Monday, October 22, 2012

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம்: பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் நடுவே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடல் பகுதிக்கு நகர்ந்ததால் நேற்றும் கனமழை கொட்டியது.

இதுபற்றிச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-

நேற்று அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டு இருக்கிறது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியதன் விளைவாக வங்கக் கடலில் உள்ள ஈரம் மிகுந்த காற்றைத் தமிழ்நாட்டின் வழியாக ஈர்த்தது. இதன் விளைவாகக் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளிலும், வட தமிழ்நாட்டின் அநேகமாக பகுதிகளிலும் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூர், நாகையில் 13 செ.மீட்டர் மழையும், நீலகிரியில் 10 செ.மீ. மழையும் பெய்துள்ளது. திருக்கோவிலூர், ஸ்ரீ வில்லிபுத்தூரில் 9 செ.மீ. மழையும், கோவில்பட்டியில் 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடியக் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அம்பத்தூர், கோயம்பேடு, வியாசர்பாடி, துரைப்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, ஊட்டி, விழுப்புரம், கடலூர், சேத்தியாதோப்பு, நாகப்பட்டினம் பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.                                                                                                                      

நன்றி :-:-மாலைமலர், 22-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.