.                      


 சோலார் பேனல் வாங்கினால் மத்திய அரசு 30 சதவிகிதம் மானியம் தருகிறது என்று கேள்விப்பட்டு "மினிஸ்ட்ரி ஆஃப் நியூ அன்ட் ரினிவபிள் எனர்ஜி' துறையை அணுகினேன். அவர்கள் "தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் அசோசியேஷன்' மூலமாகப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களிடம் கேட்டால், அவர்கள் குறிப்பிடும் சோலார் பேனல்களை வாங்கினால் மட்டும்தான் மானியம் என்றார்கள். நான் தொடர்ந்து முயற்சிக்கவில்லை.

 மின்சாரப் பற்றாக்குறை அதிகமாக உள்ள இந்நாளில், சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைத் தயாரிப்பது மிகவும் நல்லது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாதது.

ஆனால் சோலார் பேனல்களின் விலை அதிகமாக இருப்பதால் எல்லா விவசாயிகளும் வாங்கத் தயங்குவார்கள். விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரத்துக்கு மாற அரசு உதவி செய்ய வேண்டும்'' என்கிறார் ஆர்.விஜயகுமார்.                                                                         

நன்றி  :-    தினமணி





1 comments:

  1. புதுமையான தேவையான தகவல்,
    மிக்க நன்றி நண்பரே !

    ReplyDelete

Kindly post a comment.