Tuesday, October 16, 2012

உயிருடன் விளையாடும் ஊழியர்கள்: மெழுகுவர்த்தி ஒளியில் "சரக்கு' விற்பனை !




தமிழகத்தில் நிலவி வரும் மின் தடையால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், டாஸ்மாக் ஊழியர்கள், சரக்கு விற்பனையை மேற்கொள்கின்றனர். ஆல்கஹால் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டதால், ஆபத்தை அறியாமல், ஊழியர்கள் செயல்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும், 6,880 டாஸ்மாக் கடைகள், காலை, 10:00 முதல், இரவு, 10:00 மணி வரை செயல்படுகின்றன. இதே நேரத்தில் தான், பார்களும் இயங்குகின்றன. தமிழகம் முழுவதும், பல இடங்களில், பகல் நேரங்களில், மூன்று மணி நேரமே மின் வினியோகம் செய்யப்படும் நிலையில், இரவில், நேரத்துக்கு ஒரு முறை, மின்தடை செய்யப்படுகிறது.இதனால், மாலை, 6:00 மணிக்கு மேல், டாஸ்மாக் விற்பனை பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான கடைகளில், மின் தடை நேரங்களில்,மெழுகுவர்த்தி துணையுடன், விற்பனை நடக்கிறது.

குறுகலான கடைகளில், சரக்கு பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியிலேயே, மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்படுகிறது.ஒரு சொட்டு, ஆல்கஹால் மெழுகுவர்த்தியில் பட்டாலும், பெரிய அளவில் தீ விபத்து ஏற்படும். கடைகளில் இந்நிலை என்றால், பார்களிலும், மெழுகுவர்த்தி துணையுடனே, சரக்கு வினியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து, டாஸ்மாக் சி.ஐ.டி.யூ., சங்கத்தின் மாநில செயலர் திருச்செல்வன் கூறியதாவது: மின்தடை அதிகரிப்பு காரணமாக, பெரும்பாலான டாஸ்மாக்கில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விற்பனை நடக்கிறது. இதில் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டாலும், பெரிய ஆபத்து நிகழ்ந்து விடும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே இப்பிரச்னையை, டாஸ்மாக் நிர்வாக இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டோம்.எனவே, தமிழக அரசு உடனடியாக, டாஸ்மாக் கடைகளுக்கு, எமர்ஜென்சிலைட் வழங்க வேண்டும். மின்தடை நேரங்களில், கள்ள நோட்டு மட்டுமின்றி, கிழிந்த நோட்டுகளும், அதிகளவில் வருகின்றன.

அதைத் தடுக்க, நிர்வாகத்தின் சார்பில், எவ்வித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வில்லை.இவ்வாறு, திருச்செல்வன் கூறினார்.
டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலர் பழனிபாரதி கூறியதாவது:

மெழுதுவர்த்தியை ஊழியர்கள் பயன்படுத்துவதால், சிறு பிரச்னை ஏற்பட்டாலும், பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே, இப்பிரச்னைக்கு, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், உடனடி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.