Friday, October 26, 2012

வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கத் தமிழில் குழந்தைகளுக்கான கதைகள் !


குழந்தைகளுக்கான 120 கதைகள் ஒருபக்கத்தில் தமிழ், ஆங்கில வரிகளிலும், எதிர்ப்புறத்தில் வண்ணப்படங்களுடன் இதுபோன்ற வடிவத்தில் புத்தகம் வெளியிடப்படவுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்குப் படிக்கும், எழுதும் பழக்கத்தை வளர்க்த்திடப் பிரபல குழந்தைகள் கதை எழுத்தாளர்களைக் கொண்டு 120 கதைகள் எழுதப்படுகின்றன.

மைசூரில் உள்ள இந்திய மொழியியல் மத்திய நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையம் இணைந்து தமிழில் குழந்தைகளுக்கான கதைகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கை கடந்த அக்டோபர் 12-ம் தேதி முதல் 10 தினங்களாக நடத்தி வருகிறது.

10 நாளில் தமிழில் குழந்தைகளுக்கான 120 சிறுகதைகள் எழுதுவது

இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.

 இக்கருத்தரங்கில்

குழ.கதிரேசன்,

 ஏ.ஜோதி,

இ.கோமதிநாயகம்,

என்.விஸ்வநாதன்

உள்ளிட்ட பிரபல குழந்தைகள் கதை எழுத்தாளர்கள் பங்கேற்றுக் கதைகளை எழுதி வருகின்றனர். இக்கருத்தரங்கைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலை தொடங்கி வைத்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்தார். மொழியியல் உயராய்வு மைய இயக்குநர் எம்.கணேசன், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்கள் என்.நடராஜன்பிள்ளை. எம்.பரமானந்த ரெட்டி ஆகியோர் இக்கருத்தரங்கைத் திறன்பட நடத்தி வருகின்றனர்.

கருத்தரங்கு குறித்து ஒருங்கிணைப்பாளர் என்.நடராஜன் பிள்ளை தெரிவித்தது: தற்போது எழுதப்படும் குழந்தைகளுக்கான கதைகளில், ஒரு பக்கம் கதை, எதிர்பக்கத்தில் வண்ணப்படங்களுடன் புத்தகமாக வெளியிடப்படவுள்ளது.

வண்ணப்படங்களைப் பார்த்துக் கற்பனையாகக் கதை சொல்லும் திறன் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். குழந்தைகள் ஆர்வமாகப் படிக்கும் வடிவத்தில் இந்தப் புத்தகம் வெளியிடப்படவுள்ளது. இதுபோன்று நாடு முழுவதும் 22 மொழிகளில் அந்தந்த மாநிலத்தின் கதைகள் எழுதப்பட்டு, அவைகள் தமிழிலும், தமிழில் உள்ள கதைகள் பிற மொழிகளிலும் புத்தகமாக வெளியிடப்படவுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்வாதாரம் ஆகியவற்றைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும்.

கதைகள் பெரிய அளவில் இல்லாமல், சில வரிகளில் சுருக்கமாக, வண்ணப்படங்களுடன் கதைகள் இருக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கம் ஏற்படும். மேலும் தமிழ் சொற்களஞ்சியம், அதாவது தமிழ் வார்த்தைகள் திறனும் அதிகரிக்கும். கதைகளைப் படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல குணங்களும் உருவாகும்.

மொழிக்கு அடிப்படையான திறன்கள் நான்கு.

கேட்டல்,

பேசுதல்,

வாசித்தல்,

எழுதுதல் ஆகும்.

தற்போது தொலைக்காட்சி மூலம் குழந்தைகள் கேட்பது, பேசுவது மட்டும்தான் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. பாடப்புத்தகங்களைத் தவிர படிக்கவும், எழுதவும் வாய்ப்பில்லை. மேலும் தொலைக்காட்சி மூலம் வன்முறை எண்ணத்தை ரசிக்கும்படி செய்கிறது. இதன் பின்விளைவு மிகவும் ஆபத்தானது.

இதுபோன்ற எண்ணங்களை நீதிக்கதைகள் மற்றும் குழந்தைகளுக்கான கதைகள் அகற்றும். தமிழில் குழந்தைகளுக்கான கதைகள் குறைவு. தெனாலிராமன், பீர்பால் கதைகள்தான் உள்ளன. ஆங்கிலத்தில் பல வண்ண வடிவங்களில் குழந்தைகளுக்கான கதைகள் உள்ளன.

ஆனால் தமிழில் வண்ணப்படங்களுடனான வரிக்கதைகள் குறைவு. இதன் முதல் முயற்சியாக குழந்தைகளுக்கான கதைகள் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கை மைசூரில் உள்ள இந்திய மொழியியல் மத்திய நிறுவனத்துடன் இணைந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையம் நடத்துகிறது என்றார்.

நன்றி :- தினமணி, 26-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.