Monday, October 29, 2012

இது புதுசு: ஆவாரம் பூ சாம்பார்... கற்றாழைக் குழம்பு! -ந.ஜீவா.


இதனைப் படிப்பவர்கள் சாலிக்கிராமத்திற்குச் சென்று அவரவர் அனுபவத்தை எழுதினால், நம் மூதாதையரின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ள ஓர் வாய்ப்பாக இருக்கும். இப்பொழுதும் இந்த மூலிகை உணவகம் நடத்தப் படுகின்றதா என்பதும் தெரிய வரும்.

டாக்டரிடம் சென்றால் மருந்து, மாத்திரைகளோடு "இந்த உணவைச் சாப்பிடுங்கள்... இதைச் சாப்பிடாதீர்கள்' என்று சொல்வார்கள். சில மருத்துவமுறைகளில் மருந்துகளைச் சாப்பிடும்போது பத்திய உணவு சாப்பிட வேண்டும் என்பார்கள். சென்னை சாலி கிராமத்தில் "இந்தியன் சித்த ஆயுர்வேத மருத்துவமனை'யை நடத்திவரும் டாக்டர் கே.வீரபாபு, தனது மருத்துவமனைக்குப் பக்கத்திலேயே ஓர் உணவகத்தையும் நடத்தி வருகிறார். நோய் தீர்க்கும் பணியில் ஒரு பகுதியாக அந்த மூலிகை உணவகத்தை அவர் நடத்தி வருகிறார்..

 ""எல்லா மனிதர்களுக்கும் விருப்பமானது உணவு. உணவே மருந்து என்பார்கள். நான் என்னிடம் வரும் நோயாளிக்கு மருந்து தருகிறேன். கூடவே உணவு மருந்தையும் தருகிறேன்'' என்கிறார் வீரபாபு.

 ""நான் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்எம்எஸ் படித்து டாக்டரானேன். என்னைப் போன்று ஐந்தரை ஆண்டுகள் படித்துவிட்டு வரும் சித்த மருத்துவர்களை நாடி மக்கள் அதிகமாக வருவதில்லை. இதற்குக் காரணம், தொலைக்காட்சிகளிலும், இதழ்களிலும் ஏகப்பட்ட விளம்பரங்களைச் செய்யும் சித்த மற்றும் ஆயுர்வேத டாக்டர்கள் இருப்பதுதான்.

 இப்படி விளம்பரம் செய்து மக்களை வலைவீசிப் பிடிப்பவர்கள் யாரென்று பார்த்தீர்கள் என்றால், அவர்களில் பெரும்பான்மையோர் முறையாகச் சித்த மருத்துவம் படித்திருக்கமாட்டார்கள். பரம்பரையாகச் சித்த மருத்துவத்தைச் செய்து வருபவர்களாக இருப்பார்கள். அனுபவ அறிவின் அடிப்படையில் மருத்துவம் பார்ப்பவர்களாக இருப்பார்கள். இவர்களைத் தவிர பல போலி டாக்டர்களும் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார்கள்.

 இந்த நிலையில் புதிதாகப் படித்துவிட்டு வந்த என்னைப் போன்ற மருத்துவர்களை நாடி வருகிறவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. மக்களைக் கவரும்விதத்தில் என்ன செய்யலாம்? என்று யோசித்தேன். எல்லாருடைய கவனமும் என் பக்கம் திரும்ப வேண்டும் என்று நினைத்தேன். அதேசமயம் அப்படிச் செய்யும் எதுவும் என்னுடைய மருத்துவத்துடன் தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன். அப்போது தோன்றிய ஐடியாதான் இந்த மூலிகை உணவகம்.

இப்போது இந்த மூலிகை உணவகத்திற்கு நல்ல ஆதரவு உள்ளது. இசைஞானி இளையராஜா என்னுடைய வாடிக்கையாளர். பாடலாசிரியர் அறிவுமதி, இசையமைப்பாளர் தினா, ஸ்ரீகாந்த் தேவா போன்றோரும் வாடிக்கையாளர்கள். இசைஞானி இல்லத்திற்கு எங்களுடைய உணவகத்தில் இருந்து பார்சல் சென்றுவிடும்'' என்கிறார் வீரபாபு.

 என்ன மூலிகை உணவுகள் இந்த உணவகத்தில் கிடைக்கும்? என்று கேட்டோம்.

 ""இட்லி, தோசை, சப்பாத்தி, ரசம், அப்பளம் எல்லாம் கிடைக்கும்'' என்ற அவர் நமது திகைப்பைப் பார்த்ததும்,"" ஆனால் இந்த எல்லா உணவுகளிலும் மூலிகை கலக்கப்பட்டிருக்கும். கேழ்வரகு இட்லி, முடக்கத்தான் தோசை, வல்லாரை தோசை, மணத்தக்காளி தோசை எல்லாம் கிடைக்கும். ஆவாரம் பூ சாம்பார் கிடைக்கும். மணத்தக்காளி ரசம், சோற்றுக் கற்றாழைக் குழம்பு என்று வித்தியாசமான உணவுகள் கிடைக்கும். இனிப்பு வகைகளில் கூட நாங்கள் மூலிகைகளைக் கலக்கிறோம். தினை அல்வா, முருங்கைக்காய் அல்வா, பனங்கருப்பட்டி பால்கோவா என்று இனிப்புகளையும் எங்கள் உணவகத்தில் பரிமாறுகிறோம்'' என்கிறார் வீரபாபு.

 பலவிதமான நோய்களுடன் வரும் மனிதர்களுக்கு உங்கள் உணவகத்தில் தரப்படும் மூலிகை உணவுகளால் ஒவ்வாமை ஏற்படாதா? என்று கேட்டோம்.

