Thursday, October 11, 2012

செட்டாப் பாக்ஸ் மூலம் ஒளிபரப்ப நாளொன்றுக்கு 1.35 மெகாவாட் மின்சாரம் தேவை !


கேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் முறையை சென்னையில் அமல் படுத்தினால் நாளொன்றுக்கு 1.35 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்று தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களில் டிசம்பர் மாதம் முதல் செட்டாப் பாக்ஸ் மூலம் கேபிள் டிவியை ஒளிபரப்பு வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. சென்னையில் கேபிள் டிவி ஒளிபரப்ப வேண்டும் என்றால் 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் தேவைப்படும். இந்த செட்டாப் பாக்ஸ்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலவாணி இழப்பு ஏற்படுகிறது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டாலும் முழுமையாக அவை இறக்குமதி செய்யப்படவும், விநியோகிக்கவும் இந்தக் கால அவகாசம் போதாது. இதுவரை அனலாக் முறையில் மட்டுமே கேபிள் டிவி ஒளிபரப்பாகி வருகின்றது. செட்டாப் பாக்ஸ் அறிமுகப்படுத்தி 9 ஆண்டுகள் ஆன பிறகும், 10 சதவீதம் பேர்கூட இதைப் பயன்படுத்த விரும்பவில்லை. தற்போது மத்திய அரசு மக்களிடம் அதைத் திணிக்க முயல்கிறது. இதன் பின்னணியில் கட்டணச் சேனல்களின் ஆதிக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை இயக்குவதற்கு நாளொன்றுக்கு 1.35 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். மின்தட்டுப்பாடு மிகுந்த நேரத்தில் மத்திய அரசு வலியுறுத்தும் இந்தத் திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அதனால் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது சென்னையில் சாத்தியமில்லை என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தெளிவுபடுத்த வேண்டும். அரசு கேபிள் டிவியை விரைவில் சென்னையில் தொடங்கி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.                            

நன்றி :- தினமணி



0 comments:

Post a Comment

Kindly post a comment.