Wednesday, October 17, 2012

தலைசுற்ற வைக்கும்சென்னை நகரச் சாலைகளின் பெயர்க் குழப்பம் !

சென்னைக்குப் புதிதாக வருபவர்கள் பெருநகரை ஒரு சுற்றுச் சுற்றி வந்தால் அவர்களுக்குத் தலைசுற்றத்தான் செய்யும். காரணம், சாலையின் மூலையில் அதற்கு ஒரு பெயரும், வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகையின் முகவரியில் ஒரு பெயரும் இருந்தால் தலைசுற்றாமல் என்ன செய்யும்?

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, தமிழில் "சென்னை' என்றும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ்' என்றும் இருந்த நிலை மாறி இரு மொழிகளிலும் "சென்னை' என்று மாற்றம்  பெற்று விட்டது. உயர் நீதிமன்றம் உள்ளிட்ட ஒரு சில இடங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் "மெட்ராஸ்' என்பது மாறி "சென்னை' என்பது புழக்கத்திற்கு வந்து விட்டது.

ஆங்கிலேயரது ஆட்சியில் சென்னை இருந்தபோது அவர்களுக்குப் பிடித்த இடம் மற்றும் பிரமுகர்களின் பெயர்களை முக்கிய சாலைகளுக்கும், தெருக்களுக்கும் சூட்டி மகிழ்ந்தனர். காலப்போக்கில் சாலைகளும், தெருக்களும் பெயர் மாற்றம் பெற்றன. அதுவும், திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்ட பின்பு சாலைகளுக்கும், தெருக்களுக்கும் தேசிய மற்றும் உள்ளூர் முக்கியத் தலைவர்களின் பெயரைச் சூட்டுதல் ஒரு மரபாகியது. அதன்படி, சென்னையில் பெரும்பாலான சாலைகள் தலைவர்களின் பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றன..

சென்னைக்கு வரும் வெளியூர் நபர்கள் தாங்கள் தேடி வந்த விலாசத்தை எளிதில் கண்டடையவும், தலைவர்களையும், அவர்களது பெயர்களையும் மக்கள் மறந்து விடாமல் இருக்கவும் மாநகராட்சி சார்பில் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் சாலைகளின் ஆரம்பத்திலும், முடிவிலும் அவற்றின் பெயர் பெரிய இரும்பு பலகையில் அழகான நீல வண்ணத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா சாலை, பெரியார் சாலை, காயிதே மில்லத் சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை, மேயர் ராமநாதன் சாலை என ஆங்காங்கே இந்த பெயர்ப் பலகைகள் அழகாகக்  காட்சி அளிக்கின்றன.

ஆனால், அந்தச் சாலைகளில் தலைவர்களின் பெயரை நினைத்துக் கொண்டே நடந்து செல்வோர் அங்குள்ள வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகையைப் பார்த்தால் குழப்பம்தான் ஏற்படும். காரணம், பெரும்பாலான சாலைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் இன்னமும் அந்தச் சாலையின் பழைய பெயரையே எழுதி வைத்துள்ளனர்.

இதனால் வெளியூர் நபர்கள் ஓர் விலாசத்தைத் தேடி ஒரு சாலையிலோ அல்லது தெருவிலோ நடந்தால் அவர் குழம்பித்தானே போவார்?

இந்த நிலை, பெருநகரில் உள்ள ஏதே ஒரு சிறிய தெருவில் இல்லை. மாறாக, அண்ணா சாலையிலேயே இந்த நிலைதான் உள்ளது.

இன்னமும் அங்குள்ள வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் "மவுண்ட் ரோடு' என்று எழுதி வைத்துள்ளனர். அண்ணாவின் நினைவு எல்லோருக்கும் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கி கத்திபாரா சந்திப்பு வரையில் சுமார் 11 கி.மீ.தொலைவிலான அந்தச் சாலைக்கு அண்ணாவின் பெயர் திமுக ஆட்சிக் காலத்தில் சூட்டப்பட்டது.

அண்ணாவின் முன்னோடி பெரியார். அவரை நினைவில் கொள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு "ஈ.வெ.ரா. பெரியார் சாலை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் சில வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் "பி.எச். ரோடு' என்றே எழுதி வைத்துள்ளனர்.

பாரதியார் வாழ்ந்த பகுதியான திருவல்லிக்கேணியில், அவரது புகழை பறைசாற்றக் கடற்கரையில் கண்ணகி சிலைக்கு எதிரே மேற்கு நோக்கி செல்லும் சாலைக்கு "பாரதியார் சாலை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  ஆனால் அந்தச் சாலையில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் இன்னமும் "பைகிராப்ட்ஸ் ரோடு' என்றே எழுதி வைத்துள்ளனர்.

பாரதியின் பெயரை எழுதி வைக்க அத்தனை தயக்கமா?

வாலாஜா சாலையில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் சாலைக்கு பாபு ஜெகஜீவன்ராம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த சாலை இன்னமும் "பெல்ஸ் ரோடு'தான். அதற்கடுத்துள்ளது, "காயிதே மில்லத் சாலை'. அந்த சாலை இன்னமும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைதான்.

சேத்துப்பட்டியில் உள்ள "மேயர் ராமநாதன் சாலை'யில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் "ஸ்பர் டேங்க்' சாலை என்றே எழுதி வைத்துள்ளனர். இப்படி பெருநகரம் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், "ஹால்ஸ் ரோடு', "மெக்நிக்கல்ஸ் ரோடு' உள்ளிட்ட பெயர் மாற்றம் பெறாத சில சாலைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் அந்த சாலைகளின் பெயரைச் சரியாக எழுதி வைத்துள்ளனர்.

கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர், தமிழ் மொழியில் பிரதானமாகப் பெரிதாக இருக்க வேண்டும் என்பது தமிழ் ஆட்சி மொழி விதிமுறையாகும். தேவையானால் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் தமிழ் மொழிக்குக் கீழ் சிறியதாக எழுதி வைத்துக் கொள்ளலாம்.

அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அதனால் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களின் பெயர் தமிழில் உள்ளது பாராட்டத்தக்கது.

அதைப் போலவே, "மெட்ராஸ்' என்பது "சென்னை'யான மாற்றத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சாலை மற்றும் தெருவின் பெயர் மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ள அரசு மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்பார்க்காமல் தானே மாறிக் கொள்ளலாமே!  ஏற்படுகின்ற குழப்பத்துக்கும்  தீர்வு காணலாமே!                                   

By - ப. இசக்கி -, சென்னை

First Published : 12 October 2012 05:41 AM IST




0 comments:

Post a Comment

Kindly post a comment.