Saturday, October 20, 2012

மனமிருந்தால் மார்க்கமுண்டு - தினமணியில் ,இரா.க.சின்னப்பன்



இன்னும் 50 ஆண்டுகளில் தண்ணீருக்காக நாடுகளிடையே போர் மூளலாம் என்று பயப்படும் அளவுக்கு, நீரின் தேவை அதிகரித்திருக்கிறது. 

மக்களின் பயன்பாட்டுக்கான தேவை அதிகரித்திருப்பது ஒருபுறம் என்றால், விவசாயத் தேவைக்கான கட்டாயம் அதைவிட அதிகரித்திருக்கிறது.

இந்தியாவை நீர்வளம், நிலவளம் குறைந்த நாடு என்று கூறிவிட முடியாது. உலக நிலப்பரப்பில் 2.5% அளவும் நீர்வளத்தில் 4% அளவும் பெற்றுள்ளோம். உலக மக்கள் தொகை 700 கோடிக்கும் மேல். அதில் இந்திய மக்கள் தொகை சுமார் 121 கோடி. இது உலக அளவில் 17% ஆகும். மக்கள் தொகையில் சீனத்துக்கு அடுத்தும், நிலப்பரப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தும் இருக்கிறோம்.

உலகின் வருட சராசரி மழை அளவு சுமார் 840 மில்லி மீட்டர். இந்தியாவில் சராசரி மழை அளவு 1,150 மில்லி மீட்டர்.

உலகில் ஒரு நபருக்கு சராசரியாகக் கிடைக்கும் நீரின் அளவு 6,000 கன மீட்டர். ஆனால் இந்தியருக்குக் கிடைப்பது 2,000 கன மீட்டர்தான். அதிலும் தமிழ்நாட்டவருக்குக் கிடைப்பது 650 கன மீட்டர்தான்!

இந்தியாவில் 65% முதல் 70% வரையிலான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்தையே நம்பியிருக்கின்றனர். அதாவது நீரையும் நிலத்தையும் நம்பி வாழ்கின்றனர்.

ஒரு நபருக்கு ஓராண்டில் கிடைக்கும் நீரின் அளவு 1,000 கன மீட்டர் முதல் 1,700 கனமீட்டர் வரை இருந்தால் அங்கு நீர் பற்றாக்குறை "சில சமயங்களில்தான்' ஏற்படும். 1,000 கன மீட்டருக்கும் குறைந்தால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு உடல் ஆரோக்கியமும் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

கிடைக்கும் அளவு 500 கன மீட்டர் அல்லது அதற்கும் குறைவே என்றால் "வாழ்க்கையே கடினமாக' இருக்கும். 1,000 கன மீட்டர் அளவுதான் தண்ணீர் என்றாலே "தண்ணீர்த் தட்டுப்பாடு' என்பதற்கான அறிகுறி என்று உலக வங்கியும் சர்வதேச அமைப்புகளும் நிர்ணயித்துள்ளன. எனவே அங்கு நீர்வளத்தை மேம்படுத்த அரசு உடனடியாகக் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

விவசாயத்துக்கு நிலமும் நீரும் அவசியம். இதில் நிலப்பரப்பை மேலும் அதிகப்படுத்த முடியாது. இயற்கையில் என்ன கிடைத்ததோ அதுதான்; நீர் அளவை அதிகப்படுத்தலாம். காடுகளை வளர்த்தும் நதி நீரைத் தேக்கியும் வேறு வழிகளிலும் இதைச் செய்ய முடியும். இப்போதுள்ள நிலத்தில் பயிர்களைச் சுழற்சி முறையில் மாற்றுவதன் மூலமும் மேம்பட்ட சாகுபடி முறைகள், நீர்ப்பாசன வசதிகள் மூலம் உணவு உற்பத்தி அளவை 2 அல்லது 3 மடங்குகூட அதிகரிக்கச் செய்யலாம்.

நாட்டில் 350 லட்சம் எக்டேர் முதல் 400 லட்சம் எக்டேர் வரையிலான நிலம் தரிசாகவே கிடக்கிறது. நீர்வளத்தை மேம்படுத்தினால் இவற்றில் விவசாயம் செய்ய முடியும்.

ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதி காடாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் வனப்பகுதிகளின் மொத்த அளவு வெறும் 21%தான். வனவளம் கூடினால்தான் மழைப்பொழிவு அதிகரித்து நீர்வளம் பெருகும்.

நீர்வளத்தை இந்தியாவின் மிகப்பெரிய நதிகளின் வடிநிலப்பகுதிகளைக் கணக்கெடுத்து மதிப்பிட்டிருக்கிறார்கள். நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை அந்த நதியில் பெருக்கெடுக்கும் நீரின் மொத்த அளவே அதன் நீர்வளமாகும்.

இந்தியாவில் 20 பெரிய நதிநீர் வடிநிலப் பகுதிகள் உள்ளன. இவற்றில் 20 லட்சம் எக்டேருக்கும் மேல் ஆயக்கட்டுக் கொண்ட வடிநிலங்கள் 12, நடுத்தர மற்றும் சிறிய வடிநிலப்பகுதி 8 என்று தரம் பிரித்திருக்கிறார்கள்.

20 நதிநீர் வடிநிலப்பகுதிகளிலும் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 1869.70 லட்சம் எக்டேர் மீட்டர் என்று மத்திய தண்ணீர் வளக் கமிஷன் (சி.டபிள்யு.சி.) 1993-ல் கணக்கிட்டுள்ளது.

அதைப் பரிசீலித்த "தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை' நாட்டின் நீர்வளம் 1952.90 லட்சம் எக்டேர் மீட்டர் என்று 1999-இல் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறியது. ஒருங்கிணைந்த நீர் ஆதார வளர்ச்சித் திட்டங்களுக்கான தேசியக் கமிஷன் என்ற அமைப்பு இந்தக் கணக்கைப் போட்டிருந்தது.

நாட்டின் நீர்வளத்தை எந்த அளவு பயன்படுத்த முடியும் என்று தேசிய நீர்வளக் கமிஷன் ஆராய்ந்தது. இந்தியாவில் உள்ள 20 நதிநீர் வடிநிலப் பகுதிகளிலும் கிடைக்கும் நீரில் 35% தான் இப்போது பயன்படுத்தப்படுகிறது, 65% எதற்கும் பயன்படுத்தப்படாமல் கடலில் ஓடிக் கலக்கிறது என்று அது குறிப்பிட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக இப்படித்தான் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீரைக் கொண்டு 760 லட்சம் எக்டேரில் பாசனம் செய்து உணவு தானியச் சாகுபடியை அதிகப்படுத்த முடியும்.

இந்திய நதிகளை இணைப்பதன் மூலம் 410 லட்சம் எக்டேர் மீட்டர் நீர் கிடைக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். இதில் 250 லட்சம் எக்டேர் மீட்டர் நீர், நதியின் மேற்பரப்புகளுக்கும் 160 லட்சம் எக்டேர் மீட்டர் நீர் நிலத்தடிக்கும் கிடைக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் நிலத்தடியில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு எவ்வளவு என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் 1994-95-இல் மதிப்பிட்டது. 432 லட்சம் எக்டேர் மீட்டர் என்று அது அறிந்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளிலும் ஓடும் நீரின் அளவு 1,925.9 லட்சம் எக்டேர் மீட்டர். அதில் நிலத்தடி நீர் 432 லட்சம் எக்டேர் மீட்டர். மொத்தம் 2,386 லட்சம் எக்டேர் மீட்டர்.

ஆறு, குளம் மூலமாகப் பயன்படுத்தக் கூடிய நீர் 690 லட்சம் எக்டேர் மீட்டர். நிலத்தடி நீர் முலமாக 395.6 லட்சம் எக்டேர் மீட்டர்.

