Saturday, October 27, 2012

மூன்று ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 7 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தப்போகும் நிறுவனம் !


சென்னை, வில்லிவாக்கத்தில் சந்திரசேகரன் என்பவர்,  ஒரு கடையில் பட்டர் பிஸ்கட் பாக்கெட்டுக்கள் மூன்று வாங்கினார். ஒவ்வொன்றும் 13 ரூபாய் வீதம் 39 ரூபாய்க்குப் பில் போடப்பட்டது. அந்தத் தொகையைச் செலுத்தி பிஸ்கட் பாக்கெட்டுக்களை வாங்கிக் கொண்டு   வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

வீட்டிற்குச் சென்றபின் சந்திரசேகருக்குப் பிஸ்கட் பாக்கெட் ஒன்றின் விலை ரு.12/- என்று தெரிய வந்தது. மீண்டும் அதே கடைக்குச் சென்றார். அதிகமாகத் தன்னிடம் வாங்கிய 3 ரூபாயைத். திருப்பித் தருமாறு கேட்டார். கடைக்காரர் கொடுக்க மறுத்தார்.

சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு நீதிமன்றத்தில் சந்திரசேகரன் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நீதி மன்றத் தலைவர் ஆர். மோகன்தாஸ், உறுப்பினர் ஏ.தயாளன் ஆகியோர் முன்பு விசாரணக்கு வந்தது. விசாரணைக்குப் பின் அவர்கள் பின் வருமாறு  உத்தரவைப் பிறப்பித்தனர்.

“ புகாருக்கு உள்ளாகியுள்ள தனியார் நிறுவனம், நேர்மையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டதையும், சேவையில் குறைபாடு மற்றும் கடமை தவறுதல் ஆகியவற்றை மனுதாரராகிய சந்திரசேகரன் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளார். பிஸ்கட் பாக்கெட் உறையில் பிரிண்ட் செய்யப்பட்ட அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விடக் கூடுதல் தொகை வசூலித்ததன் மூலம், அந்தநிறுவனம் நேர்மையற்ற வர்த்தகம் செய்தது உறுதியாகி இருக்கிறது..

என்வே, கூடுதலாக வசூலித்த ரூ.3-யும், இழப்பீடாக ரூ. 7 ஆயிரத்தையும் தனியார் நிறுவனம் சந்திரசேகரனுக்கு மூன்று வாரத்துக்குள் கொடுக்க வேண்டும்.

காலம் தவறி வழங்கப்படும் பட்சத்தில், அந்த நாட்களுக்கு 9 ம்சதவிகிதம் வட்டி கணக்கிட்டுத் தர வேண்டும். இவ்வாறு அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.                                                                                                                      

தகவல் உதவி :- ஜனசக்தி, சனிக்கிழமை, அக்டோபர், 27.                                             

உபயோகிப்பாளர் உரிமையை விட்டுக்கொடுக்காமல், நுகர்வோர் குறை தீர்ப்பு நீதிமன்றத்திற்குச் சென்றதால்தான்  வில்லிவாக்கம் சந்திரசேகருக்கு நீதி கிடைத்தது. நாமும் நேர்மையாக இருந்து கொண்டு சந்திரசேகரைப்போன்ற போராளியாக அன்றாட வாழ்க்கையிலும் செயலாற்ற வேண்டும். இனி வில்லிவாக்கம் பகுதியில் உள்ள விற்பனையாளர்கள், அதிக விலைக்குப் பொருட்களை விற்பதற்குத் தயங்குவார்கள் அல்லவா ?

0 comments:

Post a Comment

Kindly post a comment.