Tuesday, October 16, 2012

தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழின் வாழ்வுக்கும், வளத்துக்கும், செய்ய வேண்டியதைச் செய்தார்களா ? -தமிழண்னல் !



 தில்லித் தமிழ்ச் சங்கச் செயலர் முகுந்தன், தமிழண்ணல், பொன்னவைக்கோ

அண்மையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், இலக்கியச் செம்மல் பேராசிரியர் அ. சீநிவாசராகவனின் இலக்கியப் பங்களிப்புப் பற்றி ஓர் அருமையான கருத்தரங்கு நடைபெற்றது. சாகித்திய அகாதெமியும் காந்தி அருங்காட்சியகமும் இணைந்து நடத்தின. அதில் நிறைவுரையாற்றிய பேராசிரியர் தமிழண்ணல், தமிழின் இன்றைய நிலை பற்றிக் கூறுகையில், ""தலைமை வேண்டி தவிக்கும் தமிழ்'' என்று திரும்பத் திரும்பக் கூறி, இந்தத் தலைப்புப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார்.

பேராசிரியர் தமிழண்ணல், சென்னைக்கு வரவேண்டிய சாகித்திய அகாதெமியின் தென் மண்டல அலுவலகம், இங்கிருந்த ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாததால் பெங்களூருக்குப் போய்விட்டதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டார். "செம்மொழி மாநாடு நடத்தினோம். ஆனால், செம்மொழித் தகுதியைத் தக்கவைத்துக் கொள்ள என்ன செய்கின்றோம்? தமிழுக்குத் தலைமை இல்லை' என்று வேதனையோடு குறிப்பிட்டார்.

நம்மைச் சிந்திக்க, செயல்பட வைக்கும் தலைப்பு. ஒன்று - தமிழகத்தில் தமிழ் தலைமை நிலையில் இல்லை. இங்கு ஆட்சி மொழி தமிழ் என்றாலும், கற்பிக்கும் மொழியாக, அறிவியல் மொழியாக, நீதிமன்ற மொழியாகப் போற்றப்படும் மொழியாக தமிழ் இல்லை. மகாகவி பாரதியார், நெஞ்சு பொறுக்காமல்,

 "மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த

    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்''

 என்றந்தப் பேதை உணரத்தான் - ஆ

    இந்தவசையெனக் கெய்திட லாமோ?''

 என்றும்

 ""விதியே! விதியே! தமிழ்ச் சாதியை என்செயக் கருதி யிருக்கின் றாயடா?'' என்றும் கேட்டவைகள் இன்றைக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ""தணிப்பரிதாம் துன்பமிது தமிழ்த்தெருவில் தமிழ் தானில்லை'', என்று ஏங்கியதையும் எண்ணிப் பார்க்கின்றோம். மகாகவி பாரதி, ""தெருவெங்கும் தமிழ் முழக்கம்'' செய்யச் சொன்னதை ஏன் மறந்தோம்?

மற்றொன்று, இன்றைய சூழலில் தமிழைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்ய, முதன்மைப்படுத்த, உரிய உரிமைகளைப் பெற்றுத்தர, தமிழின் உள்ளடக்க இலக்கியங்களை உலகறியச் செய்ய, ஓர் உயர்ந்த, உயர்த்துகின்ற தலைமை இல்லை.

இருபதாம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் மொழி வறுமை, வெறுமை இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம் பயிற்று மொழியாக, பதவி மொழியாக, ஆட்சி மொழியாக இருந்ததால், நம்மவர்கள், ஆங்கிலம் கற்றனர். தாய்மொழியைப் புறந்தள்ளினர். ஆங்கிலம் கற்றதில் தவறில்லை. ஆனால், தமிழைத் தொலைத்ததில்தான் தமிழன் வீழ்ந்துபட்டான்.

அப்பொழுதும் தமிழுக்குத் தலைமை தேவைப்பட்டது. அன்றைய நிலையை மிக அருமையாக புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,

 ""தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்

  இமைதிற வாமல் இருந்த நிலையில்,

  தமிழகம், தமிழுக்குத் தரும் உயர் வளிக்கும்

  தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்

 இலகு பாரதிப் புலவன் தோன்றினான்          


 தமிழால், பாரதி தகுதி பெற்றதும்

 தமிழ்,  பாரதியால் தகுதி பெற்றதும்

 - என்று கூறுவது எண்ணத்தக்கது.

அண்ணல் காந்தியடிகள் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே, தாய்மொழியின் மாண்பை வலியுறுத்தினார். அதன் தாக்கம் தமிழகத்திலும் இருந்தது. தமிழகத்தில் நாட்டின் விடுதலைக்காகப் போரிட்ட தலைவர்கள் எல்லாம் தமிழ்ப்பற்றாளர்களாக இருந்தனர். அதில் தலைசிறந்து நின்றவர் மகாகவி பாரதியார். தமிழ் முழக்கம் செழிக்கச் செய்தார்.

