Monday, October 22, 2012

கனமழை காரணமாக, உதகை மலை ரயில் பாதையில் வெலிங்டன் அருகே ஏற்பட்ட மண்சரிவு.Post title




தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமானதாலும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாள்களாகப் பெய்து வரும் மழைக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது அரபிக் கடலையொட்டி லட்சத்தீவுக்கும், குஜராத்துக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது.

எனினும் இதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கடலூரில் அதிகபட்சமாக 170 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழைகாரணமாக கடுங் குளிருக்கு ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழை காரணமாக ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்பாதையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் குன்னூரிலிருந்து-உதகை செல்லும் நீலகிரி மலை ரயில்சேவை பாதிக்கப்பட்டது. மண் சரிவுகள் அகற்றப்பட்டு பாதை சரி செய்தபின் 5 மணிநேரம் தாமதமாக அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.

இதேபோல மஞ்சூரில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளின் குறுக்கே மரங்கள் விழுந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் அருகே கட்டேரி கிராமத்தில் மழையால் 11-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உதகை பஸ் நிலையத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். கடும் குளிர் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தகவல் அறிந்ததும் போலீஸார் அவரது உடலை அப்புறப்படுத்தி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

கடந்த 2 நாள்களாகப் பெய்து வரும் தொடர்மழையால், தமிழகம் முழுவதும் உள்ள அணைகளில் நீர் இருப்பு அதிகரித்து வருவதாகப் பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

வீராணம் ஏரி நிரம்புகிறது: கன மழை காரணமாகக் கடலூரில் உள்ள பெருமாள் ஏரி, வெலிங்டன் ஏரி, வாலாஜா ஏரிகளில் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 3,505 ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்மழை காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடந்த 3 நாள்களாகக் கடலுக்குச் செல்லவில்லை.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் இந்த ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஏரியின் நீர் மட்டம் 44.70 அடியாக உயர்ந்துள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு: மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால், பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 6 அடியும், கடனாநதியின் நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்துள்ளது.

முக்கிய அணைகளில் நீர்மட்டம் (அடி அளவில்): பெரியாறு அணை - 122.4, வைகை - 44.16, பாபநாசம் அணை - 52, சேர்வலாறு அணை - 65.35, பெருஞ்சாணி அணை - 28, கடனாநதி அணை - 60, ராமநதி அணை - 71, மணிமுத்தாறு அணை - 50.75.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் பெய்துவரும் மழையால், திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. தொடர்மழை காரணமாக, கோதையாறு, பரளியாறு, பழையாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணையில் நீர் வரத்துக் குறைவு: மேட்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தாலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாகக் குறைந்துவருகிறது. சனிக்கிழமை விநாடிக்கு 4,303 கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழணை மாலை விநாடிக்கு 3,124 கன அடியாகக் குறைந்தது. அணையின் நீர்மட்டம் 63.53 அடியாக இருந்தது. பாசனத்துக்கு 1,087 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.                  

நன்றி :- தினமணி, 22-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.