Tuesday, October 16, 2012

"ஓய்வறியா' ஓய்வுபெற்ற நீதிபதிகள்... ஜே.ராகவன்


பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்கரி நல்லதொரு யோசனையைத் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்து ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு எந்தப் பதவியும் கொடுக்கக்கூடாது என்பதுதான் அந்த யோசனை.

 உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வுபெறும் நீதிபதிகள் புதிய பொறுப்பு ஏற்பதற்கு முன் இரண்டாண்டுகள் இடைவெளி வேண்டும்.

 இல்லையெனில் நீதித்துறையில் மத்திய அரசு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நினைத்ததைச் சாதித்துக் கொள்ள முடியும்.

 இது தவறான அணுகுமுறையாகும். இப்படிச் செய்வதால் முக்கியமான வழக்குகளில் சுதந்திரமாகவோ, பாரபட்சமின்றியோ நீதியைப் பெறமுடியாது என்றும் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

 "தேசிய நீதிக்கமிஷன் நிறுவப்பட வேண்டும். அதில் நீதித்துறையின் பிரதிநிதி தவிர அரசு மற்றும் பொது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக இடம்பெற வேண்டும். அந்த அமைப்பின் மூலம் நீதிபதிகள் நியமனம் நடைபெற வேண்டும்.

 நீதிபதிகள் மற்றும் நீதித்துறையினர் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லியும் ஏற்கெனவே வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 ஒவ்வொரு மாநிலத்திலும் தகவல் ஆணையம் நிறுவப்பட வேண்டும். அதற்குப் பணியில் இருக்கும் அல்லது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களைக் கேட்டு ஏராளமான புகார் மனுக்கள் வருகின்றன. இவற்றை இரண்டு பிரதிநிதிகள் கொண்ட குழு பரிசீலித்து விசாரிக்க வேண்டும். இதில் ஒருவர் ஓய்வுபெற்ற நீதிபதியாகவோ அல்லது பணியில் இருக்கும் நீதிபதியாகவோ அல்லது 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வழக்குரைஞராகவோ இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

 இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நிதின் கட்கரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வுபெறும் நீதிபதிகளை உடனடியாகக் கமிஷன் தலைவராகவோ அல்லது தீர்ப்பாயத்தின் தலைவராகவோ நியமிப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார் குர்ஷித்.

 "அண்மைக் காலங்களில் உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெற்ற 90 நீதிபதிகளில் 18 பேர்  இதுபோன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டனர்.

 நீண்ட காலம் பணிபுரிந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதியோ அல்லது நீதிபதிகளோ ஒருபோதும் பதவிக்காகத் தரம் தாழ்ந்து போகமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் பணிபுரியும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கவே மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக நாடாளுமன்றத்தில் எங்களுக்கு போதிய பலம் இல்லாததால் அதைச் செயல்படுத்த முடியவில்லை' என்கிறார் சல்மான் குர்ஷித்.

 ஆனால், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான ஜே.எஸ்.வர்மாவின் கருத்தோ வேறு மாதிரியாக உள்ளது.

 "பணியிலிருந்து ஓய்வுபெறும் எந்த ஒரு நீதிபதியையும் உடனடியாக வேறு பதவிகளில் அமர்த்துவது சரியான நடைமுறை அல்ல.

 பதவி ஆசை காட்டினால் நீதிபதிகள் அரசின் மாய வலையில் வீழ்ந்துவிடுகிறார்கள். இதனால் பணி ஓய்வு பெறுவதற்குமுன் தனக்குக் கீழ் வரும் வழக்குகளில் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை உருவாகும். இது நீதித்துறையின் செயல்பாட்டுக்கு அச்சுறுத்தலாகிவிடும்.

 பணியிலிருந்து ஓய்வுபெறும் நீதிபதியை இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் கமிஷன் மற்றும் தீர்ப்பாயங்களில் தலைவர்களாக நியமிப்பதில் தவறு இல்லை' என்பது வர்மாவின் கருத்தாகும்.

 "சில சமயங்களில் பதவியில் இருக்கும் நீதிபதிகள் அரசின் ஏதாவது ஒரு குழுவில் தலைவராக நியமிக்கப்பட்டு விடுகின்றனர். இது கவலை அளிக்கும் விஷயம் மட்டுமல்ல; ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

 பதவியிலிருந்து ஓய்வுபெறும் நீதிபதிகளை உடனடியாக அரசுப் பதவிகளில் நியமனம் செய்வதைத் தடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்' என்பதும் ஜே.எஸ்.வர்மாவின் கருத்தாகும். ஓய்வுபெற்ற முன்னாள் மூத்த நீதிபதி ஒருவரின் கருத்தை நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது                          

நன்றி :-தினமணி, First Published : 16 October 2012 05:35 AM IST

0 comments:

Post a Comment

Kindly post a comment.