Thursday, October 25, 2012

மண்டபம், பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றம் !



     இராமேசுவரம் தீவு மண்டபம் பகுதியில் இந்தியக் கடலோரக் காவல் படையின் அலுவலகத்தின் பின்புறத்தில் எழுந்த கடல் அலையின் சீற்றம்.

இராமேசுவரம் தீவுப் பகுதியான மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளில் புதன்கிழமை கடல் சீற்றம் காரணமாகக் கடல் அலைகள் 7 அடி உயரத்துக்கு எழுந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 5 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. புதன்கிழமை காலை அப்பகுதியில் கடல் அலைகள் திடீரென சுமார் 7 அடி உயரத்துக்கு எழும்பியதால், கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகளில் சில சேதமடைந்தன.

மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற சில மீனவர்களும் கடல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்காமல் கரைக்குத் திரும்பி விட்டனர். பாம்பனில் கடற்கரையோரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது.

மண்டபம் இந்தியக் கடலோரக் காவல் படை அலுவலகத்தின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த படகு சேதமடைந்தது. அந்தப் படகு நழுவி விடாமல் அதை மீனவர்கள் இழுத்து கரையில் கட்டி வைத்தனர். இதுகுறித்துப் பாம்பன் ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக் மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி. இராயப்பன் ஆகியோர் கூறியதாவது:

கடல் சீற்றம் குறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் எந்தத் தகவலையும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. இதனால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலர் கரைக்குத் திரும்பி விட்டனர். முக்கியமாகப் பாம்பனில் கடல் சீற்றத்தின்போது, படகுகளைப் பத்திரமாக நிறுத்தப் போதுமான வசதி இல்லை என்று கேட்டுக் கொண்டார்.                                                                                 

நன்றி :- தினமணி, 25-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.