 ""மூலிகை உணவுகளால் ஒருபோதும் ஒவ்வாமை ஏற்படாது. சாதாரணமான மூலிகை மருந்துகளால் பக்க விளைவுகள் எவையும் ஏற்படாது. சித்த மருத்துவ மருந்துகள் என்று எடுத்துக் கொண்டால்,அவற்றில் சில எளிமையான மருந்துகளாக உள்ளன. சில சிக்கலான மருந்துகளாக உள்ளன.

உலோகங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருந்துகளைச் சிக்கலான மருந்துகள் எனலாம். அந்த மருந்துகளை உரியமுறையில் செய்யாவிட்டால், பக்கவிளைவுகள் ஏற்படும். மற்றபடி பிற மருந்துகளால் உடலுக்குத் தீங்கு ஏற்பட வாய்ப்பில்லை'' என்ற அவரிடம், மூலிகை உணவுகளால் உடலுக்கு என்ன நன்மை? என்றோம்.

 ""சர்க்கரை நோய் உள்ளவர்கள், மூல வியாதிக்காரர்கள் ஆவாரம்பூவை உட்கொள்ள வேண்டும். ஆனால் சாதாரணமாக ஆவாரம்பூவை உட்கொள்வது சிரமம். எனவே நாங்கள் ஆவாரம்பூ சாம்பாரைச் செய்கிறோம்.

முடக்குவாதத்திற்கு மருந்தாகப் பயன்படும் மூலிகை முடக்கத்தான் கீரை. நாங்கள் முடக்கத்தான் தோசைகளை எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தருகிறோம். வல்லாரை நினைவாற்றலை வளர்க்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால்தான் வல்லாரை தோசை வார்த்துப் பரிமாறுகிறோம்.

மணத்தக்காளிக் கீரை, பிரண்டை இலை இரண்டும் வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது. புதினாத் துவையலை எல்லாரும் பயன்படுத்துகிறோம். எங்களுடைய உணவகத்திலும் புதினாவுக்கு இடமுண்டு.

மல்லித் துவையல் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இப்படி எங்களுடைய உணவகத்தில் வந்து சாப்பிடுபவர்களின் நலத்திற்காகவே எல்லா உணவுப் பொருட்களையும் தயாரிக்கிறோம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடக் கூடாது. இதயநோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். எல்லாருக்கும் உகந்த உணவு வகைகளைத் தயாரித்து வழங்குகிறோம்'' என்கிறார் பெருமையுடன்,

 "மூலிகைக்கும், சென்னை நகரத்துக்கும் ரொம்ப தூரம். இங்கே மூலிகைகள் கிடைக்காது. உங்களுடைய மூலிகை உணவுகளைச் செய்வதற்கு மூலிகைகளுக்கு என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு, ""எங்களுடைய உணவகத்திற்குத் தேவையான மூலிகைகளை நாங்கள் திருநெல்வேலி, அருப்புக்கோட்டை, இராஜபாளையம் போன்ற ஊர்களிலிருந்து வரவழைக்கிறோம்'' என்கிறார்.

 மூலிகை உணவுகளைச் செய்ய எங்கே கற்றுக் கொண்டீர்கள்? என்று கேட்டோம்.

 ""நானே சுயமாகக் கற்றுக் கொண்டேன். ஆர்வம் இருந்தால் எதையும் கற்றுக் கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து பார்த்து நானே கற்றுக் கொண்டேன்'' என்கிறார் சிரிப்புடன்.

 உங்கள் மூலிகை உணவகத்தின் சிறப்பான அயிட்டம் எது? என்று கேட்டோம்.

 ""மூலிகை சூப்தான்'' என்கிறார் டக்கென்று.

 இஞ்சி, பூண்டு, சித்தரத்தை, அதிமதுரம் போன்ற பல மூலிகைப் பொருட்களைக் கொண்டு மூலிகை சூப்பைத் தயாரிக்கிறோம். இரண்டு நாள் காய்ச்சலாக இருக்கும் ஒருவர் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு எங்களுடைய மூலிகை சூப்பை அருந்தினால் காய்ச்சல் போய்விடும். சளி நீங்கிவிடும்'' என்கிறார் வீரபாபு.

 அருப்புக்கோட்டைதான் வீரபாபுவுக்குச் சொந்த ஊர். அருப்புக்கோட்டை, பாளையங்கோட்டை ஆகிய ஊர்களில் படித்திருக்கிறார்.

 ""சிறுநகரங்கள், கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எங்களுடைய உணவகத்திற்கு ஆர்வமாக வந்து சாப்பிடுகிறார்கள். ஏனென்றால் மூலிகை உணவுகளைப் பற்றி ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

 ஆனால் சென்னை போன்ற நகரத்தில் பிறந்து, நகரத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மூலிகை உணவுகளின் அருமை, பெருமைகள் தெரிவதில்லை.

அவர்களுக்கு ஒரு தடவைக்கு இரண்டு தடவைகள் மூலிகை உணவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது'' என்கிறார் வீரபாபு.

நன்றி :- தினமணி  Author: ந.ஜீவா

First Published: May 8, 2011 2:09 PM     Last Updated: Sep 20, 2012 3:32 AM

1 comments:

  1. மருத்துவர் திரு வீரபாபு அவர்களுக்கு நன்றி. சரியான முகவரியை தயவுசெய்து அனுப்பிவைக்கவும். நக்கீரன் வணக்கம். e mail: nakkeeran1964@gmail.com

    ReplyDelete

Kindly post a comment.