Saturday, October 20, 2012

தமிழிசை வரலாறு - ஒரு விளக்கம் ! பழந்தமிழ்ப் பண்ணிசை என்பது யாது ?

தமிழிசை மூவர்


        மாரிமுத்தாப் பிள்ளை, அருணாச்சலக் கவிராயர், முத்துத்தாண்டவர்.


பழந்தமிழ்ப் பண்ணிசை என்பது யாது?                    

            நம் தமிழ்மொழியினைப் போல, தமிழிசையென்பது நம்முடைய மிகப் பழமையான இசைச் செல்வமாகும்.   

சங்கத்தமிழானது,
 
(அ) இயற்றமிழ்,

 (ஆ) இசைத்தமிழ்,

(இ) நாடகத்தமிழ்  - என்று,

மூன்று வகையினதாய்த் தழைத்தோங்கி இருந்தமைக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று தமிழைத் தாய்மொழியாய் கொண்டவரில் கையளவினரே தமிழிசை என்று ஒன்று இருந்தமையை அதுவும் வெறும் ஏட்டளவிலேயே அறிந்திருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையான வழக்கல்ல.

இன்றைக்குக் கர்நாடக சங்கீதம் என்று வழங்கப்படும் இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இன்று தழைத்தோங்கி இருக்கும் கர்நாடக இசையே தமிழிசையின் மறுவடிவம் என்று நிலைநாட்டக் கூடிய அளவிற்கு இந்த ஒற்றுமைகளும், தமிழிசையின் பழமையும், இலக்கிய ஆதாரங்களும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவக்கூடும்.

இன்றைக்கு நமக்குப் புரியும் வகையில், தமிழிலுள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் தமிழிசை பற்றிய பல செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. 

தமிழிசையும் கர்நாடக இசையும்:                     

                  இற்றைக்குக் கிடைக்கின்ற ஆதாரங்களை நோக்குங்கால், இன்று செழித்தோங்கி இருக்கும் கர்நாடக இசையின் வேர்களானது, ஒன்று தமிழிசையுடன் ஒன்றி வளர்ந்திருக்க வேண்டும் அல்லது தமிழிசையுடனேயே தோன்றியிருக்க வேண்டுமென்றே எண்ணத் தோன்றுகிறது.

இரண்டு இசை மரபுகளையும் ஒப்பு நோக்குகையில் இன்றைய கர்நாடக இசையில் பயன்படும் இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்குப் புதிதாகப் பெயரிட்டும், அதிகப் பயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் இருக்கின்றன என்றே தோன்றுகிறது.

இணையத்தமிழ் அன்பர்களுக்காக, கர்நாடக இசைக்கு நேரான தமிழிசையின் பொதுவான வழக்குகள் பட்டியலிடப்பட்டுக் கீழே தரப்படுகிறது..                      

தமிழிசை வழக்கும் கர்நாடக இசை வழக்கும்:    

௧.  பண்                =  இராகம்

௨.தாளம்             =  தாளம்

௩. பதம்                =  ஸ்வரம்

௪. பதம் ஏழு       =  ஸ்வரம் ஏழு

௫.ஆரோசை     =  ஆரோகணம்

௬.அமரோசை    =  அவரோகணம்

௭. குரல்              =  ஸ (ஸட்ஜமம்)

௮. துத்தம்           =  ரி  (ரிஷபம்)

௯. கைக்கிளை =  க  (காந்தாரம்)

௧0. உழை           =  ம (மத்யமம்)

௧௧. இளி             =  ப  (பஞ்சமம்)

௧௨. விளரி        =  த (தைவதம்)

௧௩. தாரம்          =  நி (நிஷாதம்)                                                     

இலக்கியத்தில் இசைக்கருவிகள்::-       

                 கர்நாடக இசையின் பெருமையான இசைக்கருவியான வீணை, கோட்டு வாத்தியம் இவைகளுக்கு இணையாகத் தமிழிசையில் சொல்லப்படும் இசைக்கருவி யாழ்.

