Saturday, October 20, 2012

லெபனான் குண்டுவெடிப்புக்கு கண்டனம்: சிரியாவுக்கு எதிராக தொடர் போராட்டம்-வன்முறை !



சிரியாவின் எல்லையில் உள்ள லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் அந்நாட்டின் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய போலீஸ் படையின் தலைவர் விசாம் அல்-ஹசனும் ஒருவர். இவரைக் குறிவைத்து சிரியா தாக்குதல் நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2005-ல் பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராபிக் ஹரிரி கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் குழுவிற்கு விசாம் அல்-ஹசன் தலைமை தாங்கினார். இதன் காரணமாக அவரை சிரிய அரசு பழிதீர்த்ததாக, ராபிக் ஹரிரியின் மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான சாத் ஹரிரி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குண்டுவெடிப்பு லெபனானில் அமைதியைச் சீர்குலைத்துவிட்டது. நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருந்த வாசிமை கொன்றுவிட்டார் சிரிய அதிபர் பசார். அரசியல் படுகொலைகள் செய்வதில் சிரியா ஆட்சி கைதேர்ந்தது என்று ஹரிரி கூறினார்.

இதற்கிடையே பெய்ரூட் குண்டுவெடிப்பிற்குக் கண்டனம் தெரிவித்தும், சிரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் லெபனானின் பல்வேறு நகரங்களில் நேற்று முதல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சன்னி முஸ்லிம்கள் தெருக்களில் டயர்களை தீயிட்டுக்கொளுத்தினர். ஏற்கனவே நடந்த உள்நாட்டுப் போரை நினைவுபடுத்துவதாக இந்த சம்பவங்கள் இருந்தன. மேலும் நாட்டின் எல்லையில் உள்ள திரிபோலியில் நடைபெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. முக்கியமான சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு வாடிகன், ஐரோபிய நாடுகள், ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும், இதில் சிரியா சம்பந்தப்படவில்லை என்றும் சிரியா அரசு விளக்கம் அளித்தது. ஆனால் லெபனான் மக்கள் சமாதானம் அடையவில்லை.                   

நன்றி :- மாலைமலர், 20-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.