Wednesday, October 17, 2012

சென்காகு தீவுகளை நோக்கி முன்னேறும் சீனப் போர்க்கப்பல்கள்: ஜப்பானில் பரபரப்பு



டோக்கியோ: சீனா மற்றும் ஜப்பான் நாடுகளிடையேயான சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை நோக்கிச் சீனப் போர்க்கப்பல்கள் முன்னேறி வருவதையடுத்து, ஜப்பானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே சென்காகு தீவுகள் குறித்த சர்ச்சை நிலவி வருகிறது. இரு நாடுகளும் அத்தீவு தங்களுக்கே சொந்தம் என கூறி வருகின்றன. இந்நிலையில், சென்காகு தீவுகளை விலைக்கு வாங்கி விட்டதாக ஜப்பான் திடீரென அறிவித்தது.

ஜப்பானின் இந்த அறிவிப்புக்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து இரு நாட்டுப் போர்க்கப்பல்களும் சென்காகு தீவுகள் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், சீனாவின் 7 போர்க்கப்பல்கள் சென்காகு தீவுகளை நோக்கி முன்னேறி வருவதால் ஜப்பானில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கப்பல்கள் அனைத்தும் பசிபிக் கடலில் போர்ப்பயிற்சியை முடித்துக்கொண்டு சீனா திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. எனினும் தற்போதைய சூழ்நிலையில், சீனாவின் இந்த செயல், ஜப்பானை கவலை கொள்ளச் செய்துள்ளது.

இதையடுத்து சென்காகு தீவுப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒகினவா மாகாணத்திலிருந்து 49 கி.மீ., தொலைவில் தற்போது இந்த கப்பல்கள் உள்ளன.

போர்க்கப்பல்கள், ஏவுகணைகளை அழிக்கும் கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை மீட்கும் கப்பல்கள் ஆகியவை இதில் அடங்கும். தற்போது சீன கப்பல்கள் சென்று கொண்டிருக்கும் பாதை பசிபிக் கடலில் இருந்து சீனாவுக்கு செல்லும் வழக்கமான பாதை என்ற போதிலும் தற்போதைய சூழலில் ஒருவித பதட்டத்தையே சீன கப்பல்கள் ஏற்படுத்தியுள்ளன.

நன்றி :-தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.