Saturday, October 20, 2012

சென்னையில் கடும் மழை ! இயல்பு வாழ்க்கை பாதிப்பு !சென்னையில் கடந்த 2 நாள்களாகப் பெய்த மழையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனப் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்றன. இதனால் 30 நிமிடங்களில் செல்ல வேண்டிய இடத்துக்கு ஒன்றரை மணிக்கும் மேல்ó தாமதமாகச் செல்லும் நிலை ஏற்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

விட்டு, விட்டுப் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிக் குளம் போல் காட்சியளித்தது. அடையாறு, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை சிக்னல், திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, சாந்தோம் பாபநாசம் தெரு, மயிலாப்பூர் லஸ் சந்திப்பு, ஆழ்வார்பேட்டை, உஸ்மான்சாலை, பசுல்லா சாலை சந்திப்பு, எக்ஸ்பிரஸ் அவென்யு சாலை, எழும்பூர் ரயில் நிலையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ள பாந்தியன் சாலை, வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பாரிமுனை, ஓட்டேரி, பெரம்பூர், புரசைவாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. பல இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. அபிராமபுரத்தில் சாலையோரத்தில் மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் சுற்றுச்சுவர் இடிந்தது.

நகரின் பல இடங்களில் குப்பை அகற்றப்படாததால் அவற்றில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது.                                                                  

சாலைகள் சேதம்: மழை நீர் தேங்கியதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் கடும் சேதமடைந்துள்ளன.

குண்டும், குழியுமான சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டனர்.

பல இடங்களில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சாலை எது, பள்ளம் எது என்று தெரியாதபடி காட்சியளித்தன.                           

மழைநீர் வடிகால் பணிகளில் தொய்வு                            

சென்னை, அக். 19: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் சரிவர நடைபெறாததால் பிரதான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.                               

14 பேர் பலி: தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாகக் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இடி, மின்னல், மின்சாரம் தாக்கி என 14 பேருக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். சென்னையில் வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கி நிற்பதால் சாலைகளில் எங்கெங்கு பள்ளம் இருக்கிறது எனக் கண்டறிய முடியாமல் பலர் பள்ளத்தில் விழ நேரிடுகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகளில் மழையில் வாகனங்களைச் செலுத்த பெரிதும் அவதிப்பட்டனர்.       

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், சென்னையின் பிரதான சாலைகளான 100 அடி சாலை, அண்ணாசாலை, ஆர்க்காடு சாலை உட்பட பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மிதந்தன. மழைநீர் வெள்ளம் போல் தேங்கி இருப்பதால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கோயம்பேடு பஸ்நிலையம் முன்பு மழைநீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி இருந்தது. இதனால், எம்எம்டிஏ முதல் திருமங்கலம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தவிர, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோட்டூர்புரம், வடபழனி உள்பட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.                                           

மரங்கள் சாய்வு: கனமழையின் காரணமாகச் சென்னையில், எழும்பூர் உட்பட பல்வேறு இடங்களில் 6 மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் சாய்ந்தது குறித்து சென்னை மாநகராட்சியிடம் கேட்ட போது சரியான தகவல்கள் அளிக்க மறுத்துவிட்டனர்.                                                                                      

மழைநீர் வடிகால் பணிகள் தொய்வு: மழை காலத்திற்கு முன்பு மழைநீர் வடிகால் பணியை முடிக்காததே சாலைகளில் மழைநீர் தேங்குவதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. கோடம்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணி துவங்கி பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை அந்தப் பணி முடியவில்லை. இதுதவிர, மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளங்கள் பல்வேறு இடங்களில் தோண்டப்பட்டுள்ளன. அவ்வாறு தோண்டப்படும் மண் அனைத்தும் சாலைகளில் போடுவதால், சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாய் இருப்பதுடன், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கின்றன. இதுதவிர, அனைத்து இருசக்கர வாகன ஓட்டி சகதிகளில் சறுக்கி கீழே விழுகின்றனர்.                                                                                             

30 நிமிடத்திற்குள் மழைநீர் அகற்றப்படுமா?: மழைநீர் சாலைகளில் தேங்கினால் அதை 30 நிமிடத்திற்குள் அகற்ற வேண்டும் என வியாழக்கிழமை நடந்த மழைக்கால முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். ஆனால், சென்னையில் அனைத்து இடங்களிலும் வெள்ளிக்கிழமை முழங்கால் அளவுக்கு மேல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதனால், சாலைகளில் தேங்கும் தண்ணீரை விரைவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.                                                                                                              

நன்றி :- தினமணி, 20-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.