Thursday, October 11, 2012

மஞ்சளும் நீரும் சுற்றும் வேளை ... ”வாசி” யோகம் - சுவாமி சங்கரானந்தா.

”மஞ்சளும் நீரும் சுற்றும் வேளை
மாடும் கன்றும் திரும்பும் வேளை
காலை மடக்கடி காமாட்சி- நீ
காலை மடக்கடி காமாட்சி “

இது யாழ்ப்பாணத்து நாடோடிப் பாடல். இது போன்ற நாடோடிப் பாடல்கள் பரம்பரையாகப் பாடப்பட்டு வந்தபோதிலும், அவற்றின் உட்பொருள் என்ன என்பதைப் பற்றியோ, எந்தவிதமான கருத்தின் அடிப்படையில் இத்தகைய பாடல்கள் பாடப்பட்டன என்பதைப் பற்றியோ பெரும்பாலோர் அக்கறை கொள்வதில்லை.

மேற்காணும் பாடலும் அவற்றில் ஒன்றே. இப்பாடல் விளக்குவது மிக நுணுக்கமான யோக தத்துவக் கருத்தாகும். அதாவது,  சதாகாலமும் நம்முள்ளிருந்து 12 அங்குல சுவாசமானது வெளியே சலித்து அதோ முகமாய் நீட்டிக் கொண்டிருக்கிறது. அதனைக் “கால்” என்றும் “வாசி” என்றும் சொல்வார்கள். இவ்வாறு நமக்குள் இருந்து வெளியே நீட்டப்பட்டு சலிக்கும் பிராணனை, அவ்வாறு நீட்டிக்காமல் மடக்கி, உள்ளேயே ஐக்கியப்படுத்த வேண்டும் என்பதே மேற்காணும் பாடலின் உட்கருத்தாகும். அதனைப் பிரம்ம முகூர்த்தமாகிய காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களிலும் தவறாமல் செய்து வரவேண்டும் என்பதே இப்பாடலின் கருத்தாகும்.  

மஞ்சளும் நீரும் சுற்றும் வேளை என்பது உதய காலத்தில் சூரியனை நோக்கி வழிபாடு இயற்றும்போது பெண்கள் மஞ்சளும் நீரும் கலந்த ஆலத்தி எடுப்பார்களாதலால் அந்த உதயவேளை என்பது பொருளாம்.   

மாடும் கன்றும் திரும்பும் வேளை என்பது மாடும் கன்றும் மேய்ந்து வயிறு நிரம்பித் தம் இருப்பிடத்திற்குத் திரும்பும் வேளையாகிய மாலை என்பது வெளிப்படை. எனவே, காலையிலும் மாலையிலும் மற்ற எல்லா வேளைகளிலும் காலை மடக்குதலாகிய வாசி யோகம் செய்ய வேண்டும் என்பதாகும்.  இதன் மூலம் காலனை வெல்ல முடியும் என்பது சித்தர் கண்ட வழி.

’ஒவ்வொரு தலைமுறையிலும் உலகில் யாரும் அறியாமல் வாழுகின்ற 36 ஞானிகளால்தான் இந்த உலகின் விதி நிர்ணயிக்கப்படுகிறது’ என்கிறது, யூத வேதம். இத்தகைய ஞானிகள் பலரைப் பெற்றுள்ள நாடு பாரத பூமி. அவர்கள் கூறிய சித்தவேதக் கருத்துக்கள் அனைத்தும், இடைக்காலத்தில் தோன்றிய சமய வேற்றுமைகள் காரணமாக இருட்டடிப்பு செய்யப்பெற்றன.

அதில் மாணிக்கவாசகரின் திருவாசகமும் தப்பவில்லை. “ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும் போய் நான் கெட்டவா” என்று தெள்ளேணம் கொட்டியவர் மாணிக்கவாசகர். ஞானவழியைப் போதிக்க வந்த அவர் யோகானுபவத்தில் திளைத்ததன் வெளியீடுதான் திருவாசகம். தமது நூலின் இறுதியில் யோகசாதனையின் சாரத்தைப் பிழிந்து “ஞானத்தாழிசை” எனும் தலைப்பின் கீழ் 12 பாடல்களை அவர் இயற்றினார்.

ஆனால், பிற்காலச் சமயவாதிகள் தங்கள் கொள்கைக்கு முரணாகக் காணப்படும் யோகக் கருத்துக்கள் திருவாசகத்தில் இருப்பதை விரும்பவில்லை. விளைவு ? ஞானத்தாழிசை திருவாசகத்தினின்றும் பிரிக்கப்பட்டது.

இந்த உண்மையை எடுத்துரைத்தவர், ஐந்தருவி சாமியார் என்று அழைக்கப்படும்,  சங்கரானந்தா சுவாமிகள் ஆவார். மேலும் அவர், ஞானத்தாழிசைக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். அந்த விளக்கவுரையின் இடம்பெற்றுள்ள யாழ்ப்பாணத்து நாட்டுப்பாடலும், கருத்துரையுமே இன்றையப் பதிவு.

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த
ஞானத்தாழிசை
விளக்கவுரை:
சுவாமி சங்கரானந்தா
நன்றியும் வணக்கமும் :-

சங்கராஸ்ரமம்,
ஐந்தருவி, குற்றாலம் அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்,
 627 802.

தொலைபேசி:- 04633-291166
1 comments:

 1. நண்பருக்கு ,
  மேலோட்டமாகப் பார்த்தால் வேறு அர்த்தம் கொடுக்கும் பாடல் , ஞானிகளால் மட்டுமே முழுமையான உள்அர்த்தம் புரிய முடிகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
  இது போல் மேலும் பல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

  - அன்புடன்
  வின்மணி

  ReplyDelete

Kindly post a comment.