நமது தாய்த் திருநாடு விடுதலைபெற்ற பிறகு தமிழ்க்கல்வி வந்தது. தொடக்கப் பள்ளிமுதல் உயர்நிலைப் பள்ளி வரை தமிழ்க் கல்வி வந்தது. கல்வி அமைச்சர்களாக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார், சி. சுப்பிரமணியம் போன்றவர்கள் செய்த தமிழ்க் கல்விப் பணியை மறக்க முடியாது.

எடுத்துக்காட்டாக, அந்தக் காலத்தில் பள்ளித் தமிழாசிரியர்களுக்கு மற்றைய ஆசிரியர்களைவிட மிகக் குறைவான ஊதியமே கொடுத்தனர். எல்லா ஆசிரியர்களையும் போன்று தமிழாசிரியர்களும் சமமாக ஊதியம் பெறச்செய்த பெருமை அவினாசிலிங்கம் செட்டியாரைச் சேரும்.

இது கற்பிக்கின்ற நிலையில் தமிழுக்கு ஏற்றம் தந்த செயல்; அவர் செய்த மற்றோர் அரிய செயல், தமிழில் கலைக்களஞ்சியம் வெளியிட்டது.

கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் கல்லூரிகளில் தமிழைக் கற்பிக்கும் மொழியாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒவ்வொரு பாடத்துக்கும் கலைச்சொற்களை உருவாக்கும் பணி நடைபெற்றது. முதலில் கலையியல் பாடங்களையும், பின்பு அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவப் பாடங்களையும் கற்பிப்பதெனத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்றன.

1967-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியிடமிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்திடம் ஆட்சி வந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, ""எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு'' என்று முரசு கொட்டி ஆட்சிக்கு வந்த திராவிடக் கழகங்களிடம்தான் ஆட்சி இருக்கின்றது. தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழின் வாழ்வுக்கும், வளத்துக்கும், வளர்ச்சிக்கும் செய்ய வேண்டிய தலைமைப் பொறுப்பை முறையாகவும், சரியாகவும் செய்திருந்தால் தமிழ் தலைமை ஏற்றிருக்கும்.

இந்தி மொழி மீது ஏற்பட்ட வெறுப்பு, ஆங்கில வெறியாக மாறியது. மழலையர் பள்ளி முதல் மேனிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வி வரை, தமிழே கற்காமல் ஆங்கில வழியில் பயிலும் கல்வியை உருவாக்கினார்கள். இதன் விளைவாக, கல்வி வாணிபமானது. தமிழக மாணவர்களுக்குத் தாய்மொழி தமிழும் தவறின்றிப் பேச, எழுதத் தெரியாது. தேசிய மொழியான இந்தியும் தெரியாது என்ற நிலை. ஆங்கில மொழியாவது சரியாகத் தெரியுமா என்பது கேள்விக்குரியது.

ஆட்சி மொழியாகவும் தமிழ் முழுமையாக வரவில்லை. இன்னும் ஆங்கில மொழியில் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. கையெழுத்தாவது தமிழில் போட்டால் போதும் என்ற நிலை. தமிழின் தலையெழுத்தைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

கீழிருந்து உயர்மட்டம் வரை தமிழ் கற்பிக்கும் மொழியாகாமல் அனைத்துப் பாடங்களுக்கும் தமிழ் நூல்கள் வெளிவராது.

தமிழ் இலக்கியங்களின் உள்ளடக்கத்தை உலக மொழிகளில் எல்லாம் எடுத்துரைக்காமல், புதுப்புது பொலிவான இலக்கியங்கள் படைக்காமல் தமிழுக்குக் கிடைத்த செம்மொழித் தகுதியைத் தக்கவைத்துக் கொள்ள இயலாது.

தமிழர்களிடம் மொழிப்பற்றும், இனப்பற்றும் இருக்கலாம். ஆனால், ஒற்றுமை இல்லை. ஓரினத்தை ஒற்றுமைப்படுத்துவது தாய்மொழியாக மட்டும்தான் இருக்க முடியும். வட இந்திய மக்களை, மலையாள, வங்காள மக்களைப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்.

நாடு விடுதலை பெற்றபிறகு தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்க மூன்று பெரிய சக்திகள் செயல்படுகின்றன. ஒன்று சாதி; இரண்டாவது மதம்; மூன்றாவது அரசியல் கட்சிகள். சில வேளைகளில் இந்த மூன்றும் இணைந்து கொள்ளும்; தமிழ் காணாமல் போகும். ஆதலால் தமிழர்கள் கிடைக்க மாட்டார்கள்.

நமது மக்களாட்சி தேர்தல் முறை மக்களைத் தொகுதி, தொகுதியாகப் பகுக்கின்றது; பிரிக்கின்றது. படித்தவர்கள்தான் சாதிக்கு, சமயத்துக்கு, அரசியல் கட்சிக்குத் தலைமை ஏற்கின்றனர். இவர்கள் மேடைத் தமிழில் முழங்குவார்கள். கூட்டணி அமைத்து, ஆட்சியைக் கைப்பற்ற முயல்வார்கள். அதுதான் அவர்களது நோக்கம்.