வீணை பற்றிய குறிப்புகள் பல குறிப்புகள் இலக்கியங்களில் காணப்பட்டாலும், யாழிசைக்கு ஒரு சிறப்பான முதலிடம் தரப்பட்டிருந்ததைக் காணமுடிகிறது.

 வீணையைப் போன்றே யாழும் கம்பி/ நரம்புகளை இழுத்துக் கட்டப்பட்டு கைகளால் இசைக்கப்படும் கருவியாக இருந்திருக்கிறது.  சுவாமி விபுலாநந்தாவின் “யாழ் நூலில்” யாழினைப் பற்றி பல விவரங்கள் கூறப்பட்டிருக்கின்றன.      

                  எருகாத்தம் புலியூரில் பிறந்த திரு நீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் ஞானசம்பந்தரின் பதிகங்களை யாழிசைக் கருவியில் இசைத்துப் புகழ் பெற்றிருந்தார்.  திருமறையில் சொல்லப்பட்ட மற்ற இசைக்கருவிகளான வீணை, கொக்கரை, கொடுமுழா முதலியனவற்றைப் பற்றி “கல்லாடம்” நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றன.  பன்னிரெண்டாவது திருமுறையான பெரியபுராணத்தில் மற்றொரு இசைக்கருவியான குழல் செய்வதைப் பற்றியும், இசைப்பதைப் பற்றியும் ஆனான நாயனார் புராணத்தில் பதிமூன்றாவது, இருபத்து நான்காவது, இருபத்தெட்டாவது பாடல்களில் சொல்லப்படுகின்றது.                                        

தமிழ்ப் பதிகங்கள்:

                  இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை, சிவபாத சேகரன் என்றும், திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராச இராச சோழனின் பெரு முயற்சியால் சிதம்பரம் கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டளவில் வெளிக் கொணரப்பட்டவையே.  அவற்றில் பண்ணிசை ஏதென்று அறியாத பதிகங்கள் இருக்கக் கண்டு, அச்சோழன் யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த மாதங்க
சூளாமணியார் என்னும் பெண்மணியை அழைத்துப் பண்ணினை வரையறுக்கும்படிப் பணிக்க,  அவர் வரையறுத்த, பண் வரிசையிலேயே அவைகள் இன்றும் பாடப்படுகின்றன.                                                 

                  பத்துப்  பத்தாக பாடல்களைப் பாடும் பதிகங்கள் என்ற முறையின் முன்னோடியாகச் சொல்லப்படுபவர் காரைக்காலம்மையார் என்று போற்றப்படும் புனிதவதியார்.  இவரைத் தொடர்ந்து சைவ சமயத்தின் நான்கு தூண்களாகச்  சொல்லப்படும் (1) அப்பர் (2) சம்பந்தர் (3) சுந்தரர் (4) மாணிக்கவாசகர் இவர்களில் முதல் மூவர் பல பதிகங்களைத் தமிழ்ப்பண்ணிசையில் பாடியிருக்கின்றனர்.  தேவாரப்பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராச இராசசோழன் தொடங்கி பல தமிழரசர்கள் தமிழகத்தின் கோவில்களில் இவற்றை முறைப்படி இசையுடன் பாட ஓதுவார்கள் என்னும் இசைக்கலைஞர்களை நியமித்தனர்.  இவ்வோதுவார்களின் பணி இன்றும் தமிழகக் கோவில்களில் தொடர்கிறது.    

இசைக்கலைஞர்கள் - பாணர் / ஓதுவார்:                                                     

                  சங்க இலக்கியத்தில் இசைக்கலைஞர்கள் என்பவர்கள் தமிழிசையை வளர்க்கப் பாடுபட்ட பாணர்கள் (ஆண் இசைஞர்கள்), பாடினியர் (பெண் இசைஞர்கள்) என்ற குறிப்புகள்  காணப்படுகின்றன.  இன்றைய இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் என்ற இடம் யாழிசையினைப் பின்பற்றியே பெயர் கொண்டிருப்பதும் இதற்கு மேலும் வலுவூட்டுகின்றது.  பாணர்களை முக்கிய பாத்திரமாக வைத்து எழுதப்பட்டப் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை இவைகளைச் சொல்லலாம்.                                

