Saturday, October 27, 2012

வட இந்தியாவில் ஓர் சகாயம்,- அஷோக் கெம்கா ஹரியானா ஐ.ஏ.எஸ் ! -ஜெ. ராகவன்

ராபர்ட் வதேரா சொத்து மதிப்பு செய்தித் தொடர்பாக பரபரப்பாகப் பேசப்படுபவர் ஹரியாணா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா.

தொழிலதிபர் என்ற முறையில் ராபர்ட் வதேரா சுமார் 3.5 ஏக்கர் அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி (ரூ.7 கோடி) அதைப் பின்னர் டி.எல்.ஏப். என்னும் ரியல் எஸ்டேட் நிறுவத்துக்கு ரூ.58 கோடிக்கு விற்க முற்பட்டதாகவும் இதற்கு ஹரியாணா அரசு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவரவே இதை ரத்துச் செய்ததுடன், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் ஹரியாணா மாநில நிலநிர்வாகம் மற்றும் பத்திரப்பதிவுத்துறை தலைமை இயக்குநர் அசோக் கெம்கா.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த உடனேயே காங்கிரஸ் கட்சியினர் வரிந்து கட்டிக்கொண்டு, இதில் ராபர்ட் வதேராவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டனர். எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்த நிலையில் அசோக் கெம்கா அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

"நான் நிலநிர்வாகம் மற்றும் பத்திரப்பதிவுத்துறை தலைமை இயக்குநர் பதவியுடன், சிறப்பு ஆட்சியர் என்ற கூடுதல் பதவியையும் வகித்து வந்தேன். "சிறப்பு ஆட்சியர்' என்ற கூடுதல் பதவி எனது பணிமூப்பு அந்தஸ்துக்குக் கீழானது. எனவே அந்தப் பதவி எனக்கு வேண்டாம். அதிலிருந்து என்னை எடுத்துவிடுங்கள் என்றுதான் மாநில அரசிடம் சொன்னேன். ஆனால், அரசு என்னைப் பழிவாங்கிவிட்டது' என்கிறார் கெம்கா.

கெம்கா கேட்டுக்கொண்டதன் பேரிலேயே இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக ஹரியாணா மாநில அரசு கூறியது.

2004-ம் ஆண்டு அசோக் கெம்கா, பள்ளிக் கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது அவருக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து குறிப்பிட்ட பெயர்களைச் சொல்லி அந்த ஆசிரியர்களையெல்லாம் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்களாம். ஆனால், மாநில அரசின் நிர்பந்தத்துக்கு அவர் அடிபணியவில்லை. விளைவு, உடனடியாக அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதுபோல் அசோக் கெம்கா இதுவரை 40-முறைக்கு மேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கெம்காவின் குடும்பத்தினர், அவரது நண்பர்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள்?

""பொது வாழ்வில் மட்டுமல்ல; தனிப்பட்ட முறையிலும் நேர்மையையும், தூய்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அவருடைய ரத்தத்தில் ஊறிவிட்ட ஒன்று. எனக்குத் தெரிந்து இப்படி ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நான் பார்த்ததில்லை'' என்கிறார் கெம்காவின் நெருங்கிய நண்பரும் வழக்கறிஞருமான அனுபம் குப்தா.

""பள்ளி, கல்லூரி நாட்களிலேயே எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசக்கூடியவர் கெம்கா. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் நேர்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஏறக்குறைய 21 ஆண்டு பணிக்காலத்தில் பலமுறை இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் சென்ற இடத்தில் எல்லாம், நேர்மையுடனும் துணிச்சலுடன் அவர் செயலாற்றி வருவதே ஒரு சாதனைதான்'' என்கின்றனர் அவருடன் படித்த நண்பர்கள்.

""எனது கணவர் நேர்மையாகவும் துணிச்சலுடனும் செயல்படுவதாக மற்றவர்கள் கூறும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், வதேரா-டிஎல்எப் நிலபேர ஊழல் விவகாரம் வெளியானதிலிருந்து எனக்கு மிரட்டல் வருவதைப் பார்த்தால், வேலைக்குச் சென்ற கணவர், உயிருடன் வீடு திரும்புவாரா என்பதே கவலையாக உள்ளது'' என்கிறார் கெம்காவின் மனைவி ஜோதி.

நேர்மையான அதிகாரியான அசோக் கெம்கா, தனக்குக் கீழ் உள்ளவர்களும் உண்மை ஊழியராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் அப்படி எதிர்பார்ப்பதில் என்ன தவறு? நாட்டிற்கு இன்றையத் தேவை நேர்மையான அதிகாரிகளும், ஊழலற்ற நிர்வாகமும்தானே! கெம்காவின், நேர்மைக்கும், துணிச்சலுக்கும் தலைவணங்குகிறோம் என்கிறார்கள் மூத்த அதிகாரிகள் சிலர்.

"நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறேன் என்று அசோக் கெம்கா என்னிடம் கூறியபோது எனக்கு முதலில் சிரிப்புதான் வந்தது. லஞ்சம், ஊழல், ஆதாயம், அரசியல் நிர்பந்தம் என பல விஷயங்களில் திளைத்துப்போன அரசு நிர்வாகத்தில், எந்த ஒரு துறையிலும் அதிகாரிகளாக வருபவர்கள் முதலில் நேர்மையான முறையில் பணியைத் தொடங்குவார்கள். ஆனால், போகப்போக அரசு நிர்பந்தம் அதிகரிக்கவே, முதலில் இருந்த துடிப்பும், உற்சாகமும் குறைந்து அரசியல் தலையீடுகளுக்கு வளைந்து கொடுத்துவிடுவார்கள். அதாவது ஊழல் நிர்வாகத்துக்கு ஒத்துழைக்கும்படி ஒடுக்கப்படுவார்கள்.

ஆனால், பலமுறை பணியிடமாற்றம் செய்யப்பட்டபோதும் எதற்கும் அஞ்சாமல் நேர்மையாகச் செயல்பட்டு வந்துள்ளது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது மனஉறுதிக்கு எனது பாராட்டுகள். கெம்கா எனது பள்ளித் தோழர் மட்டுமல்ல; ஆயிரத்தில் ஒருவன். அவருக்கு பின்னே லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்'' என்கிறார் நண்பர் பிரவீண் ஜா. உண்மைதானே!                                                                                 


நன்றி :- தினமணி :- 27-10-2012





0 comments:

Post a Comment

Kindly post a comment.