Friday, October 26, 2012

அரசின் சலுகைகள் கிடைக்காத முன்னாள் கொத்தடிமைகள் !

கொத்தடிமைகளாகப் பணி செய்யும் இடத்திலிருந்து மீட்கப்படும்போது, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முறையான ஆவணங்களைப் பதிவு செய்யாமல் அனுப்புவதால், அரசின் எவ்வித உதவித்தொகையும் பெற முடியாத நிலையில் மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர். ÷கடலூர் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதில் பலர் கொத்தடிமைகளாகச் சிக்கிக்கொண்டு மீளமுடியாத சூழலும் இருக்கிறது. இவர்களில் தப்பி வருபவர் அளிக்கும் தகவலைக் கொண்டு, பிறரை மீட்கும் சூழல் இருக்கிறது. கடந்த ஜூலை 23-ம் தேதி சிதம்பரம் வட்டம் நஞ்சைமகத்துவாழ்க்கை பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன்-இந்துமதி தம்பதி ஈரோட்டிலிருந்து தப்பி வந்து அளித்த தகவலின்படி, அவர்களது குழந்தைகள் மூவர் மீட்கப்பட்டனர். அப்போது, அதே பகுதியில் வேலை செய்த சிவக்குமார் குடும்பத்தினர் மூவரும் உடன் மீட்கப்பட்டனர். அதேபோல, அக்டோபர் 9-ம் தேதி தொழுதூர் மணிகண்டன் என்பவர் அளித்த புகாரின்படி, ஈரோட்டில் செங்கல் சூளையில் பணியிலிருந்த 4 பேர் மீட்கப்பட்டனர். அதேபோல, வேல்முருகன் (33), மனைவி அன்னலட்சுமி, குழந்தைகள் 3 பேர் என 5 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர். மும்பையில் பணியிலிருந்த 17 பேர் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர். இப்படி மீட்கப்பட்டு, சொந்த ஊர் திரும்பிய எவரும் இதுவரை அரசின் நிதியுதவியோ மற்ற திட்டங்களோ பெற முடியாத சூழல் உள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவிடம் அளிக்கப்படும் புகார் மனுக்களை, சம்பந்தப்பட்ட ஈரோடு மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைக்கிறார். அங்குள்ள ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி, கோட்டாட்சியர், வட்டாட்சியர் அந்தஸ்திலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தொழிலாளர்களை மீட்டு விசாரிக்கின்றனர். அவ்வாறு விசாரிக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் முன்னிலையில் விசாரிப்பதால், தொழிலாளர்களால் சரியான தகவல்களை அளிக்க முடியவில்லை என்ற புகார் முன்வைக்கப்படுகிறது. அவ்வாறு மீட்கப்படும் தொழிலாளர்களிடம், மீட்கப்பட்ட சூழல், அவர்களது புகைப்படம் ஆகியவற்றைப் பதிவு செய்து, விடுதலை ஆவணம் அளிக்க வேண்டும். மேலும், சம்பவ இடத்திலேயே உடனடியாக நிவாரண நிதி ரூ.1000 அளிக்க வேண்டும். வேறு சிறப்பு ஏற்பாட்டின்படி, நிதியுதவியை அளிக்கும் அதிகாரிகள், கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டதற்கான ஆவணங்களை அளிப்பதில்லை. அதோடு, அரசுப் பதிவேட்டிலும் அவற்றைப் பதிவு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. காரணம், ஒவ்வொரு மாவட்டமும் மாதம் ஒரு முறை, தங்களது மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லை என்ற உறுதிமொழியை மாநில அரசுக்கு அளிப்பதாகவும், அதனால் மீட்கப்படும் தொழிலாளர்களை, கொத்தடிமைகளை மீட்டோம் என்று பதிவு செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்படும் தொழிலாளர்களை, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பிரச்னை வேண்டாம் என்று அப்புறப்படுத்துகின்றன என்று கடலூர் மாவட்ட தன்னார்வ அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். காரணம், 1975ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி நிறைவேற்றப்பட்ட, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம்-1976-ன்படி, மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தெளிவாக அறிவித்திருக்கிறது. அதன்படி, கொத்தடிமைத் தொழிலாளர்களைப் பணியமர்த்திய நிறுவனத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்கப்பட்ட உடனேயே தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும். அவர்களது சொந்த மாவட்டத்தில் இடம், தொழில் மேம்பாட்டுக்கான பயிற்சிகள், பிள்ளைகளுக்குக் கல்வி, உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கவேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளது. இதற்காக, மத்திய பங்களிப்புத் திட்டத்தில், மத்திய அரசு 50 விழுக்காடு நிதியுதவி அளிக்கிறது. மீதத்தொகையை மாநில அரசு அளிக்க வேண்டும் எனச் சட்டம் வலியுறுத்துகிறது. இந்த அத்தனை உதவிகளையும் பெற, விடுதலைச் சான்றிதழ் கட்டாயம். ஆனால், அந்த விடுதலைச் சான்றிதழை, மீட்கும் எந்த மாவட்ட நிர்வாகமும் அளிப்பதில்லை. அவ்வாறு அளித்தால், மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழில் இருப்பதை ஒப்புக்கொண்டதாகிவிடும். ஆனால், இந்தச் சான்று இல்லாமல், எவ்வித மறுவாழ்வுச் சலுகைகளையும் பெற முடியாத நிலையில், மீட்கப்பட்ட முன்னாள் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களும் ஏட்டளவிலேதான் உள்ளன. நன்றி :-தினமணி, 26-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.