தேவாரப் பண்கள்::-                                                                                                           

                  திருநாவுக்கரசர் அருளியத் தமிழ்ப் பதிகமான தேவாரத்தில் கீழ்வரும் இருபத்தோரு பண்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  சிலர் இருபத்துநான்கு என்றும், இன்னும் சிலர் இருபத்தேழு என்றும் கூறுகின்றனர்.  எப்படியாயினும் தேவாரம் முழுதுமே ஒரு முறையான பண்ணிசை வரிசையில் அமைக்கப்பட்டிருப்பத்தைக் காணலாம்.  ஆனால் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட பட்டியல் திருமுறைகளில் பயன்படுத்தப்பட்ட வரிசையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.  ஒன்பதாவது திருமுறையில் சொல்லப்படும் “சாளராபாணி” என்னும் பண் மற்றத் திருமுறைகளில் பயன்படுத்தப்படவே இல்லை.                                                             

தமிழிசையில் பண்களும் அதற்கு நேரான இராகங்களும்::-                           

                  பல தமிழ்ப்பண்கள் கர்நாடக இசையின் இராகங்களுடன் ஒத்துப் போனாலும், வேற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன.   எடுத்துக்காட்டாக தமிழிசையில் மேகராகக் குறிஞ்சியை மழை தருவிக்கும் பண்ணாக  கூறுகின்றனர்.  அதற்கு இணையான கர்நாடக இசை இராகம் நீலாம்பரி என்பது இரவில் பாடும் தாலாட்டுப் பாடல்.  ஆனால் கர்நாடக இசையில் மழை இராகம் அமிர்த வர்ஷினி என்று சொல்லப்படுகிறது.  எங்காவது வறட்சி என்றால், மேகராகக் குறிஞ்சியில்தான் பதிகங்கள் பாடப்பட்டிருக்கின்றன.  திருஞான சம்பந்தருடைய திருவையாறு பதிகம் கூட இதனையே குறிக்கிறது.                

தமிழ்ப்பண்களும் கர்நாடக இராகங்களும்:                                                   