இன்னொரு பக்கம், திரைப்படங்கள், செய்தித்தாள்கள், இதழ்கள் ஆகியவற்றில் தமிழை மென்று துப்புவார்கள். தொலைக்காட்சிகள் நமது பண்பாட்டை, வாழ்க்கை விழுமங்களை, அழிக்க, ஒழிக்கத் தெரிந்தும் தெரியாமலும் செயல்படும். இப்படி ஒவ்வொரு துறையிலும் தமிழின் துகிலை உரிவார்கள், அவமானப்படுத்துவார்கள். இந்த நிலையில்தான் சாதி, சமயம், அரசியல் கட்சிகள் கடந்து, தமிழைக் கட்டிக் காக்க, பேணி வளர்க்கத் தனி வகைத் தலைமை காலத் தேவையாகின்றது.

தமிழுக்குத் தலைமை என்பது தனி ஒருவர் தலைமையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அது ஒரு கூட்டுத் தலைமையாகக்கூட இருக்கலாம்.

ஒரு காலத்தில் "தமிழ்ப் புலவர் குழு' என்று ஒன்றை அமைத்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அறிஞர்கள் இடம்பெற்றனர். அதற்கு ஒரு செல்வாக்கு இருந்தது. ஆனால், ஏனோ அது காலப்போக்கில் செயல்படவில்லை.

இப்பொழுது தமிழைப்போற்றும் மன்றங்கள் மகாகவி பாரதியார், கம்பர், வள்ளுவர், இளங்கோ, பாரதிதாசன் மற்றும் பல்வேறு அறிஞர்களின் பெயரில் அமைந்திருக்கின்றன. இவற்றின் கூட்டுச் சங்கமமாக சமீபத்தில் தில்லியில் நடந்த மாநாடு மொழியை மையமாகக்கொண்டு தமிழர்கள் ஒன்றுபட முடியுமென்பதற்கு எடுத்துக்காட்டு.

ஒரு காலத்தில் சைவ சமய மடங்கள் தமிழை வளர்த்தன. குன்றக்குடி அடிகளார் இதற்கொரு சான்று. கட்சி சார்பற்ற முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றவர்களும், தமிழ்ப் பேராசிரியப் பெருமக்களும் தமிழுக்குத் தொண்டு செய்தனர்; தமிழ் மக்களை இணைத்தனர்.

தமிழ்ப் பற்றென்பது பிற மொழிகளை வெறுப்பதல்ல; உலக மொழிகளை எல்லாம் உவந்து கற்று, பல்வேறு மொழி அறிவின் அடிப்படையில் தமிழ்மொழிக்கு வலிவும், வனப்பும் சேர்க்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்கின்றோம்.

தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், ""தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி வீழ்தல் நலம், போய் கடலில் வீழ்தல் நலம், பொலிதருமோ உடலுயிரே,'' என்கின்றார். நாம் சாதி, மத, கட்சி பேதங்களைக் கடந்து தமிழைக் காக்க வளர்க்க ஒன்றுசேர வேண்டும்.

ஊருக்கொரு பள்ளி இருப்பதைப் போன்று ஊருக்கொரு தமிழ் மன்றம் வேண்டும். அதில் அந்த ஊரிலுள்ள தமிழ்ப்பற்றாளர்கள் எல்லாம் ஒன்றுசேர வேண்டும். தமிழறிஞர்கள் தமிழ்ச் சங்கங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

தமிழகத்தில் எல்லா நிலை கல்வி நிலையங்களிலும் கற்பிக்கும் மொழியாய், அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாய், நீதிமன்றங்களில் வழக்காடும் நீதி கூறும் மொழியாய், எல்லா இடங்களிலும் பேச்சு மொழியாய் தமிழ் வர ஆவன செய்ய அரசைத் தூண்ட வேண்டும். ஒவ்வொருவரும் தமிழை வளமாக்க தங்கள் பங்களிப்பை நல்க வேண்டும். இதற்குத் தமிழியக்கம் வேண்டும்.

நமக்கு வேண்டிய அணுகுமுறையை அன்றே மகாகவி பாரதியார்,

   ""வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு''

 - என்று கூறியுள்ளார். இதோடு ""வாழ்க வையகம்'' என்பதைச் சேர்த்துக் கொள்ளலாம்.

நமது வாழ்க்கை வையகம் பயனுற அமைய,

தொடக்கம் தமிழாக இருக்க வேண்டும்.

தமிழ் தலைமை ஏற்கப் பாடுபடுவோம்;

தலை நிமிர்ந்து நிற்போம்.                                                                                     


தலைமை வேண்டித் தவிக்கும் தமிழ்

By மா.பா. குருசாமி

First Published : 16 October 2012 05:37 AM IST




0 comments:

Post a Comment

Kindly post a comment.