உலகில் கட்டப்பட்டிருக்கும் பெரிய அணைகளின் எண்ணிக்கை சுமார் 45,000. அதில் 46% சீனத்திலும் 14% அமெரிக்காவிலும் 9% இந்தியாவிலும் 6% ஜப்பானிலும் உள்ளன. இந்தியாவில் கட்டியுள்ள நீர்த்தேக்கங்கள், அணைகளின் அளவு குறைவு என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து நாம் அறிவது, இந்தியருக்கு ஆண்டு முழுக்கக் கிடைக்கும் சராசரி தண்ணீர் அளவு 1,450 கன மீட்டர்தான். ஆனால் சர்வதேச சராசரி 1,700 கன மீட்டர். அதிலும் பயன்படுத்தும் சராசரி நீரின் அளவு 660 கன மீட்டர்தான்.

எனவே நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு குடிநீருக்குத் திண்டாட வேண்டிய நிலை நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்படக்கூடும். உணவு உற்பத்தியும் வெகுவாக பாதிக்கும்.

மேற்கூறிய காரணங்களால் நதிநீர் இணைப்பை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இப்போதுள்ள அனைத்து நீர் நிலைகளையும் மேம்படுத்தி நீர்த் தேக்க அளவைப் பல மடங்காகப் பெருக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

நிலப்பரப்பை அதிகரிக்க முடியாது. ஆனால் நீர் வளத்தை 2 வழிகளில் மேம்படுத்த முடியும்.

1. இப்போது கிடைக்கும் நீரில் கடலில் கலக்கும் பெருமளவு நீரைத் தேக்கிவைத்துப் பயன்படுத்த முடியும்.

2. காடுகளை வளர்த்து, சுற்றுச்சூழலை மேம்படுத்தி மழை வளத்தைப் பெருக்கி, நீர்வளத்தை மேலும் பெருக்கிக்கொள்ள முடியும்.

கிடைக்கும் நீரையும் இப்போதுள்ள பாசனப்பகுதியை மேம்படுத்தியும், தண்ணீர் அதிகம் தேவைப்படாத பயிர்களைச் சுழற்சி முறையில் பயிரிட்டும் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் இரண்டையும் மேம்படுத்தலாம்.

நீர்வளத்தை மேம்படுத்த நதிகளை இணைப்பதுச் சிறந்த வழியாகும்.

மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் கேரள, கர்நாடக ஆறுகளை திசை திருப்பிக் கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்தலாம்.

நகரங்களில் கழிவுநீரைச் சுத்திகரித்துத் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கும் மரம் வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

கடலோரப் பகுதிகளில் உள்ள நகரங்களில் கடல் நீரைச் சுத்திகரித்து தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்குத் தரலாம்.

நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த மழைநீரைச் சேமிக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் உப்புச் சுவையுள்ள நீர்கூட குடிப்பதற்கு ஏற்றவகையில் உப்பு நீங்கப்பெற வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் நல்ல நீரில் விளையும் பயிர்களையும் சாகுபடி செய்ய முடியும்.

இவை எல்லாமே, மத்திய, மாநில அரசுகளுக்கு "உள்ள உறுதி' இருந்தால் சாத்தியமானவையே. வட இந்திய நதிகளைத் தென்னிந்திய நதிகளோடு இணைப்பது போன்றவற்றுக்குத் தொழில்நுட்பமும் அதிக முதலீடும் தேவைப்படும்.

 நிதி ஆதாரம் இப்போது அரசுகளுக்குப் பற்றாக்குறையாக இருப்பதால் முதலில் தென்னிந்தியாவில் - அதிலும் குறிப்பாக - தக்காணப் பீடபூமியில் உள்ள நதிகளை இணைப்பது, மேற்கு நோக்குப் பாயும் ஆறுகளை கிழக்காகத் திருப்பி நீரை அதிகம் தேக்குவது போன்றவற்றில் ஈடுபடலாம்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு. தீர்வில்லாத பிரச்னைகளே இல்லை. பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்கிற முனைப்பு வேண்டும். இனியும் அரசு மெத்தனமாக இருந்தால் தண்ணீர் பிரச்னை பூதாகரமாக வெடித்துவிடும்!

கட்டுரையாளர்: "தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் - கோவை' முன்னாள் டீன், மாநில திட்டக்குழு முன்னாள் உறுப்பினர்.                       

நன்றி :- தினமணி, 20-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.