Thursday, October 25, 2012

சோலை சுந்தரபெருமாள் எழுதியுள்ள ”தாண்டவபுரம்” நாவலுக்கும், ”தாண்டவம்” சினிமாவிற்கும் சம்பந்தமே இல்லை !


 தினமலர் விமர்சனம்
"தெய்வத்திருமகள்" திரைப்படத்திற்குப்பின் விக்ரம், இயக்குநர் விஜய், அனுஷ்கா கூட்டணியில் தடை பல கடந்து ஒரு வழியாக ஒய்யாரமாக திரைக்கு வந்திருக்கும் படம்தான் "தாண்டவம்!" "சீயான்" விக்ரம் சின்சியராக, சீரியஸ்ரோலில் நடித்திருக்கும் படங்களில் தாண்டவமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது!

கதைப்படி லண்டனில் வசிக்கும் பார்வையற்ற விக்ரம், ஒரு தேவாலயத்தில் இசைக் கோர்ப்பாளராக ஜெபம் செய்யும் நேரங்களில் பணிபுரிவதோடு, பல நேரங்களில் சிலரைத் துரத்தித் துரத்திக் கொலையும் செய்கிறார்.

பார்வையற்றவர் என்றாலும் மிகவும் புத்திசாலியான அவர், கொலை செய்யப் புறப்படும் சமயங்களில் எல்லாம் அவருக்கு வா‌டகை டாக்ஸி ஓட்டி வந்து வகையாகப் போலீசில் சிக்கிக் கொள்ளும் கேரக்டர் சந்தானத்திற்கு!

ஒருகட்டத்தில் சந்தானத்தின் மூலம் விக்ரம் அடையாளம் காட்டப்பட, நாசர் தலைமையிலான ‌லண்டன் போலீஸ் டீமின் சந்தேக வளையத்திற்குள் சாட்சியங்களுடன் சிக்குகிறார் விக்ரம்.

இதுஒருபுறமென்றால் மற்றொரு பக்கம் எக்கோ லொகேசன் எனும் ஒலியைப் பயன்படுத்தி தன் காதுகளையே கண்களாக்கிப் பார்க்கும் திறன் கொண்ட புத்திசாலி விக்ரம் மீது போலீஸ் ஆபிஸர் நாசரின் நண்பரும், டாக்டரின் மகளுமான லண்டன் அழகி எமி ஜாக்ஸனுக்குக் காதல்! கட்டுக்கடங்காத அந்தக் காதலை எமி வெளிப்படுத்தும் தருவாயில் விக்ரமின் கொலைகளும், அதற்கான நியாயமான காரணங்களும் வெளிவருகின்றன!

இந்தியாவின் தலைநகரம் டில்லியில் "ரா" போலீஸ் பிரிவில் உயர் அதிகாரியாக ஆபத்தான பதவியில் அழகான மனைவி அனுஷ்காவுடன் வாழும் விக்ரம், லண்டன் வரக்காரணம்? அவரது அம்சமான கண்களும், அழகிய மனைவியும் பறிபோகக் காரணம்? விக்ரம் கொலையாளியாக திரியக் காரணம்....? என ஏகப்பட்ட காரணங்களுக்குத் தாண்டவம் படத்தின் மீதிக்கதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது!

விக்ரம், லண்டனில் கண் தெரியாத கெனியாகவும் சரி, இந்தியாவில் "ரா" பிரிவு போலீஸ் உயர் அதிகாரியாக மிடுக்கான பார்வை, துடுக்கான நடை, உடை, பாவனை என்று வலம் வரும் சிவக்குமார் பாத்திரத்திலும் சரி, வழக்கம் போலவே தன் நடிப்பை வாரி வழங்கிப் பாத்திரத்தைப் பளிச்சிட செய்திருக்கிறார்.

அதுவும் அனுஷ்காவுடன் கல்யாணக் காட்சிகளிலும், முதலிரவிற்காகக் காத்திருக்கும் காட்சிகளிலும் பலே சொல்ல வைக்கிறார் விக்ரம் என்றால் மிகையல்ல! அதேநேரம் "டயட்" எனும் பேரில் உடம்பை ஓவராக இளைத்து, அதனால் முகமும் சற்றே களைத்துபோன மாதிரியே தெரிவது அவ்வளவாக நல்லாயில்லை.., விக்ரம் என்றும் சொல்ல வைக்கிறது!

அனுஷ்கா, எமிஜாக்சன், லட்சுமிராய் என ஏகப்பட்ட நாயகிகள். எல்லாரையும் ஓரங்கட்டிவிடுகிறார் "நான் உன் அம்மாடா..." என்று திருமணமே வேண்டாம் என "எஸ்" ஆகும் விக்ரமிற்குக் காதும் காதும் வைத்தமாதிரித் திருமணத்தை நடத்தி முடிக்கும் சரண்யா பொன்வண்ணன்!

விக்ரம், கூட இருந்தே குழிபறிக்கும் வில்லன் ஜகபதிபாபு, இலங்கைத் தமிழ்பேசியபடி, லண்டன் போலீஸ் அதிகாரி வீரகத்தியாக வரும் நாசர், விக்ரமின் சீனியர் சாயாஜி ஷிண்டே, மினிஸ்டர் கோட்டா சீனிவாசராவ், ஒரு சில சீன்களில் பார்வையற்ற விக்ரமிற்கு எகோ லொகேஷன் பயிற்சி தரும் டேனியல் கிஷ், தன் "நச்-டச்" காமெடியால் முன்பாதிப்  படத்தை முடிந்த வரை போரடிக்காமல் நகர்த்தும் சந்தானம் உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கின்றனர்!

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும்(கவனிக்கவும், நா.முத்துக்குமாரின் நீ பாதி கதவு, நான் பாதி கதவு... எனும் பாடல் தவிர மற்ற பிற பாடல்களும் அதன் இசையும் அல்ல) படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன.

ஆண்டனியின் எடிட்டிங் இதில் மிஸ்ஸிங்! நம்பமுடியாத லாஜிக் இல்லாத கதை, நான்கைந்து படங்களை ஒரே நேரத்தில் பார்த்த திருப்தியை தருவது பலமா? பலவீனமா? என்பதை இயக்குநர் விஜய் தான் சொல்ல வேண்டும்!!

ஆக மொத்தத்தில், "தாண்டவம், கோர தாண்டவமும் இல்லை, ஆனந்த தாண்டவமும் இல்லை!

விஜய் - விக்ரம் தாண்டவம்! எனத் தாண்டுவோம்!!"                                      

நன்றி :- தினமலர், 25-10-2012


0 comments:

Post a Comment

Kindly post a comment.