தமிழ்ப்பண்                                   கர்நாடக இராகம்                                             

௧.   நட்டப்பாடை                       =  நாட்டை

௨.  கொல்லி,                              =  நௌரோஸ்

௩.   பியந்தைக்காந்தாரம்,       =  நௌரோஸ்

௪.  காந்தாரம்,                             = நௌரோஸ்

௫.  கொல்லிக் கௌவானம் =  நௌரோஸ்

௬.   கௌசிகம்                           =  பைரவி

௭.   யாழ்முரி                              =  அடானா

௮.  நட்டராகம்                            =  பந்துவராளி

௯. சாதாரி                                   =  பந்துவராளி

௧0. தக்கராகம், தக்கேசி          =  காம்போதி

௧௧. புறநீர்மை                             =  பூபாளம்

௧௨.அந்தாளிக் குறிஞ்சி          =  சியாமா

௧௩. பழந்தக்கராகம்                 =  சுத்தசாவேரி

௧௪. பழம்பஞ்சுரம்                    =  சங்கராபரணம்

௧௫.செவ்வழி                            =  யதுகுல காம்போதி

௧௬.காந்தார பஞ்சமம்          =  கேதார கௌளை

௧௭.இந்தளம், சீகாமரம்         =  நாதநாமக்கிரியை

௧௮.குறிஞ்சி                              =  ஹரிகாம்போதி

௧௯.செந்துருத்தி                      =  மத்யமாவதி

௨0.பஞ்சமம்                              =  ஆகிரி

௨௧.மேகராகக்குறிஞ்சி          =  நீலாம்பரி

௨௨.வியாழக்குறிஞ்சி            =  சௌராஷ்டிரம்

௨௩. சாளராபாணி                    =  *****

௨௪.மோகனம்                           =  *****

                              திருக்குறுந்தொகை, திருநேர்ச்சை, திருவிருத்தம், திருத்தாண்டகம் ஆகிய பாடல்கள் ஒரு பாட்டின் வடிவமைப்பினை குறிப்பதாகத் தெரிகின்றமையால், இவை எந்தப் பண்ணிலும் பாடலாம்.  ஆயினும் வழக்கமாகச் சில பண்களால் மட்டுமே  பாடப்படுகின்றன.                  

                              மேலே சொல்லப்பட்ட பட்டியலில், சொல்லப்பட்ட பண்களில் சிலவற்றிற்கு கர்நாடக இசையில் நேரான இராகங்களாகச் சொல்லப்படுபவை இருந்தாலும், ஒரு சில வேறுபாடுகள் இருக்கக் கூடும்.  தமிழிசையிலும், கர்நாடக இசையிலும் விற்பன்னராக இருப்பவர்கள் இதனை நன்கு விளக்கிக் கூற இயலும்.  மேலும் காலையிலிருந்து இரவு வரை வெவ்வேறு காலகட்டங்களில் குறிப்பிட்ட கால அளவுகளில் ஒரு வரிசை முறையில் பாடக்கூடிய தமிழ்ப் பண்ணிசைகளை சொல்லியிருக்கிறார்கள்.                      

                              காலையிற் பாடும் பண்களாக சொல்லப்படுபவை புறநீர்மை, காந்தாரம், பியந்தைக் காந்தாரம், கௌசிகம், இந்தளம், திருக்குறுந்தொகை, தக்கேசி, காந்தார பஞ்சமம், பஞ்சமம் ஆகியவையாகும்.  மாலையிற் பாடும் பண்களாக சொல்லப்படுபவை தக்கராகம், பழந்ததக்க ராகம், சீகாமரம், கொல்லி, கொல்லிக் கௌவானம், திருநேர்ச்சை, திருவிதானம், வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, குறிஞ்சி, அந்தாளிக் குறிஞ்சி ஆகியவையாகும்.  அதுபோலவே எந்தக் காலத்தும் பாடும் பண்களாக சொல்லப்படுபவை, செவ்வழி, செந்துருத்தி, திருத்தாண்டகம் ஆகியவையாகும்.                         

                        நான் கர்நாடக இசையை முறைப்படி கற்றவனாக இல்லாதிருப்பினும், இசை இரண்டறக் கலந்த தஞ்சை மண்ணைச் சேர்ந்தவனாய் இருப்பதாலும், தமிழைப் போற்றும் புதுவை மண்ணில் வேரூன்றியவனாய் இருப்பதாலும், எனதறிவுக்கு எட்டியவரை இந்த சிறிய கட்டுரையை எழுதியிருக்கின்றேன்.  இதிலிருக்கும் நல்லவைகளும், உண்மைகளும் சீர்காழித் தமிழிசையின் மூவர்களான முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாச்சலக் கவிராயருக்கும் உரித்தாகுக.     

தவறுகள் ஏதேனுமிருப்பின் அத்தனைக்கும் அடியேனே பொறுப்பு.  நான் சொன்னவற்றிக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கவே செய்கின்றன.

அவற்றைக் கூறுவோரும் ஆதாரங்களை எடுத்துக் கொடுக்கலாம்.  என்ன செய்வது தமிழ்  என்று வரும் போது ஆழி கூட ஆதாரங்களை வாரித் தின்ற வரலாறுதான் நினைவுக்கு வருகிறது.

கர்நாடக இசையின் மூவர் போல, தமிழிசை மூவர்: மாரிமுத்தாப் பிள்ளை, அருணாச்சலக் கவிராயர், முத்துத்தாண்டவர்.


                                                        இராஜா.தியாகராஜன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.